`விவசாயிகளை திருமணம் செய்ய மறுக்கிறார்கள்; எதாவது செய்யுங்க.!' – கர்நாடகா முதல்வரிடம் குமுறல்

Spread the love

திருமணத்திற்கு சரியான வரன் அமைவது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. குறைந்து வரும் பெண்களின் எண்ணிக்கை, குழந்தை பிறப்பு விகிதம் சரிவு போன்ற பல்வேறு பிரச்னைகள் இதற்கு காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் இப்போது ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அந்த ஒரு வாரிசுக்கு சிறப்பான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று கருதி நல்ல வரன் வேண்டும் என்று தேடும் பெற்றோர், விவசாயிகளை தங்களது மகளுக்கு வரனாக தேர்வு செய்வதில்லை.

இதனால் மகாராஷ்டிராவில் அதிகமான விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் இருந்தது. தற்போது அது போன்ற பிரச்னை கர்நாடகா இளைஞர்களுக்கும் வந்திருக்கிறது.

மாநில முதல்வர் டி.கே சிவக்குமார் பொதுமக்களின் குறையை கேட்பதற்காக மைசூர் மாவட்டத்திற்கு சென்று இருந்தார். அங்குள்ள பிரியபட்னா என்ற கிராமத்தில் ஒரு கூட்டம் நடந்தது. இதில் அதிக அளவில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொருவரும் தங்களது குறைகளை தெரிவித்தனர். அப்போது ஒரு விவசாயி எழுந்து, ”எங்களது கிராமங்களில் சொந்த நிலம் இருந்து விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. 35 முதல் 40 வயது வரையிலான அதிகமான இளைஞர்கள் திருமணம் செய்யாமல் இருக்கின்றனர்.

இதனால் பெண் கிடைக்காமல் சிலர் தற்கொலையும் செய்துள்ளனர். திருமணம் செய்து கொள்ள பெண்கள் வேண்டும். இதற்கு எங்களுக்கு உதவுமாறு முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன். சொந்த வீடு, நிலம் இருந்தும், எங்களுக்கு மணமகள் கிடைக்கவில்லை, நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும், இது லட்சக்கணக்கான உயிர்களின் கேள்வி. அனைவருக்கும் உணவு அளிக்கும் விவசாயிக்கு யாரும் பெண் கொடுக்க மறுக்கின்றனர்.

அரசு, தனியார் நிறுவனம் அல்லது பிற சம்பளம் தரும் வேலைகளில் இருப்பவர்களையே மணப்பெண் வீட்டார் அதிகம் விரும்புவதால், விவசாயிகள் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றனர்” தெரிவித்தார்.

இந்தக் கோரிக்கை சிவகுமாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகத் தோன்றினாலும், இக்கவலை மாநில அளவில் ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், குனிகல் தொகுதி எம்.எல்.ஏ.வான எச்.டி. ரங்கநாத், அப்போதைய முதல்வர் சித்தராமையாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் விவசாயிகளைத் திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

துமகூரு மாவட்டத்தின் குனிகல் தொகுதி எம்.எல்.ஏ.ரங்கநாத், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், கிராமங்களில் வசித்து விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட ஆண்களைத் திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்குச் சிறப்புப் படி மற்றும் சிறப்பு அந்தஸ்து ஆகியவற்றை அறிவிக்குமாறு அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆண்களைத் திருமணம் செய்துகொள்ளப் பல பெண்கள் முன்வருவதில்லை என்றும், இதனால் 30 வயதைக் கடந்தும் பல விவசாயிகள் திருமணம் செய்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *