Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான டிரேட் ஒப்பந்தம் குறித்த இறுதி முடிவை, சென்னை அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம் செய்யப்பட்ட பின் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாகவே ஹர்திக் பாண்டியா டிரேட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் எப்போதும் பரம எதிரிகளாகவே இருந்திருக்கின்றன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஆர்சிபி அணி அடைந்துள்ள உச்சம், மற்ற அணிகளுக்கு புதிய நெருக்கடியை கொடுத்துள்ளது. மும்பை மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு அணிகளும் 3 சீசன்களாக இறுதிப் போட்டிக்கு கூட முன்னேறவில்லை. இதனால் ரசிகர்களும் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இப்படியான சூழலில் இரு அணிகளுமே அணியை மீண்டும் உருவாக்க தயாராகி வருகின்றன. அந்த வகையில் மும்பை அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை வெளியேற்றும் முடிவுக்கு ஆகாஷ் அம்பானி வந்துவிட்டார். அதேபோல் ஹர்திக் பாண்டியாவும் மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்பவில்லை. இதனால் அவரை டிரேட் செய்ய மும்பை அணி நிர்வாகம் முன் வந்துள்ளது.
அதேபோல் ஹர்திக் பாண்டியாவை வாங்க சிஎஸ்கே அணி விருப்பம் தெரிவித்திருக்கிறது. இந்த ரேஸில் கேகேஆர் மற்றும் டெல்லி அணிகளும் குதித்துள்ளன. கேகேஆர் அணி தரப்பில் ரிங்கு சிங்கை கொடுக்க முன் வந்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் டெல்லி அணியில் அக்சர் படேல் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோரை கொடுக்க முன் வந்துள்ளனர்.
மும்பை அணியில் இந்திய ஸ்பின்னர்கள் இல்லாதது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதனை கணக்கில் கொண்டே டெல்லி அணி இந்த காயை நகர்த்தி இருக்கிறது. சிஎஸ்கே அணி தரப்பில் சிவம் துபே மற்றும் அன்சுல் கம்போஜ் அல்லது கலீல் அஹ்மத் ஆகியோரை கொடுக்க முன் வந்துள்ளன. ஆனால் மும்பை அணியின் எதிர்பார்ப்பு சிவம் துபே மற்றும் ஆயுஷ் மாத்ரே.
சிஎஸ்கே அணி நிர்வாகமோ ஆயுஷ் மாத்ரேவை பற்றி பேசினால், எங்களுக்கு டீல் வேண்டாம் என்று தெளிவாக கூறி இருக்கிறது. இதன்பின் டிவால்ட் பிரெவிஸை கேட்டிருக்கின்றனர். ஆனால் சிஎஸ்கே டிவால்ட் பிரெவிஸை கொடுத்தால், வில் ஜாக்ஸை நீங்களும் கொடுங்க என்று மும்பை அணியிடம் கேட்டிருக்கின்றன. இதனால் சிவம் துபே மற்றும் அன்சுல் கம்போஜ் ஆகியோரை வாங்க மும்பை நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்பது இதுவரை தெரியவில்லை. புதிய பயிற்சியாளர் நியமனம் செய்யப்பட்ட பின், இறுதி முடிவு எடுக்கப்படும். அதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் வெளியிட வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.