97-ஐ தொடக்கூடாது.. ஆக்ரோஷமாக களம் இறங்கிய ரிசர்வ் வங்கி .. சாமானியர்கள் அறிய வேண்டியவை | RBI has now stepped in aggressively to prevent a sudden drop in the value of the Indian rupee

Spread the love

Business

oi-Velmurugan P

சென்னை: ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயின் மதிப்பில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுக்கத் தற்போது ஆக்ரோஷமாகக் களத்தில் இறங்கியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 97-ஐ தொடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சாதாரண மக்களாகிய உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதைப் பங்குச்சந்தை நிபுணர் ஒருவர் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் கூறியுள்ளார்.

அவர் தனது பதிவில் மேலும் கூறுகையில், “நேரடியாகச் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் வெளிநாட்டுக்குச் சுற்றுலா போகத் திட்டமிட்டாலோ அல்லது உங்கள் மகன்/மகள் வெளிநாட்டில் படிக்கிறார்கள் அவர்களுக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்றாலோ, இப்போதைக்கு நிலைமை இன்னும் மோசமாகாமல் ரிசர்வ் வங்கி தடுத்து நிறுத்தியுள்ளது. ஆனால் இது எவ்வளவு நாளைக்கு என்று தெரியவில்லை.

rbi rupee Doller

ஏனென்றால், கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 51 பில்லியன் டாலர் அளவுக்கு நமது அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. இது மிகப்பெரிய தொகையாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து இந்த ஆண்டில் 30 பில்லியன் டாலருக்கு மேல் வெளியே எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

இதனால் ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள புதிய விதிகளால் தொழிலதிபர்கள் தான் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். ரூபாயின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும் போது, இறக்குமதியாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளச் செய்யும் ‘ஹெட்ஜிங்’ (Hedging – அபாய மேலாண்மை) செய்வதற்கான செலவு அதிகமாகும். 2 மில்லியன் டாலருக்கு மேல் செய்யும் ஒவ்வொரு ‘டெரிவேட்டிவ்’ (Derivative – முன்கூட்டியே குறிப்பிட்ட விலையில் வாங்கி கொள்வதாகச் செய்யும் ஒப்பந்தம்) பரிவர்த்தனைக்கும் 20% பணத்தைக் கையிருப்பாக (Reserve) வைக்க வேண்டும் என்று கூறியது சாதாரண விஷயம் இல்லை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ரூபாயின் மதிப்பைக் காப்பாற்ற ரிசர்வ் வங்கி ஒரு பெரிய தடுப்புச் சுவரை எழுப்பியுள்ளது. ஆனால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையாமலும், வெளிநாட்டுப் பணம் உள்ளே வராமலும் இருந்தால், இந்தத் தடுப்புச் சுவர் எவ்வளவு அழுத்தத்தைத் தாங்கும் என்று பயமாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

பங்குச்சந்தை நிபுணர் கூறியது போல், ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயின் மதிப்பில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுக்கத் தொடர்ச்சியாகக் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிவதைத் தடுக்க, ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள டாலர்களைச் சந்தையில் விற்று ரூபாயின் மதிப்பைப் பாதுகாக்கிறது.

rbi rupee Doller

அதேபோல் கடந்த சில மாதங்களில், ரூபாயின் மதிப்பைக் காப்பாற்ற ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலாவணி கையிருப்பில் இருந்து பெருமளவிலான டாலர்களைச் சந்தையில் புழக்கத்தில் விட்டது. இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது என்ற பங்குச்சந்தை நிபுணர் கூறிய தகவல் உண்மையாகும். அதேபோல் வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து தொடர்ந்து தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருவதும் கசப்பான உண்மை. அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகமாக இருப்பது மற்றும் உலகளாவிய பொருளாதாரச் சவால்கள் காரணமாக, அவர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் அமெரிக்கச் சந்தைக்குத் தங்கள் பணத்தை மாற்றி வருகிறார்கள். இதுதான் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற முக்கியமான காரணமாகும்.

ஒருவேளை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தால், வெளிநாட்டுச் சுற்றுலா செல்லத் திட்டமிடுபவர்கள் மற்றும் வெளிநாட்டில் படிக்கும் பிள்ளைகளுக்குப் பணம் அனுப்புபவர்கள் இனி அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். அதேபோல் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பதால், உற்பத்திச் செலவு உயர்ந்து லாபம் குறையும் என்பதால் இறக்குமதியாளர்களும் தொழிலதிபர்களும் சிக்கலான நிலையை எதிர்கொள்கிறார்கள். அவர்களைக் காக்கவே ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *