அதே நேரத்தில், அங்கு வாழும் ஒவ்வொரு குடும்பத்தின் குடியிருப்பு, வாழ்வாதாரம், நில ஆவணங்கள், சட்டப்படி கோரக்கூடிய உரிமைகள் ஆகியவற்றைத் தனித்தனியாக ஆய்வு செய்யாமல், அனைவரையும் ஒரே சொல்லில் ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று அழைப்பது எவ்வகையில் நியாயம்?
மக்கள் வாழும் வீடும், அவர்கள் உழைக்கும் நிலமும், குழந்தைகள் பயிலும் பள்ளியும், வெறும் கணக்கெடுப்புப் பதிவுகளா? காடுகளைக் காப்பதற்கான பொறுப்பை நிறைவேற்றும்போது மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுடையதா? இல்லையா?
இவ்விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், மலைக்கிராம மக்களின் உண்மை நிலையை முழுமையாக முன்வைப்பதும், அவர்களுக்கு உள்ள சட்டப்பூர்வமான வழிவகைகளைப் பயன்படுத்துவதும் தமிழ்நாடு அரசின் கடமை. மக்களின் கோரிக்கைப்படி சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பை தவெக அரசு உடனடியாக சட்ட ஆய்வு செய்ய வேண்டும்.
வன உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள், பட்டா மற்றும் பிற ஆவணங்கள் மீது வெளிப்படையான விசாரணை நடத்தி, பாதிக்கப்படும் குடும்பங்களின் கருத்தைக் கேட்டு முடிவெடுக்க, தொன்றுதொட்டு வாழும் மக்களின் வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டும்.
வீடுகளை விட்டு வெளியேறுமாறு மக்களை அச்சுறுத்துவதையும், அன்றாடப் போக்குவரத்து மற்றும் அடிப்படைத் தேவைகளுக்குத் தேவையற்ற இடையூறு ஏற்படுத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். போராட்டத்தில் மயக்கமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியை உறுதி செய்வதுடன், குடிநீர், மின்சாரம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் மலைக்கிராம மக்களுக்குத் தடையின்றிக் கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.