தனது செயல்பாடுகள் நிறுவனத்தின் சொந்தத் தரநிலைகளை எட்டவில்லை என்று ஒப்புக்கொண்ட கூகுள், அதிகாரிகளின் உத்தரவுகளுக்குக் கட்டுப்படுவதாகத் தெரிவித்துள்ளது. அதேவேளையில், தாம் நல்நோக்கத்துடனேயே செயல்பட்டதாகவும் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட மீறல் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிதையும் இயற்கைச் சமநிலை
முஹோஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகளால் நீர்வழிகள் மற்றும் வடிகால் அமைப்புகள் பாதிக்கப்படக்கூடும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதி மண்ணின் தன்மை காரணமாக நீரின் அமிலத்தன்மை அதிகரிப்பது, அபாயகரமான உலோகங்கள் நீரில் கலப்பது போன்ற ஆபத்துகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
வனவிலங்குகளின் வாழிடங்கள் துண்டிக்கப்படுவதும், காடுகளின் கார்பன் சேமிப்புத் திறன் குறைவதும் நீண்டகால அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. முஹோஸ் பகுதியில் 130 ஹெக்டேர் நிலத்தில் மீண்டும் மரங்களை நடத் திட்டமிட்டுள்ளதாக கூகுள் கூறியிருந்தாலும், புதிதாக மரங்களை நடுவது பல்லாண்டுகளாக உருவான பழைய காடுகளின் மண் அமைப்பையும் உயிரினச் சூழலையும் உடனடியாக மீட்டெடுக்காது எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ரூ.1.15 லட்சம் கோடி முதலீடு… எழும் கேள்விகள்!
பின்லாந்தில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தித் திட்டங்களுக்காக 2027 மற்றும் 2028-ம் ஆண்டுகளில் 13 பில்லியன் யூரோக்களை (சுமார் ரூ.1.15 லட்சம் கோடி) முதலீடு செய்யப்போவதாக கூகுள் அறிவித்திருந்தது. இத்திட்டம் மூலம் கட்டுமானக் காலத்தில் 37,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளும், செயல்பாட்டுக்கு வந்த பிறகு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகும் என நிறுவனம் கணித்துள்ளது.
தரவு மையங்கள் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடும் என்றாலும், அவற்றுக்குத் தேவைப்படும் நிலம், மின்சாரம் மற்றும் நீர் பயன்பாடு ஆகியவற்றை புறந்தள்ளிவிட முடியாததால், வெறும் முதலீட்டின் அளவை மட்டும் பார்க்காமல், அதனால் ஏற்படும் நீண்டகால சுற்றுச்சூழல் சேதாரங்களையும் ஒப்பீடு செய்து பார்ப்பது அவசியமாகிறது.
கொதித்தெழும் பின்லாந்து மக்கள்!
தரவு மையங்களுக்கான சுற்றுச்சூழல் விதிகளையும் அனுமதி நடைமுறைகளையும் பலப்படுத்தக் கோரி பின்லாந்தில் தொடங்கப்பட்ட குடிமக்கள் விழிப்புணர்வுப் போராட்டத்தில் 93,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். கட்டுமான அனுமதிகள், மின்சாரப் பயன்பாடு மற்றும் உள்ளூர் மக்களுக்கான இழப்பீடு ஆகியவற்றில் கடுமையான சட்டங்கள் தேவை என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.