இப்படி உட்கார்ந்த நிலையிலேயே அதிக நேரம் செலவிடும் வாழ்க்கை முறை (Sedentary Lifestyle), இளம் இந்தியர்களின் எலும்பு மற்றும் தசை மண்டல ஆரோக்கியத்தில் (Musculoskeletal Health) முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, 20 வயதைக் கடந்த இளைஞர்கள் சிலர் படிக்கட்டுகளில் ஏறும்போதும், குத்துக்காலிட்டு அமரும்போதும், நாற்காலியிலிருந்து எழும்போதும் அல்லது நீண்ட தூரம் நடக்கும்போதும் முழங்கால் வலி ஏற்படுவதாகச் சொல்வதைப் பார்க்கிறோம்.
இளம் வயதிலேயே முழங்கால் வலி ஏற்படுவதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதேநேரத்தில், முழங்கால் வலி இருப்பதால் ஒருவருக்கு மூட்டுவாதம் (Arthritis) இருக்கிறது என்றும் உடனடியாக முடிவு செய்துவிட முடியாது. வலிக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதே முக்கியம்.

முழங்கால் என்பது உடலின் எடையைத் தாங்கக்கூடிய முக்கியமான மூட்டு (Weight-bearing Joint). இதற்கு தசைகள், தசைநார்கள் (Ligaments), தசைநாண்கள் (Tendons), குருத்தெலும்புகள் (Cartilage) ஆகியவை உறுதுணையாக இருக்கின்றன. தொடையின் முன்பகுதியில் உள்ள குவாட்ரிசெப்ஸ் தசைகள் (Quadriceps), பின்பகுதியில் உள்ள ஹாம்ஸ்ட்ரிங்ஸ் தசைகள் (Hamstrings), இடுப்பைச் சுற்றியுள்ள தசைகள் ஆகியவை முழங்காலை நிலையாக வைத்திருக்கவும், அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
ஒருவர் நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதுடன், போதிய உடல் இயக்கமும் இல்லாமல் இருந்தால், இந்தத் தசைகள் வலுவிழக்கலாம் அல்லது அவற்றின் செயல்திறன் குறையலாம். இதனால் முழங்கால் பகுதி (Kneecap) இயங்கும் விதம் பாதிக்கப்பட்டு, படிக்கட்டுகளில் ஏறுதல், ஓடுதல், குத்துக்காலிட்டு அமருதல் போன்ற செயல்பாடுகளின்போது முழங்காலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் அழுத்தம் ஏற்படலாம்.

உடல் எடை அதிகரிக்கும்போது முழங்கால் மூட்டுகள் தாங்க வேண்டிய அழுத்தமும் அதிகரிக்கிறது. இதனால் ஏற்கெனவே முழங்கால் வலி உள்ளவர்களுக்கு அசௌகர்யம் அதிகரிப்பதுடன், அன்றாட இயக்கங்களும் சிரமமாக மாறலாம். ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், உடற்பயிற்சியை அளவுக்கு அதிகமாகச் செய்வதும் முழங்கால் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
வாரம் முழுவதும் பெரும்பாலும் உட்கார்ந்தே இருப்பவர்கள், திடீரென ஜிம்மில் கடுமையான பயிற்சிகள், ஓட்டப்பயிற்சி அல்லது அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளைத் தொடங்குகின்றனர்.
முறையான வார்ம்-அப் (Warm-up), சரியான உடற்பயிற்சி நுட்பம் மற்றும் தேவையான ஓய்வு இல்லாமல் இத்தகைய பயிற்சிகளை மேற்கொண்டால், தசைகள் மற்றும் மூட்டுகளில் அளவுக்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு காயங்கள் உண்டாகலாம். இதனால் தசைநார் காயங்கள் (Ligament Injuries) அல்லது மூட்டுக்குள் இருக்கும் மெனிஸ்கஸ் குருத்தெலும்பு பாதிப்பு (Meniscus Injury) போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.
குறிப்பாக, திடீரென திரும்புதல், குதித்தல், வேகமாகத் திசைமாறி ஓடுதல் போன்ற விளையாட்டுச் செயல்பாடுகளில் காயம் ஏற்படும் அபாயம் அதிகம்.