ஒரு பக்கம் கடும் வெப்பம்… இன்னொரு பக்கம் எதிர்பாராத கனமழை… சில இடங்களில் புயலின் தாக்கம்… வேறு சில பகுதிகளில் நீடிக்கும் வறட்சி. இயற்கையின் இந்த மாற்றங்கள், உலக நாடுகளின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எழுப்பி வருகின்றன.
காலநிலை மாற்றம் என்பது இனி எதிர்காலத்தில் வரப்போகும் பிரச்னை மட்டுமல்ல. அது ஏற்கெனவே மக்களின் வாழ்க்கை, விவசாயம், பொருளாதாரம் என பல தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் உலக நாடுகள் சந்தித்த தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கத்தை ஆய்வு செய்துள்ளது, ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி அமைப்பான Germanwatch வெளியிட்டுள்ள Climate Risk Index 2027 அறிக்கை.
1996 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் மனித மற்றும் பொருளாதார தாக்கங்களை ஆய்வு செய்த இந்த அறிக்கையில், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.
30 ஆண்டுகள் சொல்லும் இந்தியாவின் காலநிலை பாதிப்பு
கடந்த மூன்று தசாப்தங்களில் இந்தியா வெள்ளம், புயல், வெப்ப அலை, வறட்சி உள்ளிட்ட 436 தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிகழ்வுகளின் தாக்கத்தால் சுமார் 78,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தியா சந்தித்த பொருளாதார இழப்பு சுமார் 170 பில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கைகள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. ஒவ்வொரு எண்ணிக்கையின் பின்னாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், சேதமடைந்த வீடுகள், பாதிக்கப்பட்ட விவசாயம் மற்றும் மீண்டும் கட்டமைக்க வேண்டிய பல்வேறு விஷயங்கள் உள்ளன.
உலக அளவில் பார்க்கும்போது, 1996 முதல் 2025 வரை ஏற்பட்ட சுமார் 10,000 தீவிர வானிலை நிகழ்வுகளால், 9.16 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5.5 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதுடன், 4.7 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தரவரிசை எப்படி கணக்கிடப்பட்டது?
Climate Risk Index என்பது எதிர்காலத்தில் எந்த நாடு பாதிக்கப்படும் என்பதை கணிக்கும் பட்டியல் அல்ல. கடந்த காலங்களில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படுத்திய உண்மையான தாக்கங்களை மதிப்பிடும் ஆய்வாகும்.

உயிரிழப்புகள், பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை, பொருளாதார இழப்புகள் போன்ற மனித மற்றும் பொருளாதார தாக்கங்கள் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
இந்த ஆய்வுக்காக EM-DAT சர்வதேச பேரிடர் தரவுத்தளம், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) உள்ளிட்ட தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன.