96 Movie Re-Release: ராம் – ஜானுவின் காதல் மேஜிக் | முழு பார்வை \ 96-movie-re-release-ram-jaanu-love-story-untold-facts

Spread the love

திரைப்படத்தின் ஆன்மா

`சேராத காதலுக்குத்தான் ஆயுள் அதிகம்’ என்ற வரியை சொன்ன படம். ஒருவரை ஒருவர் தொட்டு அணைத்துக் கொள்ளாமலேயே, விரல் நுனியின் தீண்டலும் கண்களின் மெளனமுமே மிகப்பெரிய காதலை உணர்த்த முடியும் என்பதற்கு இப்படம் சாட்சி.

22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும்போது, ஜானு திருமணமானவள் என்பதை உணர்ந்து ராம் காட்டும் பக்குவமும், தங்களுக்குள் இருந்த காதலை நினைவுகளால் மட்டுமே வருடிப் பார்க்கும் அந்த ஓர் இரவின் பயணமும் காதலுக்குரிய உச்சகட்ட கண்ணியம்.

விடியற்காலை விமான நிலையத்திற்குச் செல்லும் முன், ஜானு ராமின் ஆடைகளை மடித்து வைத்து, தனது துப்பட்டாவை அவனுக்காக விட்டுச் செல்லும் அந்தக் காட்சி, பார்க்கும் எவரையும் உருக வைத்துவிடும்.

வயலின் வழியே பேசிய உணர்வுகள்

’96’ திரைப்படத்தின் உயிரோட்டமே அதன் இசைதான். ஒரு காதல் படத்தில் வசனங்கள் சொல்ல முடியாத பல விஷயங்களை மெளனம் பேசும்; ஆனால் ’96’-ல் அந்த மெளனத்திற்கு மொழியாக அமைந்தது கோவிந்த் வசந்தாவின் வயலினும் இசையமைப்பும் மட்டுமே.

ஒரு மனிதனின் தொண்டைக்குள் தேங்கி நிற்கும் அழுகையையோ, வெளிப்படுத்த முடியாத காதலையோ ஒரு வயலின் நரம்பால் எந்த அளவிற்கு வெளிக்கொணர முடியுமோ, அந்த அளவிற்கு இப்படத்தில் பயன்படுத்தியிருப்பார்.

22 வருடங்களுக்குப் பிறகு ராமும் ஜானுவும் பள்ளி வளாகத்தில் முதன்முதலில் சந்திக்கும் காட்சியில், எந்த ஆர்ப்பாட்டமான இசையும் இருக்காது; மெல்லிய ஒரு வயலின் இழுவை மட்டுமே அவர்களின் இதயத் துடிப்பைப் பார்வையாளர்களுக்குக் கடத்தும்.

காட்சிகளில் நடிகர்கள் அமைதியாக இருக்கும் இடங்களில் எல்லாம், கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை அவர்களின் மனசாட்சியாக மாறி உரையாடியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *