'வீடே நூலகம்' நூலகர் இல்லா இலவச நூலகம் அமைத்த திருச்சி யோகா மாஸ்டர் – 30 ஆண்டு பழம்பொருள் காட்சியகம்

Spread the love

நம் சமூகத்தின் ஆகப்பெரும் செல்வம் கல்வி. மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம். ஒருவரின் செல்வத்தையோ, சொத்தையோ அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச் செல்வதைக் காட்டிலும், அறிவைக் கடத்துவதற்கு புத்தகங்களால் மட்டும்தான் முடியும். இன்றைக்கு டிஜிட்டல் யுகத்தில் புத்தக வாசிப்பு என்பது குறைந்து வருகிறது.

வீட்டில் இருக்கின்ற பழைய புத்தகங்களைத் தூக்கிப்போட்டு விட்டு இடத்தை சுத்தம் செய்கின்ற பலருக்கு மத்தியில் ,தான் வாழும் வீடு முழுக்க புத்தகமாய் அடுக்கி வைத்திருக்கிறார் ஒருவர். அதோடு 30 ஆண்டுகளாய் தான் சேகரித்த பழங்காலப் புழங்குப் பொருள்களையும் காட்சிப்படுத்தி வைத்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியில் வாழ்ந்து வருகிறார் யோகா விஜயகுமார். அடிப்படையில் யோகா ஆசிரியரான இவருக்கு புத்தகங்களின் மீது அளப்பரிய காதல் உண்டு. இவரின் வீட்டுக்கு வெளியே பூனை நாய்களுக்கு தண்ணீர் தொட்டியும், பறவைகளுக்கு கூடுகளும், பாதசாரிகளுக்கு பானையில் குடிநீரும் எப்போதும் உண்டு.

வீட்டின் நுழைவாயிலில் இருந்து சமையலறை வரை புத்தகங்களால் வீட்டை அலங்கரித்துள்ளார். சட்டம், இலக்கியம், வரலாறு, ஆன்மீகம் என்று தனித்தனியாக அடுக்கி வைத்துள்ளார். பல்வேறு கல்லூரி மாணவர்கள் இந்த நூலகத்தை பார்வையிட்டு பயன்படுத்தி வருகின்றனர். ‘நூலகர் இல்லாத இலவச நூலகமாக ‘ இந்த இடம் செயல்பட்டு வருகிறது.

இதற்கு மத்தியில் பழங்காலப் புழங்குப் பொருள்கள் வரிசை கட்டி காட்சியளிக்கின்றன. உழவுப் பொருள்கள் தொடங்கி ,அளவைப் பொருள்கள் வரை காண்பதற்கு ஆச்சரியம் அளிக்கின்றது .அந்தக் காலத்திற்கு பயணம் செய்து வந்ததைப் போல சிலிர்ப்பு ஏற்படுகின்றது. பாடப்புத்தகத்தில் படித்தவற்றைத் தொட்டு உணரும் போது பண்பாட்டின் செழுமைப் புலப்படுகின்றது. ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கின்றது.

ஒரு சமூகம் எவ்வாறு நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இந்த இடம் அமைந்துள்ளது. வீட்டின் மூலை முடுக்கெல்லாம் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் பொருள்களைக் காணும் போது நாம் எவற்றையெல்லாம் வாழ்வியலில் இழந்திருக்கிறோம் என்பது புலப்படுகின்றது.

இந்த பழங்காலப் புழங்குப் பொருள்களின் காட்சியகத்தில் நாணயங்கள், பணத்தாள்கள், தபால் தலைகள், கைக்கடிகாரம், இசைக்கருவிகள், பருவ இதழ்கள், உழவு கருவிகள், விளக்குகள், கல், மண், இரும்பு, பித்தளை, வெண்கலம் ,அலுமினியம், எவர்சில்வர் சேகரிப்புகள், ரேடியோக்கள் ,பாட்டில்கள், டின் பாக்ஸ்கள் போன்றவை உள்ளன.

மிக நேர்த்தியான முறையில் காலவரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நாகரிகத்தின் வளர்ச்சியில் வரலாறைக் கைவிடும் சமூகமாக நாம் இருக்கக் கூடாது. நம்முடைய வாழ்வியல் கூறுகளை அடுத்தத் தலைமுறைக்குக் கடக்கும் மனிதர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

இது குறித்து யோகா விஜயகுமார் கூறுகையில் , ” அனைத்து உயிர்களுக்கும் என்னால் இயன்ற பசிப்பிணியைப் போக்கி வருகின்றேன். விளையாட்டாக இந்த செயலில் இறங்கியது பின்னாளில் முழுமூச்சாக மாறியது. பொதுவாக வீடுகளில் புத்தகங்கள் ஓரமாக ஒரு இடத்தில் இருக்கும் .ஆனால் ,நாம் ஓரமாக இருந்து கொண்டு புத்தகங்களுக்கு அதிக இடம் அளித்தால் என்ன என்று தோன்றியது.

பிறகுதான் வீட்டையே நூலகமாக மாற்றும் எண்ணம் வந்தது. என் மனைவி, மகளின் உதவியுடன் நூலகர் இல்லாத இலவச நூலகமாக உருவாக்கியுள்ளேன். இவற்றையெல்லாம் டிஜிட்டல் முறைப்படி நவீனப்படுத்தும் செயல்களில் இறங்கியுள்ளேன். பல்வேறு கல்லூரி மாணவர்கள் வந்து குறிப்பு எடுத்து செல்கின்றனர். இந்த நூலகத்தில் அனைத்து வகையான நூல்களும் இடம்பெறும் வகையில் அமைத்துள்ளேன்.

இத்துடன், பழங்காலப் பொருள்களையும் சேகரிக்கும் பழக்கம் எனக்கு நீண்ட காலமாக இருந்து வந்தது. என்னுடைய 30 ஆண்டுகால சேமிப்புப் பொருள்களைக் காட்சிப்படுத்தியுள்ளேன். இதனை பார்வையிடும் பலருக்கு பெரும்பாலான பொருள்களை முதன்முறைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.

நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த முறையை உணரும்போது வியப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு பொருளுக்கு பின்னாலும் ஒரு அறிவியலும் வரலாறும் இருக்கிறது. இதை அனைவரும் இலவசமாக பார்வையிடும் வகையில் அமைத்துள்ளேன் .என் காலத்திற்குப் பிறகு இதை யார் பராமரிப்பார்கள் என தெரியவில்லை, என் உயிர் இருக்கும் வரை இதனைப் பாதுகாப்பேன்” என்கிறார்.

இப்படி வரலாற்றின் மீது ஆர்வம் கொண்ட யோகா விஜயகுமார், 50க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். சமூக செயற்பாட்டாளராக விளங்கி வரும் இவர் மனைவி மகளுடன் இணைந்து ,இதுவரை உரிமை கோரப்படாத 100 – க்கும் அதிகமான உடலை அடக்கம் செய்துள்ளார்.

இதற்காக 2026 ஆம் ஆண்டு ஆளுநரிடம் விருது, 2023 ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் . இதுவரை 25 முறை ரத்ததானம் வழங்கியுள்ளார். உயிர் பிரிந்த பிறகு வீட்டில் படமாய் இருப்பதை விட பாடமாய் இருக்க வேண்டும் என விரும்பி, தன் உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக பதிவு செய்துள்ளார்.

‘தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும் ‘ என்பதைப் போல, அன்றாடம் புதிது புதிதான செயல்பாடுகளைச் செய்து வரும் மனிதர்களை காலமும் மறப்பதில்லை. மனிதனாய் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது என்பதற்கு சான்றாய் வாழ்ந்து வரும் யோகா. விஜயகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *