காவல்துறை துணை ஆணையர் மோகித் கார்க் இது குறித்து அளித்த பேட்டியில்,” ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7:00 மணியளவில் மும்பையில் உள்ள ஒரு கால்பந்து கிளப்பிலிருந்து டைகர் ஷெராப் வெளியேறியபோது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது”என்றார். போலீஸார் இரண்டு பேரை பிடித்து சென்று விசாரித்து வருகின்றனர்.
10 தனிப்படைகள் அமைப்பு
துப்பாக்கிச்சூடில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிக்க மும்பை போலீஸார் 10 தனிப்படைகளை அமைத்து இருக்கின்றனர். குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் கடந்த சில நாட்களாகவே லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் டைகர் ஷெராப்பை கண்காணித்து வந்தது தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடந்தவுடன் டைகர் ஷெராப் உடனே ஓட்டுநர் இருக்கைக்கு சென்று தனது காரை காரில் இருந்தவர்களை வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். கார் முழுக்க ரத்தம் சிதறி இருந்தது. கார் கண்ணாடி உடைந்ததில் டைகர் ஷெராப்பும் காயம் அடைந்து இருந்தார்.
ரயிலில் தப்பிச்சென்ற குற்றவாளிகள்
இச்சம்பவத்தையடுத்து குற்றவாளிகளை உடனே கண்டுபிடிக்குமாறு போலீஸாருக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், கொலை முயற்சிக்குப் பிறகு குற்றவாளிகள் அந்தேரி ரயில் நிலையத்திற்குச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஜூஹுவிலிருந்து அந்தேரிக்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அந்த வாகனம் மும்பையைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இந்த இருசக்கர வாகனம் டி.என். நகர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.