மலேசியத் தமிழரான கதிரவன் தனியார் கம்பெனி ஒன்றில் மேனேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது ஓய்வு காலத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கும் விதமாக 65 வயதில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து உலக வெப்பமாதலைத் தடுக்கும் முயற்சியாக மரங்கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 2023 ஆம் ஆண்டு தொடங்கிய பயணத்தில் இதுவரை கிட்டதட்ட 105 நாடுகளுக்குச் சென்றுள்ளார். இவரின் இந்த நெகிழ்ச்சியான செயல்குறித்து அவரிடம் உரையாடத் தொடங்கினோம்.
எனக்கு பூர்விகம் வேலூர் தான். என் தந்தையை பார்த்துதான் சுற்றுச்சூழல் மீது ஆர்வம் வந்தது. சுற்றுச்சூழல் நமக்கு எவ்வளவு முக்கியம் என்ற விழிப்புணர்வை உலக மக்களுக்கு ஏற்படுத்த விரும்பினேன். அப்போதுதான், உலக நாடுகளுக்குச் சென்று மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்ற யோசனை வந்தது. மரத்தை நடுவது மட்டுமல்லாமல் அந்தந்த நாட்டு சமூக ஆர்வலர்களிடம் அந்த மரங்களை பாதுகாக்கும் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு வருகிறேன். அதில் பலர் எனக்கு அச்செடிகள் வளர்ந்தவுடன் வாட்ஸ் அப்பில் புகைப்படங்களை அனுப்பி வருகின்றனர். உலக நாடுகள் பயணம் என்பது ஒரு நாள் இரண்டு நாள் திட்டங்களில் முடிவது அல்ல. பயணம் மேற்கொள்ளும்போது எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு மூன்று மாதங்கள் அமர்ந்து எந்தெந்த நாடுகளுக்கு எவ்வழியாக செல்லலாம், எவ்வாறு செல்வது சரியாக இருக்கும் என்பதைப் பற்றி யோசித்து வரைபடத்தை உருவாக்கினேன்.
இந்தியாவில் வழிபார்ப்பதற்கு கூகுள் மேப் பயன்படுத்துவது போல வெளிநாடுகளில் Waze, Yandex Map போன்றவற்றை பயன்படுத்துவது உண்டு. வெளிநாடுகளில் வழி பார்ப்பதற்கு எனக்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவிகரமாக இருந்தது. அதேபோல, அவர்கள் மொழியைப் புரிந்து கொள்ளவும், நான் அவர்களிடத்தில் உரையாடுவதற்கும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது கூகுள் டிரான்ஸ்லேட்டர் (Google Translator) தான். என் குடும்பத்திற்கு முதலில் என் பயணத்தின் மீது பெரிய ஆர்வம் இல்லாமல் இருந்தாலும் தற்போது என்னைப் புரிந்து கொண்டு மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். என்னுடைய அந்த பயணத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது பரமேஸ்வரா (இருசக்கர வாகனத்தின் பெயர்). என்னுடைய இரசக்கர வாகனத்தின் மாடல் BMWR1200GSA.
நான் 2017-ல் இந்த வாகனத்தை வாங்கும்போது இந்த வாகனத்தின் விலை 27 லட்சம். தற்போது வரை நான் 2,00,600 கிலோமீட்டர்கள் பயணித்துள்ளேன். இந்த பயணத்திலேயே என்னை மிகவும் பிரமிக்க வைத்த நிகழ்வு மங்கோலியாவில் ஒரு நாள் பயணத்தின் போது அன்று மணற்புயல் ஏற்படும் என்பது தெரியாமல் நான் அங்கிருந்து வேற இடத்திற்குச் செல்லத் தொடங்கினேன். திடீரென்று மணற்புயல் ஏற்பட்டு கண் திறக்கமுடியாத அளவிற்கு நிலைமை மோசமாகியது. அப்போது வாகனத்தை நிறுத்திவிட்டு நான் அதனடியில் அமர்ந்து விட்டேன். அப்போது எங்கிருந்தோ வந்த வெள்ளை நிற கார் என்னை வழிகாட்டி கூட்டிச்சென்றது. சிறிது நேரம் கழித்து மணற்புயல் நின்றதும் அந்த காரில் இருந்தவர்களுக்கு நன்றி சொல்லலாம் என்று அந்த காரை பின் தொடர்ந்தேன். ஆனால், அந்த கார் திடீரென்று மாயமாக மறைந்துவிட்டது. அந்த நிமிடம் கடவுள் வந்து என்னை காப்பாற்றியது போல் இருந்தது.” என்று அவரின் பயணத்தின் போது நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்தார்.