1,53,000 டன் சிமெண்ட்; விநியோக டெண்டர்; வருவாயை விட மனிதாபிமானம் முக்கியம் | மேட்டூர் அணை ஓசை 35 | history anai osai mettur dam construction series 35

Spread the love

V. ஐந்து ஆண்டுகளுக்குள் அரசாங்கத்தால் எந்த குளங்கள் அல்லது கால்வாயில் மராமத்து பராமரிப்பு செய்யக்கூடாது.

(கையொப்பம்) ஜி. லீ மோரிஸ், கலெக்டர். (G. LEE MORRIS)

(இதுபோன்ற உத்தரவு விவசாயிகளின் நலனுக்கு எதிரானது)

(தலைமை பொறியாளரின் நிலையான சுற்றறிக்கை எண் OXXXI, 26 டிசம்பர் 1860-ல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பார்வைக்கு இணைக்கப்பட்டிருந்தது.

மேலும் தலைமை பொறியாளரின் சுற்றறிக்கை எண் XIX, 28 ஆகஸ்ட் 1861. வேலைகள் மேலே உள்ள விதிகளுக்கு விதிவிலக்கு என்ற குறிப்புடன் இடம் பெற்றிருந்தது)

இவற்றை ஆராய்ந்து அரசு ஆணை—எண். 518 I., 21 டிசம்பர் 1909 அன்று அரசாணை ஒன்று பிறப்பித்தது..

1.தஞ்சாவூர் மாவட்ட சங்கத்தின் மனுவில் உள்ள புகாரை அரசாங்கம் கவனமாக பரிசீலித்துள்ளது.

2. தஞ்சாவூர் பாசனத்தை பற்றி நெருக்கமான அறிவு கொண்ட, பாசனத்திற்கான முன்னாள் தலைமைப் பொறியாளர் கர்னல் ஏ. டபிள்யூ. ஸ்மார்ட், ராயல் பொறியாளர் உள்ளிட்ட பல உயர் பொறியியல் அதிகாரிகள், கால்வாய்களில் சேற்றை அழிப்பது நிரந்தரமான நடைமுறை நன்மையைத் தராது என்றும், சேறு சிக்கலை திறம்பட சமாளிக்க கால்வாய்களில் சேறு சேராமல் இருக்கும் வகையில் மாற்றங்களை செயல்படுத்துவது அவசியம் என்றும் கருதுகின்றனர்.

இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட அரசாங்கம் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் மேலணையை மறுமாதிரியாக்குதல் மற்றும் திட அணைகளை திறந்த அணைகளாக மாற்றுதல் போன்ற நிரந்தர மேம்பாடுகளுக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் குறையாத தொகையை செலவிட்டுள்ளது. இவை முக்கியமாக வெள்ளம் மற்றும் சேறு சிக்கலை குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை. இதன் காரணமாக, பல ஆண்டுகளாக மாறாமல் இருந்த காவிரி அமைப்பின் மூலதனச் செலவு இரட்டிப்பாகியுள்ளது. அதே காலகட்டத்தில் பராமரிப்பு செலவும் இரட்டிப்பாகியுள்ளது, இதனால் பாசன அமைப்பு எந்த வகையிலும் புறக்கணிக்கப்பட வில்லை என்பது தெரிகிறது.

3. மனு 1865 ஆம் ஆண்டில் அப்போதைய கலெக்டர் திரு. லீ மோரிஸ் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையை குறிப்பிடுகிறது. அரசாங்கம் இந்த சுற்றறிக்கையை படித்து, இது முக்கியமாக எதிர்மறையான தன்மை கொண்டது மற்றும் முக்கியமாக குடிமராமத்தை அமல்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கவனிக்கிறது. இது முன்பு இருந்த அளவுக்கு பயன்படுத்தப்படவில்லை என்று தெரிய வருகிறது.

4. அரசாங்கத்தின் செலவில் கால்வாய்களை பழுது பார்க்கும் வழக்கம் மற்றும் விவசாயிகளின் உரிமை மற்றும் சலுகை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கைக்கு அரசாங்கம் எந்த சட்டப்பூர்வ கடமையும் இல்லை என்று அறிவுறுத்தப்படுகிறது. பழுது பார்க்கும் பொறுப்பு இருந்தால், அது ஒவ்வொரு பாசனப் பணியில் இருந்தும் தண்ணீரை அனுபவிக்கும் தகுதியுள்ளவர்களிடமே உள்ளது.

மெட்ராஸ் சட்டம் I 1858 இன் கீழ், பாசனம் அல்லது வடிகால் நோக்கத்திற்காக கிராம சமூகத்தின் கூட்டு உழைப்பால் வழக்கமாக செயல்படுத்தப்படும் பணிகளை செயல்படுத்துவதற்கு விவசாயிகள் உழைப்பை பங்களிக்க சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தப்படுகின்றனர். இந்த கடமையை செயல்படுத்துவதில் ஏதேனும் புறக்கணிப்பு அல்லது தவறு ஏற்பட்டால், அது அவர்களை அரசாங்கத்தின் வரி குறைப்பு வழங்குவதில் கட்டுப்படுத்தாது.

5. “குடிமராமத்தில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது அல்லது சேர்க்கப்படவில்லை என்பதை அரசாங்கம் குறிப்பாக வரையறுக்க தயாராக இல்லை. ஆனால் தஞ்சாவூர் டெல்டாவில் உள்ள அனைத்து கால்வாய்களும் பராமரிப்பு விஷயத்தில் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவை இப்போது பொதுப்பணித் துறையின் பொறுப்பில் உள்ளது. மேற்பார்வை பொறியாளர் கலெக்டருடன் கலந்தாலோசித்து, அரசாங்கத்தின் கருத்துப்படி வசதியாக பராமரிக்கப்பட கூடிய கால்வாய்களின் முழுமையான பட்டியலை தயாரித்து அரசாங்கத்தின் ஆணைக்கு சமர்ப்பிப்பார். இந்த கால்வாய்கள், அரசாங்கம் தேவையானதாக கருதும் இந்த எதிர்கால மாற்றத்திற்கும் உட்பட்டு, பொதுப்பணித் துறையின் நேரடி மற்றும் உடனடி பொறுப்பில் இருக்கும், மற்ற அனைத்து கால்வாய்களில் குடிமராமத்து கீழ் விவசாயிகளால் பராமரிக்கப்படும்.

இப்படி ஒரு அறிவிப்பு சேறு, மற்றும் தூர்வாருவது குறித்த அப்போதைய அரசின் கடமையிலிருந்து நழுவுவதாக நமக்குத் தெரிகிறது.

இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக, பலமுறை மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் இந்த தொடர் சம்பந்தமாக ஆய்வு செய்ய நாம் நேரில் சென்றிருந்த போது பண்ணவாடி கிராமம் அருகே பழைய காலத்தில் கட்டப்பட்டு, நீரில் மூழ்கி இருக்கும் கிறிஸ்தவ தேவாலயங்கள், ஜலகண்டேஸ்வரர் ஆலயம் போன்றவற்றை அருகில் சென்று காண முடிந்தது. தண்ணீர் இன்றி வறண்ட சூழ்நிலையில் கோவிலின் நந்தி சிலை தரை மட்ட அளவில் தான் உள்ளது. அந்த கோவிலின் அமைப்பின் படி சுமார் 20 அடி உயரத்தில் தான் அந்த நந்தி அமைக்கப்பட்டுள்ளது. எனில், சுமார் 20 அடிக்கும் குறைவில்லாமல் சேறும், சகதியும், வண்டல் மண்ணும் அங்கே படிந்துள்ளது என்பது மிகத்தெளிவாக எவரும் உணரலாம். பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் இவ்வாறு வண்டல் படிந்துள்ளதை தூர்வாரி அங்கே பழைய நிலமட்டத்தை கொண்டு வந்தால் பல டி.எம்.சி (T.M.C) நீர் அதிகமாக அணையில் சேமித்து வைக்க முடியும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *