எங்கும், எல்லாவற்றிலும் ஏ.ஐ., என்று இப்போது உலகம் மாறி வருகிறது.
ஒரு லேப்டாப், விட்டுவிட்டுக் கிடைக்கும் இன்டர்நெட் கனெக்ஷன், ‘சாதித்துவிட வேண்டும்’ என்கிற ஆர்வம் ஆகிய மூலதனத்தை வைத்து ஏ.ஐ., உலகில் தனக்கெனத் தனி முத்திரையை பதித்திருக்கிறார் ஆயுஷ் சிங்.
யார் இந்த ஆயுஷ் சிங்?
பெங்களூரைச் சேர்ந்த இவருக்குத் தற்போது வயது 17. அதாவது இது பள்ளியின் இறுதி ஆண்டு படிக்கும் வயது. இந்த வயதில் ஆயுஷ் சிங் மாதம் ரூ.18 லட்சம் சம்பாதிக்கிறாராம். ஆச்சர்யமாக இருக்கிறதா… பாட்காஸ்ட் ஒன்றில் ஆயுஷ் சிங் தனது பயணத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.
13 வயதில் ஆரம்பித்த AI பயணம்!
“கொரோனா காலத்தில் AI மற்றும் Machine Learning-ஐ ஆன்லைனில் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். அப்போது எனக்கு வயது 13.
எங்கள் குடும்பம் பொருளாதார நெருக்கடி உள்ள குடும்பம். இதனால், விலையுயர்ந்த கோர்ஸ் படிக்க முடியவில்லை.
இதனால், ஏற்கெனவே இருந்த பழைய கோர்ஸ் ஒன்றைத் தேர்வு செய்து படித்தேன். ஒரு லேப்டாப், விட்டுவிட்டுக் கிடைக்கும் இன்டர்நெட். இதுதான் என்னுடைய கிளாஸ்ரூம்.
ஆரம்பத்தில் Machine Learning-ன் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டேன்.
பிசினஸில் காலடி
படித்தால் மட்டும் போதுமா? அதைச் செயல்படுத்த வேண்டாமா? செயல்பாட்டிற்குச் சர்வதேச நிறுவனங்களை அணுகினேன். ஆரம்பத்தில், எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால், தொடர்ந்து முயன்று வந்ததால், சில மாதங்கள் கழித்துச் சர்வதேச ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வாய்ப்பு வழங்கின. அதிலிருந்து என்னுடைய தொழில் பயணம் தொடங்கியது.
14 வயதில் நான் ஒரு ஏ.ஐ. கோர்ஸை உருவாக்கினேன். அதற்கு எம்.ஐ.டியிலிருந்து எனக்குப் பாராட்டு கிடைத்தது.

அதன்பின், Antern என்கிற ஏ.ஐ. நிறுவனத்தை உருவாக்கினேன். அடுத்ததாக, Second Brain Labs நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் ஆனேன்” என்று கூறும் ஆயுஷ் சிங்கிற்கு ஏ.ஐ.யில் டேட்டா சயின்டிஸ்ட், MLOps இன்ஜினீயர், ஏ.ஐ ஃப்ரீலான்சர், ஏ.ஐ. கன்சல்டன்ட், ஏ.ஐ. நிறுவனத்தின் நிறுவனர் என்று பல முகவரிகள்.
அட்வைஸ்
ஏ.ஐ. கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு, “ஏ.ஐ.-ல் டீப் லேர்னிங்-ல் மட்டும் கவனம் செலுத்தாதீர்கள். முதலில் ஏ.ஐ.-க்குத் தேவையான அடிப்படைக் கணிதக் கருத்துகளைப் புரிந்துகொள்ளுங்கள்.
தற்போது ஏ.ஐ. துறையில் Generative AI மற்றும் MLOps அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அதைக் கவனியுங்கள்” என்பதுதான் ஆயுஷ் சிங்கின் அட்வைஸ்.