`வேலை எல்லாம் போகல.!' – உயர் சம்பளத்தை விட்டு கனடாவிலிருந்து இந்தியா திரும்ப பெண் சொன்ன காரணம்!

Spread the love

விசா பிரச்னையால் அமெரிக்காவில் இருந்து அதிகமான இந்தியர்கள் வேலையை விட்டுவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா மட்டுமல்லாது கனடாவை சேர்ந்த இந்தியர்களும் இதே போன்று இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

கனடாவில் குடியுரிமை பெற்று கனடாவில் உள்ள டெலாய்ட் நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக பணியாற்றிய இந்திய பெண் ஒருவர் தனது உயர் சம்பளத்தை விட்டு விட்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு கனடாவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி இருக்கிறார்.

ப்ரீத்தி பிஸ்னிக் என்ற அப்பெண் தான் கனடாவில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு நாடு திரும்ப முடிவு செய்தது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதன்முதலில் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். உடனே எதற்காக வேலையை விட்டுவிட்டு செல்கிறாய் என்று கேள்வி கேட்டு அவருக்கு நண்பர்களும், தோழிகளும், உறவினர்களும் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தனர்.

அதிகமானோர் விசா பிரச்னையா என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதனால் அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்கு பிரீத்தி தள்ளப்பட்டார். இது குறித்து பிரீத்தி விரிவான விளக்கம் ஒன்றை கொடுத்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இந்தியாவுக்குத் திரும்புவது பணிநீக்கம் அல்லது விசா பிரச்சனை இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மாறாக, வயதான பெற்றோருடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற ஆசைதான் தன்னை இந்த முடிவை எடுக்க தூண்டியது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரீத்தி தான் வெளியிட்டுள்ள காணொலிக்கு “நான் ஏன் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்கிறேன், டெலாய்ட்டில் அதிக ஊதியம் பெறும் வேலையை விட்டுவிட்டு சிறிது காலம் கனடாவை விட்டு வெளியேறுகிறேன். உங்களில் நிறைய பேர் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள், அதைப் பற்றி ஒரு ரீல் செய்ய நினைத்தேன்” என்று தலைப்பிட்டுள்ளார்.

அவர் தனது காணொலியில், “நான் ஏற்கனவே கனடாவில் குடியுரிமை பெற்று இருப்பதால் அங்கு எனக்கு விசா பிரச்னை எதுவும் ஏற்படவில்லை. நான் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்கப்படவில்லை. அதோடு டெலாய்ட் நிறுவனம் என்னை வேலையை விட்டும் நீக்கவில்லை. உண்மையில், நான் வேலையை ராஜினாமா செய்ய வேண்டுமா என்று எனது மேலாளர் என்னிடம் கேட்டார். என்னுடன் பணிபுரிந்த குழுவை நினைக்கும் போது ஆச்சரியமாக இருந்தது.

எனது ஊதியம் நன்றாக இருந்தது. உண்மையில், கனடாவில் எனக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால ரியல் எஸ்டேட் உள்ளது. இந்தியாவில் இருக்கும் எனது பெற்றோர் அருகில் இருக்க வேண்டும் என்று விரும்புவதால்தான் கனடாவில் இருந்து வெளியேறுகிறேன். ஏனென்றால் என் அப்பாவுக்கு இப்போது வயதாகிவிட்டது. மேலும் என் அம்மாவும் நடக்கும்போது சில பிரச்சனைகளை எதிர்கொள்கிறார், மேலும் அவருக்கு பார்வையில் சில பிரச்சனைகள் உள்ளன.

இரண்டாவது விஷயம், நான் கனடாவில் மிகவும் கடினமாக உழைத்து ஆறு வருடங்கள் ஆகிறது. இப்போது வீட்டில் வேலை செய்ததால் எனது எடையை 10 கிலோ வரை குறைக்க முடிந்தது. எனவே, நான் இப்போது கணினியில் வேலை செய்ய விரும்பவில்லை. நான் இப்போது இந்தியாவுக்குத் திரும்பிச் சென்று, என்னுடைய பெற்றோரின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்காக வேலை செய்யப்போகிறேன். அதன் பிறகுதான் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். எனக்கு வேலை மற்றும் நாட்டை விட எனது பெற்றோர்தான் முக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *