பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் கடந்த ஐந்தாண்டு கால நிதி நிலவரம் குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ளார்.
கடந்த தி.மு.க ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினும், நிதி அமைச்சர்களாக இருந்த பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ஆகியோரும், இந்தியாவிலேயே நிதி மேலாண்மையில், தமிழ்நாடு மிகச் சிறந்து விளங்குவதாகவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதாகவும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தமிழ்நாடு வளர்ச்சி அடைந்த மாநிலம். ஆனால், கடந்த ஐந்தாண்டு கால தி.முக அரசு, கடன் வாங்குவதிலும், தேவையற்ற ஆடம்பர செலவுகள் செய்வதிலும்தான் அதிகம் கவனம் செலுத்தியது.
கல்வி, சுகாதாரம், மெட்ரோ ரயில், மேம்பாலங்கள், நெடுஞ்சாலைகள் என உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கடன் வாங்குவதில் தவறில்லை. ஆனால், கடன் வாங்கிய பணத்தை இலவச திட்டங்களுக்கும், வீண் விளம்பரங்களுக்கும்தான் தி.மு.க அரசு வாரி இறைத்தது. அது மட்டுமல்லாது, தி.மு.க ஆட்சியில் எங்கும் எதிலும் ஊழல் நிறைந்திருந்ததால் கடன் சுமையும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

இதுபற்றி கடந்த ஐந்தாண்டுகளில் பலமுறை சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பயபோது, ஏதேதோ புள்ளி விவரங்களை அமைச்சர்கள் தெரிவிப்பார்கள். உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களையெல்லாம் உதாரணமாகக் கூறி சமாளித்து விடுவார்கள்.
தமிழக நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் வலியுறுத்தி இருக்கிறேன். அதை தி.மு.க அரசு ஒருபோதும் கண்டு கொள்ளவில்லை. இப்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, பதவியேற்ற 37வது நாளில் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ. 13 லட்சத்து 18 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டு தி.மு.க ஆட்சியில் மட்டும் சுமார் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ. 1,28,934 கடன் சுமை உள்ளது.