வெற்றி யாருக்கு? தாராபுரம் தொகுதி 2வது நாள் கள ஆய்வில் “ஒன்இந்தியாதமிழ்” கண்டறிந்த உண்மைகள்! | Who will win in Dharapuram constituency? Part 2 of the opinion poll

Spread the love

Tamilnadu

oi-Oneindia Staff

தாராபுரம்: இடைத் தேர்தல் நடைபெறும் தாராபுரம் தொகுதியில் ஒன்இந்தியாதமிழ் குழு கண்டறிந்த தகவல்களை நேற்று உங்களோடு பகிர்ந்திருந்தோம். இரண்டாவது நாளாக நடத்திய கள ஆய்வில் தெரிந்த விஷயங்களை இதோ இந்த கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறோம்.

தாராபுரம் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி இருப்பதையும், தவெகவை மூன்றாவது ஆப்ஷனாக மக்கள் கருதுவதையும் நேற்றைய கட்டுரையில் சொல்லியிருந்தோம். இளைஞர்கள் பேச மறுத்ததால் அவர்கள் மனநிலையில் முதல் நாளில் அறிய முடியவில்லை என்பதையும் பதிவு செய்திருந்தோம். மதுராந்தகத்தில் ஒன்இந்தியாதமிழ் கள ஆய்வு செய்தபோது, இளைஞர்களும், இளம் பெண்களும் தவெகவிற்கு ஆதரவு தந்திருந்தனர். ஆனால் தாராபுரத்தில் அவ்வளவு எளிதாக அவர்கள் வாய் திறக்கவில்லை. இருப்பினும், விக்ரமாதித்தனை பிடித்த வேதாளம் போல நாம் இரண்டாவது நாளாக இளைஞர்களை அணுகினோம்.

Dharapuram by election

அப்போது நம்மிடம் பேசிய இளம் பெண்கள், இளைஞர்கள்கள் ஆதரவு 80 சதவீதம் அளவுக்கு தவெகவிற்குதான் இருப்பதை அறிந்துகொண்டோம். மற்ற இளம் தலைமுறை திமுகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தது. ஆனால் இளைஞர்களில் ஒருவர் கூட அதிமுகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை மணியாகும்.

இதில் இன்னொரு சுவாரசியமும் நடந்தது. நம்மிடம் பேசியதில், இளம் பெண்கள் மட்டுமில்லை, திருமணமாகி 40 வயதுக்குள் இருக்கும் பெண்களில் பெரும்பகுதியினர் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். என்ன காரணம் என்று கேட்டதற்கு அவர்களிடம் தெளிவான பதில் இல்லை. விஜய் முகத்திற்காக ஓட்டுப் போடுகிறோம் என்று மட்டும் தெரிவித்தனர். 90ஸ்களில் விஜய், ரசிகன், பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது இளம் பெண்கள் ஆதரவை பெருவாரியாக பெற்றிருந்தார். அவர்களுக்கு இப்போது திருமணமாகியிருக்கலாம், குழந்தைகள் அனிருத், சிவகார்த்திகேயன், ரசிகர்களாக கூட மாறியிருக்கலாம். ஆனால் அந்த பெண்கள், விஜய் ரசிகர்களாகவே தொடர்கிறார்கள் என்பது மைக் இல்லாமல் பேசிப் பார்த்தபோது புரிந்த உண்மை.

திமுக அல்லது அதிமுகவுக்கு ஆதரவாக பேசியவர்கள் அதற்கான காரணகாரியங்களை எடுத்துரைத்து பேசினர். தவெக ஆதரவாளர்கள் மேம்போக்கான கருத்துக்களை மட்டுமே கூறினர். திமுக ஆதரவாக பேசிய 40 வயதுள்ள ஒரு நபர், தவெக ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை, திமுக கொண்டுவந்த திட்டங்களைத்தானே தொடர்கிறார்கள். இவர்களுக்கு எந்த திறமையும் இல்லை என்று தனது வாதத்தை எடுத்து வைத்தார்.

மற்றொரு சுவாரசியம் தாராபுரம் தொகுதி கிராமத்து பாட்டிமார்கள்தான். “ஆமா.. நான் யாருக்கு ஓட்டுப்போடுவேன்னு உங்களுக்கு ஏன் சொல்லனும். அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்..” என்று.. ஒன்றல்ல, இரண்டல்ல.. பல பாட்டிமார்கள் கெத்தாக சொல்லி நம்மை பதற வைத்தார்கள். ஜனநாயக உரிமை பற்றியெல்லாம் அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறதே என்று பெருமிதத்தோடு தொகுதியை விட்டு கிளம்பினோம். மக்கள் தெரிவித்த முழு கருத்துக்களும், இன்று, அக்டோபர் 2ம் தேதி, இரவு 7 மணிக்கு மேல் உங்கள் “ஒன்இந்தியாதமிழ்” யூடியூப் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது, காணத்தவறாதீர்கள்.

தாராபுரம் வேட்பாளர்கள் விவரம்:

1) தவெக-சத்யபாமா

2) திமுக-சுகன்யா

3) அதிமுக-பானுமதி

4) இந்திய கம்யூனிஸ்ட்-லட்சுமணன்

5) நாம் தமிழர்-கார்த்திகா

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *