வெள்ளிக்கிழமை சம்பிரதாயத்தைக் கைவிட்டாரா? வேட்டி சட்டைக்கு GOOD BYE சொன்ன விஜய்? – Kumudam

Spread the love

முதலமைச்சர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பட்டு வேட்டி, பட்டு சட்டையில் தலைமைச் செயலகத்திற்கு வந்து கொண்டிருந்த நிலையில், இன்று மதுராந்தகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரத்திலும், வெள்ளிக்கிழமையான இன்று பட்டு வேட்டி, பட்டு சட்டையுடன் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக பேண்ட், சட்டையுடன் வந்திருப்பது, ஒரு வேளை வெள்ளிக்கிழமை சம்பிரதாயத்தைக் கைவிட்டாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

முதல்வர் விஜய்யின் வெள்ளிக்கிழமை சென்டிமென்ட் பின்னணியில் இருப்பது ஃபேஷனா? சென்டிமென்டா? ஜோதிடமா?

ஆடி மாதம், அதிலும் வெள்ளிக்கிழமை என்றால் அம்மன் டாபிக் என்பதையும் தாண்டி, “வெள்ளிக்கிழமை என்றாலே மினுமினு பட்டில் மின்னலாக முதலமைச்சர் விஜய் உலா வருவது ஃபேஷனா? இல்லை ஜோதிட சென்டிமென்டா?” என்று முதலமைச்சரின் வெள்ளிக்கிழமை சென்டிமென்ட் குறித்துதான் அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருந்தது.

ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் பளிச்சென்று பட்டு வேட்டி, பட்டு சட்டையுடன் ஆஜராகி வருகிறார் முதலமைச்சர் விஜய். தமிழ்நாட்டின் தேர்தல் பிரசாரத்தின்போது வெள்ளைச் சட்டை மற்றும் சந்தன நிற பேண்ட் லுக்கில் சுற்றி வந்த விஜய், முதலமைச்சராகப் பதவியேற்றபோது யாரும் எதிர்பாராத வகையில் தனது நெற்றியில் அரகஜா திலகம் இட்டுக்கொண்டு, கோட் சூட் லுக்கில் குயிக் சேஞ்சுடன் தோன்றினார்.

அதற்கு நேர்மாறாக, தற்போது எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் பட்டு வேட்டி, சட்டையுடன் தலைமைச் செயலகத்திற்கு வந்து கொண்டிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதோடு, அதற்கான காரணம் என்ன என்பது சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. பொதுவாகவே முதலமைச்சர் பதவியில் இருப்பவர்களின் பேச்சு, செயல்பாடுகள், திட்டங்கள் மட்டுமல்லாமல், அவர்களின் உடைத் தேர்வுகளும் மக்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கமான ஒன்று.

மே 10-ஆம் தேதி கருப்பு நிற கோட் சூட்டில் மாஸான லுக்கில் பொறுப்பேற்ற விஜய், அதன் பின்னர் மே 29-ஆம் தேதி பட்டு வேட்டி, சட்டையுடன் மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமியின் இல்ல விழாவில் பங்கேற்றுவிட்டு, அப்படியே தலைமைச் செயலகம் சென்றார். அன்று முதல், வாரத்தில் ஒருநாள், அதுவும் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேட்டி, சட்டையுடன் அவர் தலைமைச் செயலகத்திற்கு வருவதுதான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சென்னையில் கடந்த 17-ஆம் தேதி சமூக நீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டபோதும் முதலமைச்சர் விஜய் பட்டு வேட்டி, சட்டையுடன் தோன்றினார். அதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் வெள்ளிக்கிழமை என்பதால் பட்டு வேட்டி, சட்டை லுக்கோடு வந்துள்ளார். அதே நேரத்தில், கரூர் பயணம் மற்றும் பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத் திறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட சில நிகழ்வுகளில் அவர் வழக்கமான நீலம், கருப்பு நிற சட்டைகளிலும் தோன்றியிருந்தார்.

படிக்கும் உங்களைப் போலவே பலருக்கும் இதுகுறித்து தெளிவான தகவல் எதுவும் இல்லை. பெரும்பாலும், மாற்றத்திற்காக வெள்ளிக்கிழமைகளில் மட்டும் வேட்டி, சட்டை அணிந்து வருகிறார் என்ற பொதுவான கருத்தே நிலவுகிறது.

இதற்கிடையில், “வெள்ளிக்கிழமை… பட்டு வேட்டி… இதெல்லாம் சும்மா இல்லை!” என்ற பேச்சு சமூக வலைதளங்களில் வேகமெடுத்துள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, வெள்ளிக்கிழமை சுக்ர பகவானுக்கு உகந்த நாள். முதல்வர் விஜய்க்கு அவரது ஜாதகத்தின்படி தற்போது சுக்ர தசையே நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சுக்ர தசையில் அவர் மேலும் பல உயரங்களை எட்டுவதற்கு, ஜோதிட ஆலோசனையின்படியே இப்படிப் பட்டு வேட்டி, சட்டை அணிவதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் பட்டாடை, அதிலும் வெண்பட்டாடை என்பது சுக்ரனுக்கு உகந்தது. அதோடு, வாசனை நிறைந்த அரகஜா, வெள்ளியிலான அணிகலன்கள் அணிவது ஆகியவை சுக்ரனின் ஆதிக்கத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில், தலைமை அலுவலகத்தை இடம் மாற்றியதும்கூட சுக்ரனின் ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதற்காகவே எனவும் சிலர் கூறுகின்றனர்.

இந்நிலையில், தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் சரியாக பட்டு வேட்டி, பட்டு சட்டையுடன் வலம் வந்து கொண்டிருந்த முதலமைச்சர் விஜய், வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், தவெக தனது தேர்தல் பிரசாரப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதன் முதற்கட்டமாக இன்று மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பட்டு வேட்டி, பட்டு சட்டையுடன் வரவேண்டிய முதலமைச்சர் விஜய், அதற்கு மாறாக பேண்ட், சட்டை லுக்கில் வந்திருப்பதுதான் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஒருவேளை வெள்ளிக்கிழமை சம்பிரதாயத்தை விஜய் கைவிட்டுவிட்டாரா? ஏன் இன்று பட்டு வேட்டி, பட்டு சட்டை லுக்கில் வர வேண்டிய முதலமைச்சர் விஜய், அதற்கு மாறாக பேண்ட், சட்டையுடன் வந்திருக்கிறார்? இதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா? எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *