
சட்டசபையில் முதல்வர் விஜய், ‘மக்கள் பணத்தைத் தொடமாட்டோம், தொடவும் விடமாட்டோம்’ என பேசியது வெறும் பேச்சாக மட்டுமல்லாமல் செயல்பாடாகவும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. முன்னாள் அமைச்சரின் வீடுகளில் ரெய்டு தெறிக்கிறது. மாஜி அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த பூகம்பங்கள் வெடிக்கக் காத்திருக்கின்றன.
அதிரடிகள் இதோடு நிற்காது என்கிறது கோட்டை வட்டாரம். கடந்தகால ஆட்சியில் நடந்த ஊழல்களை தோலுரிக்க ஸ்பெஷல் டீம் அமைத்த விஜய் அரசு, ஊழல் தொடர்பாக விரிவான ஃபைல்களை தயாரித்துவருகிறது. முதல்கட்ட கணக்கெடுப்பிலேயே 50 ஆயிரம் கோடிகளுக்கு மேல் ஊழல், பார்ட்டி ஃபண்ட் வசூல் என்று தெரியவர, அதிர்ச்சியடைந்த த.வெ.க. அரசு அடுத்தடுத்து மாஜி அமைச்சர்களை வளைக்க தயாராவதுதான் தமிழகம் காணவிருக்கும் அடுத்தகட்ட அரசியல் போர்!
இதுகுறித்து விவரங்கள் அறிந்த உயர்மட்ட பிரமுகர் ஒருவரிடம் பேசினோம்… “முதல்வராக விஜய் பொறுப்பேற்ற முதல் மாதத்திலேயே மகளிர் உரிமைத் தொகை தருவதற்கு அரசு நிர்வாகம் தடுமாறியது. இதைத் தொடர்ந்து நிதி நெருக்கடி குறித்து விஜய் ஆய்வு செய்தபோது, முந்தைய ஆட்சிகளில் நடைபெற்ற ஊழல்கள்
மீது நடவடிக்கை எடுத்தாலே கணிசமான அளவு நிதி நிலையை சீர் செய்துவிடலாம் என தெரியவந்திருக்கிறது.
ஆதாரங்களுடன் தயாராகும் மெகா ஃபைல்!
தொடர்ந்து, மாஜிக்கள் பற்றிய விவரங்களையும் சேகரிக்க இந்நாள் முன்னாள் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஸ்பெஷல் டீம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த டீம் ஆழமாக விசாரித்து, ஒரு மெகா ஃபைலை தயாரித்துள்ளனர். அந்த ஃபைலில் இருந்த ஊழல் டேட்டாக்களைப் பார்த்து அதிர்ந்தேபோனார் விஜய். கிட்டத்தட்ட 15 துறைகளில் மிக மிக குறைந்தபட்சமாகவே 50 ஆயிரம் கோடிக்கும் மேல் ஊழல் நடந்திருப்பதை இந்த ஸ்பெஷல் டீம் கண்டுபிடித்திருக்கிறது.
கட்டம் கட்டப்படும் அதிகாரிகள்!
மேலும், இந்த ஊழல்களில் அமைச்சராக இருந்தவர்கள் மட்டுமல்லாமல், அவர்கள் துறை சார்ந்த உயரதிகாரிகள் துணைபோனதும் முக்கியக் காரணம் என அந்த ஃபைலில் அண்டர்லைன் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, பத்திரப்பதிவு, போக்குவரத்து, சமூகநலம், சுகாதாரம், உள்ளாட்சி, அறநிலையத்துறை, மீன்வளம், பள்ளிக் கல்வி, பொதுப்பணி, கனிமவளம், பால்வளம், குடிசை மாற்று வாரியம், சி.எம்.டி.ஏ. என அரசு துறைகளில் இவர்கள் காட்டிய கைவரிசை கணக்கில் அடங்காதவை என்கிறார்கள்.
அப்ரூவர் ஆகும் காசி!
சிக்கலில் மேலிட பிரமுகர்…
மின்வாரியத்தில் 2021 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கு இடையே, 1.182.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரான்ஸ்ஃபார்மர்களை வாங்கியதில் 397 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருக்கிறது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம். தவிர, மின்வாரியத்துக்கு நிலக்கரி வாங்கியதிலும், தனியாரிடம் மின் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடுகள் நடந்ததும் தனிக்கணக்கு
மேலும், ஒப்பந்த ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தில் நடைபெற்ற முறைகேடு, Polled sub stations முறையில் 500 மெகா வாட்டுக்கு பினாமி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி, சோலார் மற்றும் காற்றாலை முதலீடுகளில் நடைபெற்ற முறைகேடுகள், மின் கண்டக்டர் கொள்முதலில் 1,000 கோடி முறைகேடு என விசாரணை சூடுபிடித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் காசி என்கிற அதிகாரியை அப்ரூவர் ஆக்கும் முயற்சியில் விஜிலென்ஸ் கிட்டத்தட்ட வெற்றிபெற்றுவிட்டது என்கிறார்கள். இவரது வாக்குமூலத்தை வைத்து அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, தங்கம் தென்னரசு, சிவசங்கர் தொடங்கி தி.மு.க. மேலிட பிரமுகர் வரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துவிடலாம் என்பது த.வெ.க. அரசின் கணக்கு பத்திரப்பதிவுத்துறை வசூல்!
எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் பணம் எண்ணும் மிஷின்!
பத்திரப் பதிவுத்துறை அமைச்சராக மூர்த்தி இருந்தபோது கிராமப்புறங்களில் 10 லட்ச ரூபாய், சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்து பதிவு செய்தவர்களிடம் கட்சி நிதி நேரடியாக வசூலிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த பார்ட்டி ஃபண்டை வசூலிப்பதற்கென்றே சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் இரண்டு அறைகளில் பணம் எண்ணும் மிஷின்களுடன் அமைச்சரின் ஆட்கள் இருந்தார்கள். அதேபோல் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட நிலக்குத்தகை மற்றும் கோயில் இடங்களில் நிலுவையில் உள்ள வாடகை வசூல் செய்வது மற்றும் கோயில் தொடர்பான பெரிய டெண்டர்களில் தி.மு.கவினர் புகுந்து விளையாடினர் எனவும் சொல்லப்படுகிறது.
கொடிக்கட்டி பறந்த கமிஷன்!
டாஸ்மாக் நிர்வாகத்தில், குறிப்பாக சென்னை உட்பட சில முக்கிய நகரங்களில் பார் டெண்டர் விடப்படவில்லை. அதேசமயத்தில் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு பார் உரிமையாளர்கள் செலுத்திய மாதாந்திரத் தொகை அப்படியே பார்ட்டி ஃபண்டாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதனால், சட்டவிரோதமாக பல பார்கள் இயங்கின. இதற்கு பலமுனைகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து 2024 தொடக்கத்தில் மீண்டும் பார்களுக்கு அரசுத் தரப்பில் இருந்து லைசென்ஸ் வழங்கப்பட்டன. சி.எம்.டி.ஏ. என சொல்லப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் நடந்தது அனைத்துமே ‘கட்டிங்’ தான். முன்பு, குடியிருப்புப் பகுதிகளில் ஒரு சதுர அடிக்கு 20 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்தது கடந்த ஆட்சியில் அப்படியே டபுள் ஆகியிருக்கிறது.
சத்துணவு முட்டை ஊழல்!
பள்ளிக் கல்வித்துறையின் திட்டங்களிலும் கமிஷன் கொடிகட்டி பறந்திருக்கிறது. புதிய தனியார் பள்ளிகள் தொடங்கவும், தடையில்லாச் சான்றிதழ் வாங்கவும் வாங்கிய கட்டிங் கொஞ்சநஞ் சமல்ல. சமூகநலத்துறையில் இலவச முட்டை, மீன்வளத்துறையில் மீனவர்கள் மேம்பாட்டு நிதி ஆகியவற்றிலும் ஊழல் நடந்திருக்கிறது. இதே நிலைதான், குடிசை மாற்று வாரியம் மற்றும் பால்வளத்துறையிலும்,
சொத்துக்குவிப்பு வழக்கில் 12 மாஜிக்கள்!
லஞ்ச ஒழிப்புத்துறையைப் பொறுத்தவரை, மக்கள் பிரதிநிதிகளின் ஊழலை நிரூபிக்க ஏதேனும் புகாரின்பேரில் வழக்குப் பதிந்து ஆதாரங்கள், சாட்சிகளை திரட்டுவது ஒரு வகை. ஒரு மக்கள் பிரதிநிதி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்பதை அடிப்படையாகக் கொண்டு வழக்குப் பதிவது இரண்டாவது வகை. இதில் இரண்டாவது வகையை தேர்ந்தெடுத்துள்ளது ஸ்பெஷல் டீம்.
1996-2001 தி.மு.க. ஆட்சி அமைச்சர் களான நேரு, பெரியசாமி, ரகுபதி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அடுத்து அமைந்த அ.தி.மு.க. அரசு வழக்குத் தொடர்ந்தது. இதையே உதாரணமாகக்கொண்டு, தற்போதும் தி.மு.க. அமைச்சர்கள், தேர்தல் நேரங்களில் தாக்கல் செய்த சொத்து அஃபிடவிட் அடிப்ப
டையில் சொத்துக் குவிப்பு வழக்கிற்கு ‘ரூட்’ எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிக்கலில் மாஜிக்கள்?
இதற்காக ஐந்து ஆண்டு இடை வெளியில் சொத்து, வருவாய் உயர்ந்துள்ள முன்னாள் அமைச்சர்கள் பட்டியல் வருமானவரி மற்றும் பதிவுத்துறையின் உதவியோடு தூசி தட்டி எடுக்கப் பட்டுள்ளது. பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் நேரு, காந்தி, டி.ஆர்.பி. ராஜா, சேகர்பாபு, கீதாஜீவன், சிவசங்கர், நாசர், செந்தில்பாலாஜி, மூர்த்தி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி, ரகுபதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதில், சொத்து ஆவணங்களின் அடிப்படையில் முதற்கட்டமாக, 12 பேரை ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்குவதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. இந்த சொத்துக்குவிப்பு வழக்குகளை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதற்கு ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் ஆகியோர் பெற்ற தண்டனைகளே சாட்சிகள் என விரிவாக சொல்லி முடித்தார்.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சக்திவேலிடம் பேசியபோது, “ஐந்து ஆண்டுகளில் ஒருவரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது என, அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முடியாது. சொத்து மதிப்பு உயர்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். காரணங்களை காட்டாவிட்டால், ஊழல் குற்றச்சாட்டிற்கான முகாந்திரமாக எடுத்துக்கொள்ள முடியும். அதற்கான ஆதாரங்களை திரட்டி லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிந்து தண்டனை பெற்றுத்தர முடியும்’ என்றார்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!