International
oi-Nantha Kumar R
பெய்ஜிங்: வீட்டில் விளையாடி கொண்டிருந்த 5 வயது நிரம்பிய சிறுமி திடீரென்று 50 கிராம் எடை கொண்ட தங்க்கட்டியை எடுத்து விழுங்கிய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. சிறுமியின் உடல்நிலை மோசமானதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ‘எண்டோஸ்கோபி’ சிகிச்சையில் தங்கக்கட்டி வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வடக்கு பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த சிறுமி வீட்டில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பாள். இந்நிலையில் தான் கடந்த 16ம் தேதி சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

உடனடியாக சிறுமியை அவரது பெற்றோர் அருகே உள்ள கிளினிக்கிற்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிறுமியின் உடல்நலம் தேறவில்லை.
இதனால் சிறுமியிடம், பெற்றோர் தீவிரமாக விசாரித்தனர். அப்போது தான் தங்கக்கட்டியை எடுத்து விழுங்கியதாக சிறுமி கூறினார். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது சிறுமியின் வயிற்றில் தங்க்கட்டி இருப்பது உறுதியானது. அந்த சிறுமி வீட்டில் இருந்த 4 சென்டிமீட்டர் நீளம் கொண்ட 50 கிராம் தங்க்கட்டியை விழுங்கியது தெரியவந்தது.
உடனடியாக சிறுமியின் உடலில் இருக்கும் தங்கக்கட்டியை அகற்ற வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதற்குள் சிறுமியின் உடல்நலம் மோசமானது. சிறுமி விழுங்கிய தங்கக்கட்டி அடர்த்தியாகவும், வழுவழுப்புடனும் இருந்தது. அது செரிமான பாதையில் சிக்கும் அபாயம் இருந்தது. அதுமட்டுமின்றி உடலின் பிற உறுப்புகளை சேதப்படுத்தும் என்று டாக்டர்கள் கூறினர்.
ஆபத்தான நிலையில் இருந்த சிறுமிக்கு மருத்துவமனையில் ‘எண்டோஸ்கோபி’ (endoscopy) சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தங்கக்கட்டி வெளியே எடுக்கப்பட்டது. சிறுமியின் வயிற்றில் தங்கக்கட்டி gastric cavity எனும் வயிற்றுக்குழியில் சிக்கியிருந்தது. இது மிகவும் குறுகிய இடமாகும். இந்த சவால்களுக்கு நடுவேயும் கூட டாக்டர்கள் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையின் மூலமாக தங்கக்கட்டியை வெற்றிக்கரமாக அகற்றினர்.
தங்கக்கட்டி அகற்றினாலும் கூட சிறுமி முழுமையாக குணமாகவில்லை. அவரை முழுமையாக குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
