வேட்டு வைத்த குதிரை பேரம்? ஆளுநர் கையில் தவெக குடுமி? எண்ட்ரி கொடுக்கப்போகும் பாஜக? – Kumudam

Spread the love

தவெக ஆட்சிக் கட்டிலில் ஏறியதில் இருந்து எங்கும்.. எதிலும் ஒலிக்கும் சொல் ‘குதிரை பேரம்’. தேர்தலில் மெஜாரிட்டியை பெறுவதற்காக அமமுக எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி அளித்த புகாரைத் தொடர்ந்து, தாங்கள் ஒன்று குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்று ஒரு வீடியோவை வெளியிட்டு, தவளை தன் வாயாலே கெடும் என்பதற்கிணங்க தாங்களே குதிரை பேரத்தில் ஈடுபட்டதை வீடியோ வெளியிட்டது தவெக என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

தொடர்ந்து, தவெகவின் டார்கெட் திமுக கூட்டணிக் கட்சிகளை இழுப்பதில் இருந்தாலும், மறுப்பக்கம் எம்.ஜி.ஆர் மாளிகை மீதே அதன் ஃபுல் ஃபோகஸ் இருந்ததாகக் கூறப்படுகிறது.  அதன் நீட்சியாகத்தான் அதிமுக மாஜிக்கள் தவெகவில் இணைந்து வருவது என்றுக் கூறப்படும் நிலையில், குதிரை பேரத்தில் ஆளும் தவெக அரசு ஈடுபடுகிறது என்று ஆளுநரிடம் புகார் அளித்துள்ளது அதிமுக. 

அதாவது, அதிமுக எம்எல்ஏக்களை பணம் கொடுத்து தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருப்பதாக தமிழக வெற்றி கழகம் மீது அதிமுக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவி விலகியது குதிரை பேரம் எனவும், இடைத்தேர்தலில் பதவி விலகியவர்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடக்கூடாது எனவும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்பி இன்பதுரை ஆகியோர் மனு அளித்துள்ளனர். மேலும், தகுதி நீக்க மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அதிமுக ஒருப்பக்கம் மனு கொடுக்க, அதிமுகவிற்கு முன் முந்திச் சென்று திமுகவும் தவெக மீது குதிரை பேரத்தில் ஈடுப்பட்டதாக ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

”அனிதா ராதாகிருஷ்ணனை 5 மணி நேரம் துன்புறுத்தியுள்ளனர்; அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது தவெக அரசு. திமுக ஆட்சியில் அவதூறு வழக்குகளுக்கெல்லாம் யாரையும் கைது செய்ததில்லை. முதல்வர் விஜய் முன்னிலையிலேயே அதிகாரிகளுக்கு தனி நபர்கள் உத்தரவு போடுகின்றனர். தவெக குதிரை பேரம் செய்து வருவதாக ஆளுநரிடம் புகார் அளித்தோம். ரூ.50 கோடி தருவதாகக் கூறி வேப்பனஹள்ளி திமுக எம்எல்ஏ சீனிவாசனிடமும் குதிரை பேரம் நடத்தியது தவெக; நீங்கள் இளைஞர், தவெகவுக்கு வாருங்கள் என சீனிவாசனை அழைத்துள்ளனர். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம்” என்று தவெக குதிரை பேரம் செய்துவருவதாக குற்றம்சாட்டி ஆளுநர் அர்லேகரை சந்தித்து திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. வில்சன் புகார் மனு அளித்துள்ளனர். 

இப்படி, அதிமுக மற்றும் திமுக விஜய்யின் தவெக அரசு மீது ஆளுநரிடம் புகார் அளித்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கரூர் விஷயத்தில் சிபிஐ வழக்கில் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் லாக்காகியுள்ள நிலையில், குதிரை பேரம் வழக்கு லட்டு போல் வந்து மாட்டிக் கொண்டுள்ளதால் ஆளுநர் இதனை டெல்லி மேலிடத்திற்கு எடுத்துச் செல்ல வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.  

அப்படி ஆளுநர் இவ்வழக்கை டெல்லி மேலிடத்தில் எடுத்துச் செல்லும் பட்சத்தில், தவெகவின் குடுமி பாஜகவிடம் செல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும், இதன் மூலம் அதிமுக போன்று தவெகவை தனது கட்டுப்பாட்டில் பாஜக எடுத்துக் கொள்ளலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஆட்சி அமைந்ததில் இருந்தே அமித்ஷா மவுனம் காத்து வருகிறார் என்றும், அவரது ஆட்டம் இனிமேல் தான் தமிழ்நாட்டில் தொடங்கும் என்றும் கூறும் கமலாலய வட்டாரங்கள், மெஜாரிட்டியை வைத்து சசிகலாவே ஆட்சி அமைக்க நினைத்த போது அவரை சொத்துக்குவிப்பு வழக்கில் லாக் செய்த பாஜக, மைனாரிட்டியான தவெக ஆட்சி அமைத்ததையும், அது தொடர்வதையும் பார்த்து அமைதியாக இருக்கிறதென்றால் அதற்கு பின்னால் பிளான்கள் இல்லாமல் இல்லை என்று கூறுகின்றனர். கரூர் வழக்கு, குதிரை பேரம் என விஜயை லாக் செய்ய பலே பிளானை பாஜக போட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், பாஜக பிடியில் இருந்து தப்பிக்குமா தவெக? அல்லது அதிமுகவை போன்று சிக்கிக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *