விவேக் சார் இருந்திருந்தால் நான் எப்பவோ இயக்குநர் ஆகியிருப்பேன்! – உருகும் கிளி ராமச்சந்திரன். vivek’s comedy team actor kili ramachandran turns director. his interivew exclusively

Spread the love

நடிகர் விவேக் உடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்திற்கு ‘வாழ்க்கையே போராட்டம்’ என்று தலைப்பு வைத்திருக்கின்றனர். இது ஓர் அரசியல் சட்டயர் ஜானர். இந்தப் படத்தில் செந்தில், பாவா லட்சுமணன், சுப்பராஜ், பேரரசு, சுப்பிரமணிய சிவா எனப் பலரும் நடிக்கின்றனர்.

சென்னையில் நடந்த இதன் படப்பூஜைக்குக்கூட இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, முத்துக்காளை, சுப்பராஜ், ஹீரோயின் ரெபேக்கா எனப் பலரும் வந்து வாழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு, “இந்த படத்தின் கதை மிக நல்ல கதை, மக்களுக்குத் தேவையான ஓர் அரசியல் படம். தற்போதைய காலக்கட்டத்தில் ஒரு குடும்பப் படத்திற்கு மக்கள் எப்படி ஆதரவு கொடுக்கிறார்களோ, அதுபோல் அரசியல் படங்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும்.”‘ என்று பேசினார். அதைப் போல, இயக்குநரும் நடிகருமான சுப்பிரமணிய சிவா, ”சில கலைஞர்கள் வாய்ப்பு தேடாமல், தங்களுக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்வார்கள், அப்படித்தான் ராமச்சந்திரன் இன்று இயக்குநராக உயர்ந்திருக்கிறார்” என்கிறார். இந்நிலையில் இயக்குநர் ஆனது பற்றி ராமச்சந்திரனிடம் பேசினோம்.

சுப்பிரமணிய சிவா

சுப்பிரமணிய சிவா

“ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நடிகர் ஆகணும்னு சென்னைக்கு வந்தேன். நடிகர்கள்லேயே கொஞ்சம் பெரிய நடிகராகணும். அதன் பிறகு டைரக்டர் ஆகணும்னு நினைச்சேன். அதன்படி பெரிய நடிகர்களோடு நடிச்சு, நானும் எல்லோர் மனசுலேயும் இடம்பிடிச்சிட்டேன். இப்ப மத்தவங்களுக்கும் வேலை கொடுக்கும் அளவுக்கு டைரக்டர் பொறுப்பையும் கையில் எடுத்துருக்கேன். ரெண்டு வருஷதுக்கு முன்னாடியே முழுக்கதையும் ரெடியாகிடுச்சு. காமெடி நடிகர் அண்ணன் செந்தில் முக்கியமான ஒரு கேரக்டர்ல நடிக்கிறார். இந்தக் கதையை அவர்கிட்ட சொல்லி நடிக்க கேட்டதும் சந்தோஷமாக நடிக்கறேன்னு சொல்லி வந்தார். படத்தின் இசையமைப்பாளர் வேலன் சகாதேவனையும் எனக்கு அவர்தான் அறிமுகம் செய்து வச்சார். கையோடு 5 பாடல்களையும் போட்டுக் கொடுத்துட்டார்.

சக நடிகர்களுடன்..

சக நடிகர்களுடன்..

நிறைய தயாரிப்பாளர்கள்கிட்ட இந்தக் கதையை சொன்னேன். எதுவும் செட் ஆகலை. அப்புறம் எஸ்.கே.ஏ.அசோக் குமார் சார் தயாரிப்பாளராக வந்தார். அதன் பிறகு மளமளனு மத்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாம் கிடைச்சாங்க. திடீர்னு தான் படப்பூஜை நடத்தினோம். அரசியல் நையாண்டியோட கலகலப்பான படமாக கொண்டு வர்றேன். எங்க அப்பா அரசியல்வாதி. காங்கிரஸ்ல இருந்தாங்க. அதனால நானும் தேர்தல் பிரசாரத்துக்கு ஓட்டுக் கேட்டு போயிருக்கேன். அங்க பார்த்த, பாதித்த அனுபவங்களை எல்லாம் திரைக்கதையாக்கியிருக்கேன். எல்லா அரசியல்வாதிகளிடமும் பழகியிருக்கேன். அதைப் போல நடிகர்கள்கிட்ட எல்லா அரசியல்வாதிகளுமே அன்பாகத்தான் இருப்பாங்க. கடந்த தேர்தல்ல அதிமுகவுக்கு வேலை செய்தேன். ஆனாலும், திமுக பிரமுகர்களும் என்கிட்ட அன்பாகத்தான் இருப்பாங்க.

படப்பூஜையில்..

படப்பூஜையில்..

இத்தனை வருஷ அனுபவத்தில் ஒரு விஷயம் சொல்லிக்கறேன் சார். நிரந்திரமில்லாத இந்த உலகத்துல நிரந்தமாயிருக்க போராட்டிட்டு இருக்காங்க. நாம செய்த புண்ணியங்கள்தான் நமக்கு உதவும். எல்லோரும் அன்பாக இருக்கணும். இருக்கற வரைக்கும் அடுத்தவனுக்கு கெடுதல் செய்யாமல், உதவி செய்து வாழ்ந்தாலே பெரிய சாதனை தான். கொரோனோ காலகட்டத்துல எல்லாருமே சாப்பாடுக்கு கஷ்டப்பட்டோம். அந்த சமயத்துல எனக்கு வங்கி கடனுதவி கிடைச்சு கார் வாங்கினேன். கடவுள் அப்படியொரு ஆசீர்வாதத்தைக் கொடுத்தார். இன்னும் ரெண்டு மாசத்துல கார் கடனும் அடைஞ்சிடும்.

நடிகர் விவேக்

நடிகர் விவேக்

இப்ப சுந்தர்.சி.ஹீரோவாக நடிக்கும் படம் உட்பட சில படங்கள்ல நடிச்சிட்டிருக்கேன். நடிப்பையும் ஒரு பக்கம் தொடர்வேன். இயக்குநர் ஆன இந்த தருணத்துல விவேக் சாரையும் ரொம்ப மிஸ் பண்றேன். எனக்கு ரொம்ப பக்க பலமாக இருந்தவர் அவர். அவர் உசுரோடு இருந்திருந்தா எப்பவோ டைரக்டர் ஆகியிருப்பேன்.” என நெகிழ்கிறார் கிளி ராமச்சந்திரன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *