Sports
oi-Shyamsundar I
நியூயார்க்: 2026 பிபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் மெஸ்சியின் அர்ஜென்டினாவை உற்றுநோக்கிக் கொண்டிருந்த தருணத்தில், ஆட்டத்தின் 106வது நிமிடத்தில் ஒரு மின்னல் வேக கோல் மூலம் ஸ்பெயின் அணி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக மாறினார் ஒரு இளம் வீரர். அவர்தான் பெரான் டோரஸ்!
7ம் நம்பர் டி ஷர்ட் அணிந்து.. ஸ்பெயினின் வெற்றிக்கு காரணமாக மாறிய.. இன்று உலகமே கொண்டாடும் இந்த 26 வயது நாயகனின் கடந்த காலப் பக்கம் அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. கடுமையான அவமானங்கள், கிண்டல்கள், மன உளைச்சல்களைத் தாண்டி அவர் பெற்ற இந்த வெற்றி, விளையாட்டு உலகின் ஆகச்சிறந்த எழுச்சி கதைகளில் ஒன்று ஆகும்.
தெருக்களில் தொடங்கிய கால்பந்து
ஸ்பெயினின் வலென்சியா நகருக்கு அருகிலுள்ள ஃபாயோஸ் என்ற சிறிய கிராமத்தில் 2000ம் ஆண்டில் பிறந்தார் பெரான் டோரஸ். சிறு வயதிலேயே கால்பந்து மீது அதீத ஆர்வம் கொண்ட அவர் தொடக்கத்தில் கிராம அளவில் நடந்த போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடி தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.
இவரது திறமையைக் கண்டு வியந்த வலென்சியா கிளப் நிர்வாகம், தனது அகாடமியில் இவரை இணைத்துக்கொண்டது. 17 வயதிலேயே சீனியர் அணியில் அறிமுகமாகி, தனது அசாத்திய வேகத்தால் மான்செஸ்டர் சிட்டி கிளப் மற்றும் ஸ்பெயின் தேசிய அணியில் இணைந்தார்.

பார்சிலோனாவில் சந்தித்த அவமானங்கள்
2022ல் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பார்சிலோனா கிளப் அணிக்குள் நுழைந்தார் பெரான். ஆனால், அங்குதான் அவருக்கான சோதனைக் காலம் தொடங்கியது. எதிர்பார்த்தபடி கோல்களை அடிக்க முடியாமல் திணறியதால், ரசிகர்களும் ஊடகங்களும் அவரை மிகக் கொடூரமாக விமர்சித்தனர்.
பார்சிலோனா அணிக்கு தகுதியில்லாதவர், இவரெல்லாம் ஜோக்கர்.. என சமூக வலைதளங்களில் அவர் மீது கடுமையான அவதூறுகளும், தனிநபர் தாக்குதல்களும் தொடுக்கப்பட்டன.
ஒவ்வொரு போட்டியிலும் அவர் பந்தைத் தொடும்போதெல்லாம் மைதானத்தில் ரசிகர்களிடம் இருந்து கேலி கிண்டல்கள் எழுந்தன. இதனால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளான பெரான் டோரஸ், தனது ஃபார்மை முற்றிலுமாக இழந்து அணியின் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார்.
சுறாவின் கதை
இத்தனை இழிவுகளுக்கும் அவமானங்களுக்கும் மத்தியில் பெரான் டோரஸ் முடங்கிவிடவில்லை. ஆனால் அவர் மனம் முடங்கியது. மன ரீதியாக கடுமையான உளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து தனது மன உறுதியை மீட்டெடுக்க ஒரு மனநல ஆலோசகரின் உதவியை நாடினார்.
உடற்தகுதியைக் கூட்ட கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். தன்னை விமர்சித்தவர்களுக்குப் பதிலடி தரும் வகையில், தன்னை ஒரு சுறா என்று அறிவித்தார். ஆம் பேட்டி ஒன்றில் நான் இப்போது கடலுக்கடியில் இருக்கலாம்.. ஆனால் நான் சுறா எனக்கு மேலே வரவும் தெரியும் என்று அறிவித்தார்.
அதன்பின், பார்சிலோனா அணிக்காக 21 கோல்களை அடித்து ல லிகா கோப்பையை வெல்ல உதவினார். எந்த ரசிகர்கள் அவரை அவமானப்படுத்தினார்களோ, அவர்களையே கைதட்ட வைத்தார்.
உலகக்கோப்பையின் வரலாற்று நாயகன்
இதன் தொடர்ச்சியாகவே 2026 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மாற்று வீரராகக் களம் புகுந்து வரலாற்றுச் சிறப்புமிக்க கோலை அடித்து ஸ்பெயினுக்கு 2வது உலகக்கோப்பையை வென்று தந்துள்ளார். இதே தொடரில் கோபோ வெர்தே அணிக்கு எதிராக இவர் கோல் போட முடியாமல் திணறியதை பலரும் கிண்டல் செய்த நிலையில் நேற்று ஸ்பெயின் அணியின் வெற்றிக்கே காரணமாக மாறினார்.
இந்த உலகக்கோப்பை தொடரில் நான் சந்தித்த விமர்சனங்கள் அதிகம், ஆனால் விதி முன்பே எழுதப்பட்டுவிட்டது. எனக்கு தொடர்ந்து பலம் தந்த கடவுளுக்கு நன்றி என்று போட்டிக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்டுக் கூறியுள்ளார் பெரான் டோரஸ்.
அவமானங்களை படிகளாக மாற்றி, உழைப்பால் மட்டுமே உச்சம் தொட முடியும் என்பதற்கு பெரான் டோரஸின் இந்த அசாத்திய எழுச்சிப் பயணம் ஒரு மிகச்சிறந்த உதாரணம்!