Business
oi-Vigneshkumar
சென்னை: 30 வயதில் பெரும்பாலானோருக்கு வீடு வாங்குவது வாழ்க்கையின் முக்கியமான இலக்காக இருக்கும். ஆனால், அதே பணத்தை வாடகைக்கு பயன்படுத்தி, மீதமுள்ள தொகையை முதலீடு செய்தால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வளவு சொத்து சேரும் என்று யோசித்து பார்த்து இருக்கிறீர்களா? அப்படி பார்க்கும்போது வீடு வாங்குவது சிறந்ததா இல்லை முதலீடு செய்வது சிறந்ததா என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீட்டு விலைகள், நடுத்தர குடும்பங்களின் வருமானத்தைவிட வேகமாக உயர்ந்துள்ளன. பல நகரங்களில் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ குடும்ப வருமானத்தில் 40 முதல் 65 சதவீதம் வரை செல்கிறது. ஆனால் பொருளாதார வல்லுநர்களிடம் கேட்டால் ஒட்டுமொத்த வருமானத்தில் 30 முதல் 35 சதவீதம் வீட்டு இஎம்ஐ-க்கு செல்வதே சிறந்தது என சொல்கிறார்கள். அதே நேரத்தில், வீடுகளின் வாடகை வருவாய் என்பது பொதுவாக 2 முதல் 3 சதவீதம் மட்டுமே உள்ளது.

இரு சகோதரிகள்
நாம் ஒரு உதாரணத்தை எடுத்து கொள்வோம்.. ஒரே நகரத்தில் ஒரே வருமானம் கொண்ட 30 வயதான இரு சகோதரிகள் இருக்கிறார்கள் என வைத்து கொள்வோம். ஒரு சகோதரி ரூ.1.2 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்குகிறார். இதற்காக 20 சதவீதமாக ரூ.24 லட்சத்தை முன்பணமாக செலுத்தி, மீதமுள்ள ரூ.96 லட்சத்தை 8.75 சதவீத வட்டியில் 20 ஆண்டுகளுக்கு கடனாகப் பெறுகிறார். இதற்கான மாத இஎம்ஐ சுமார் ரூ.84,800. பராமரிப்பு மற்றும் வரிகளை சேர்த்தால் மாத செலவு சுமார் ரூ.90,000 வரை செல்லும்.
மற்றொரு சகோதரி அதேபோன்ற வீட்டை மாதம் ரூ.28,000 வாடகைக்கு எடுக்கிறார். வீட்டுக்காக செலுத்த வேண்டிய ரூ.24 லட்சம் முன்பணத்தை அவர் பல்வேறு பங்குகளில் முதலீடு செய்கிறார். மேலும், வீட்டை வாங்காமல் இருப்பதால் மாதம் சேமிக்கப்படும் ரூ.62,000 தொகையை சிப் மூலம் முதலீடு செய்கிறார்.
சொத்து மதிப்பு
20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது அவர்களின் 50 வயதில் இதன் மதிப்பு என்னவாக இருக்கும்? முதல் சகோதரிக்கு வீடு சொந்தமாக இருக்கும். மேலும், அதன் மதிப்பு 6.5 சதவீதம் அதிகரித்தது என கணக்கிட்டால் சுமார் ரூ.4.23 கோடி மதிப்புள்ள வீடு அவருக்கு சொந்தமாக இருக்கும். ஆனால் வாடகையில் இருந்து முதலீடு செய்த சகோதரியின் பங்கு முதலீட்டு தொகை, ஆண்டுக்கு 12 சதவீத வருமானம் கிடைக்கும் எனக் கணக்கிட்டால் சுமார் ரூ.7.60 கோடியாக உயர்கிறது. அதாவது முதலீடு செய்தவருக்கு சுமார் ரூ.3.37 கோடி அதிக சொத்து கிடைக்கிறது.
இதை இன்னும் கொஞ்சம் விரிவாக பார்த்தால்.. முதல் 5 ஆண்டுகளில் வீட்டின் மதிப்பை விட முதலீடுகளின் மதிப்பு ரூ.12 லட்சம் அதிகமாக இருக்கும். 10 ஆண்டுகளில் பார்த்தால் அது ரூ.50 லட்சம் அதிகமாக இருக்கும். 15 மற்றும் 20 ஆண்டுகளில் முறையே ரூ.1.4 கோடி மற்றும் ரூ.3.37 கோடி அதிகமாக இருக்கும்.
சிக்கல்கள்
ரூ.96 லட்சம் கடனை 20 ஆண்டுகளுக்கு வாங்கினால், சுமார் ரூ.1.07 கோடி வட்டி மட்டும் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, கடனாக வாங்கிய தொகையைவிட அதிக தொகை வட்டிக்கு செலுத்தப்படுகிறது. தொடக்கத்தில் சில ஆண்டுகளில் EMIயின் பெரும்பகுதி அசலை குறைப்பதற்கு பதிலாக வட்டிக்கே செல்கிறது. மேலும், 30 வயதில் நாம் செலுத்தும் ரூ.24 லட்சம் டவுன் பேமேண்டு அடுத்த 20 ஆண்டுகளுக்கு வளர முடியாமல் போகிறது.
இதில் மற்றொரு பெரிய ரிஸ்க் EMI. இந்த காலத்தில் எதுவுமே நிலையானது இல்லை.. வேலையிழப்பு, வேலை மாற்றம், தொழில் தொடங்குதல் ஆகியவை EMIக்கு குடைச்சலை ஏற்படுத்தும். மேலும், வேறு நகரத்துக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் வீடு தேவையில்லாமல் போய்விடும். இப்படி பல ரிஸ்க்கள் உள்ளன.
எது முக்கியம்
எந்த ஏரியாவில் வீட்டை வாங்குகிறோம் என்பது ரொம்ப முக்கியம். வீட்டு விலை ஆண்டுக்கு சுமார் 9.5 முதல் 10 சதவீதத்துக்கு மேல் தொடர்ந்து உயர்ந்தால் மட்டுமே, வீடு வாங்குவது சாதகமாக மாறும்! 1991 முதல் 2021 வரையிலான காலகட்டத்தை எடுத்து பார்த்தால்.. குடியிருப்பு ரியல் எஸ்டேட் ஆண்டுக்கு 9.3 சதவீதம் வளர்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 2010-15 காலகட்டத்தில் வீட்டு விலை வளர்ச்சி 16 சதவீதமாக இருந்த நிலையில், 2015-20 காலகட்டத்தில் அது 5.5 சதவீதமாக சரிந்துள்ளது.
30 வயதில் வீடு வாங்குவது முற்றிலும் தவறான முடிவு என்று கூற முடியாது. மாதாமாதம் EMI கட்டினால் மட்டுமே எங்களால் பணத்தை சேமிக்க முடியும்.. இல்லையென்றால் பணம் எங்கு போகிறது என்றே தெரியாது என்பவர்கள் வீடு வாங்குவது பொருத்தமானதாக இருக்கும்.. அப்படியே வாங்கினாலும் சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
என்ன செய்யலாம்
முதலில் 3 முதல் 5 ஆண்டுகளுக்கான செலவு தேவையான பணத்தை அவசரக்கால நிதியாக வைத்து கொள்ள வேண்டும். வீட்டுக்கான மொத்த செலவை நிகர வருமானத்தில் 35 சதவீதத்துக்குள் வைத்திருக்கலாம். 30 வயதிலேயே வீடு வாங்குவதற்கு பதிலாக.. 40 வயது வரை தீவிரமாக முதலீடு செய்து, 38 முதல் 42 வயதில் அதிக முன்பணத்தை கொடுத்து, கடனை குறைத்து வீடு வாங்குவது வட்டி செலவை கணிசமாக குறைக்கக்கூடும்.
30 வயதில் வீடு வாங்குவது ஒரு வாழ்க்கை இலக்காக இருக்கலாம். ஆனால் 30 வயதில் முதலீட்டை தொடங்குவது, பிற்காலத்தில் வீடு வாங்குவதற்கான சுமையை மிக பெரியளவு குறைத்துவிடும்.