2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : வானிலை ஆய்வு மையம்  – Kumudam

Spread the love

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 13) நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை (ஆகஸ்ட் 14) நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 16 வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த காலகட்டத்தில் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் கடலுக்கு செல்லும் மீனவர்கள் வானிலை நிலவரத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும்.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *