இதுகுறித்துப் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் ‘எனக்குத் தெரிந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு வறட்சி ஏற்பட்டுள்ளது. நீர் மேலாண்மை மோசமாக இருப்பதே இதற்குக் காரணம். குறிப்பாக வேளாண்மை, நீர்பாசனம், வருவாய் ஆகிய மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி இருந்தால், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேவைக்கு ஏற்ப நீரை திறந்து, வறட்சி ஏற்படாமலும் குடிநீருக்கு சிக்கல் ஏற்படாமலும் தடுத்திருக்க முடியும்.
ஜூன் மாதம் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் அதற்கு முன்பு நாற்றங்கால் நடவிற்கும் திறந்திருக்க வேண்டும். கடந்த ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்தும் வைகை அணையிலிருந்தும் நீர் இருப்பை கணக்கிடாமல், மேலிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக லோயர் கேம்ப், வைகை அணை என மின்சார உற்பத்திக்காக மட்டும் இரண்டு அணைகளிலிருந்தும் தண்ணீர் திறந்துவிட்டு, பாசனத்திற்கும், குடிநீருக்கும் தேவையான மேலாண்மை செய்யாமல், மின்சாரம் எடுத்து லாபம் பார்த்தனர்.
தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் இதுவரை இப்படி நடந்ததில்லை. தண்ணீர் மொத்தமும் வீணாகிப்போனாலும் பரவாயில்லை எங்களுக்கு மின்சாரம்தான் முக்கியம்’ என செயல்பட்டுள்ளனர். தற்போது வைகை அணையில் 21 அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும்போதே அந்த நீர் நிறம் மாறி ‘இது குடிக்க உசுந்தது இல்லை’ என அரசே வெளிப்படையாக சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. தற்போது வைகை அணைக்கு நீர்வரத்து சுத்தமாகவே இல்லை. அணையிலுள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன.
தேனி மாவட்ட நகர்ப் பகுதி மற்றும் உள்ளாட்சிகளிலிருந்து வரும் கழிவுநீர் மட்டுமே இதற்கு முன்பு வைகை அனைக்கு வந்து சேர்ந்தது. இப்போது ஹோட்டல், மண்டபங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் வருவதால் வைகை இன்னும் மோசமான நிலைக்குச் செல்லும். கூடுதலாக முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறந்தால், அது வைகை அணைக்கு வரும்போது கழிவுநீர் தேங்கி மேலே இருக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்கும். தற்போது அந்த கழிவுநீர் மட்டுமே வைகை அணையில் தேங்கிக் கிடக்கிறது. புதிய அரசாவது. நீர் மேலாண்மையை முறையாக செயல்படுத்த வேண்டும். ஐந்து மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக இருக்கும்.
வைகை முல்லைப் பெரியாறு அணைகளின் சீரமைப்புப் பணிகளுக்கு அரசு பெரியளவில் நிதி ஒதுக்குவதில்லை. அதை செய்தால் மட்டுமே வைகை உயிர்ப்போடு இருக்கும்’ என்றார். வைகை அணையை ஒட்டிய கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர் முத்துநாகு எனக்கு விபரம் தெரிந்து 50 ஆண்டுகளில் வைகை அணை இதுபோல் வறண்டதே கிடையாது அணையில் 21 அடி தண்ணீர் இருந்தாலும் 15 அடிவரை சேறும் சகதியுமாகத்தான் உள்ளது. குடிநீர் வடிகால் வாரியம். ரொம்பவே தாமதமாக ‘இந்த நீர் குடிக்க உகந்தது இல்லை’ என்று சொல்லியிருக்கிறது.
ஆனால் எனக்குத் தெரிந்து கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பே அப்படியொரு நிலை உருவாகிவிட்டது. இங்கிருந்த மீன்கள் அதிகளவில் செத்து மிதந்தன. இறந்த மீனைஎடுத்து சோதித்தபோது, அதன் பாலூட்டும் இடம் சகதியாகவும், வாய் மற்றும் செதில் பகுதிகளில் மண் நிறைந்தும் காணப்பட்டது. இதுதான் அணையின் இப்போதைய நிலை. இங்குள்ள மக்களுக்கும் இது தெரியும் அதையும் மீறி அந்த நீரை அவர்கள் குடிக்க வயிற்றுப்போக்கு காய்ச்சல் என அவதிப்பட்டுவருகின்றனர். அதிகாரிகளோ, ‘எப்படியும் மழை பெய்துவிடும். புது தண்ணீர் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றனர். இந் நிலையில் கடந்த வாரம்தான், ‘இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ற தரத்துடன் இல்லை’ என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்” என்றார்.
அருகிள் இருக்கும் கிராமத்தினரோ, “தற்போது வைகை அணையிலிருந்து மதுரை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுவரும் குடிநீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல உசிலம்பட்டி, சேடப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்பட்ட நீரும் முழுவதுமாகநிறுத்தப்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால், 5 மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அதற்குள் தென்மேற்கு பருவமழை வந்து காப்பாற்றினால்தான் மக்களுக்கு நிம்மதி பிறக்கும்” என்றனர்.
தேனி மாவட்ட குடிநீர் வடிகால்வாசிய அதிகாரிகள், “வைகை அணையில் அடிமட்ட பகுதியில் தண்ணீர் மாசடைந்து. அடர் பச்சை நிறமாக மாறியுள்ளது. இந்த நீரை எப்படி சுத்திகரிப்பு செய்தாலும் முழுமையாக சுத்தப்படுத்த முடியவில்லை. எனவே அணையிலிருக்கும் நீர் குடிக்க உகந்தது இல்லை. அதையும் மீறி பயன்படுத்தினால், தொற்றுநோய் அபாயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து தேனி, மதுரை கலெக்டர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறோம்” என்றார்கள்.
குடிக்கிற தண்ணியை நஞ்சாக்கிட்டீங்களே!



