டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின்.
இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் புதின் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் புதின், “சில நேரங்களில் போட்டி என்பது மிகவும் மோசமாக மாறுகிறது.
எரிபொருள் குழாய்கள் தகர்க்கப்படுவது, சர்வதேசப் போக்குவரத்துப் பாதைகளை முடக்கிச் சரக்குக் கப்பல்களைக் கைப்பற்ற முயல்வது, சட்டவிரோதமான தடைகளை விதிப்பது போன்ற சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, மற்றவர்களின் சுயநலத்தை ஏற்க மறுத்து, சொந்த நலனில் அக்கறை காட்டும் நாடுகளுக்கு எதிராக, ‘இரண்டாம் நிலைத் தடைகள்’ என்ற பெயரில் அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுகின்றன.
உலகின் அனைத்து நாடுகளின் மீது விதிக்கப்பட்ட மொத்தத் தடைகளை விட இரண்டு மடங்கு அதிகமாக, அதாவது 30,000-க்கும் மேற்பட்ட தடைகள் ரஷ்யா மீது மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட சவாலான பின்னணியிலும், ரஷ்யா தீவிரமாகச் செயல்பட்டுப் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளது.
நாங்கள் எங்களது தேசிய இறையாண்மையை மேலும் பலப்படுத்தியுள்ளோம். நம்பிக்கையான தோழமை நாடுகளுடன் உறவுகளை வளர்த்து வருகிறோம்.
கடந்த 3 ஆண்டுகளில், ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி உலகச் சராசரியை விட மிகச் சிறப்பாகவே இருந்துள்ளது” என்று ட்ரம்பை மறைமுகமாக சாடுவதுபோலப் பேசினார்.