இது வரையில் எழுத்து வடிவத்தில் புத்தகங்களின் மூலம் வாசிப்பவர்களுக்கு விருந்தளித்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் கலை வடிவில் நாடகமாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரங்கேறியது.
வீனிக்ஸ் கலைக்குழு மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் இணைந்து நடத்திய வீரயுக நாயகன் வேள்பாரி நாவலைத் தழுவியது வீரயுக நாயகன் வேள்பாரி நாடகம். சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் எழுதி 111 வாரங்கள் ஆனந்த விகடன் வார இதழில் தொடராக வெளிவந்து விகடன் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்ட வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் குறுகிய காலத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பிரதிகளை விற்ற பெருமைக்குரியதாகும்.
வாசகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு இதுவரை எழுத்து வடிவில் இருந்த நாவல் தற்போது கலை வடிவமாக நாடகமாக நடைபெற்றது.
பீனிக்ஸ் கலை குழுவின் ஏற்பாட்டில் முழுமையாக பெண் கலைஞர்களை மட்டுமே பயன்படுத்தி முனைவர் இராணி மனோகரன் இயக்கத்திலும், சு.வேடராஜா இசை மற்றும் பின்புலக் காட்சி உருவாக்கத்திலும், ஒரு மாத காலம் சீரிய பயிற்சி பெற்ற 40க்கும் மேற்பட்ட கலைஞர்களின் நடிப்பிலும், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தலைமை நூலகர் முனைவர் காமாட்சி அம்மையாரின் ஒத்துழைப்புடன் நாடக நிகழ்ச்சியானது மிகச் சிறப்பாக நிகழ்ந்தப்பட்டது.

நாடகத்தில் டிஜிட்டல் பின்னணி காட்சியமைப்பு சிறப்பாக அமைந்திருந்தது. வழக்கமான திரைச்சீலைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் காட்சிகளைப் பயன்படுத்தி, கதையின் காலகட்டம், நிலப்பரப்பு மற்றும் காட்சிச் சூழலைப் பிரமாண்டமாக உருவாக்கியிருந்தனர்.
மேடையில் அமைக்கப்பட்ட எளிமையான அதே நேரத்தில் அழகிய செட் மற்றும் கதைக்களத்திற்குப் பொருத்தமான கலைப் பொருட்கள் மூலம் பாரியின் காலகட்டத்தைக் குறியீடுகளுடன் காட்சிப்படுத்தியிருந்தது நாடகத்தின் கலை வடிவமைப்புக்குக் கூடுதல் சிறப்பைச் சேர்த்தது.
நாடகத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக அதன் பின்னணி இசை அமைந்தது. சு. வேடராஜா இசை மற்றும் பின்னணி இசை அமைப்பு, காட்சிகளின் உணர்வுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, நாடகத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் மற்றும் வேள்பாரி என்று ஆரம்பிக்கின்ற மூன்று தீம் மியூசிக் போன்றவை திரைப்படப் பாடல்களுக்கு இணையான அழகியல் மற்றும் அளவுத்தன்மையுடன் அமைந்திருந்தன.
காதல், போர், வீரியம் உள்ளிட்ட வெவ்வேறு உணர்வுகளைக் கொண்ட காட்சிகளுக்கு இசை தனித்துவமான களத்தை உருவாக்கியது.

காதல் பாடல்கள், போர்க் காட்சிகள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் எனத் திரைப்படத்துக்கு இணையான பல்வேறு காட்சி அம்சங்களை மேடை நாடகத்தின் சாத்தியக்கூறுகளுக்குள் கொண்டு வந்து, கதையின் ஓட்டத்தில் தொய்வு ஏற்படாத வகையில் நிகழ்த்தியிருந்தனர். இதற்காக மேடைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநரின் பணியும் பாராட்டத்தக்கதாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் நடைபெற்றது.