Ajith Pawar: `அஜித் பவார் மரணம்; உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை வேண்டும்' – மம்தா பானர்ஜி

Spread the love

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (புதன்கிழமை) காலை மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற நிலையில், பாராமதி விமான நிலைய ஓடுதளம் அருகில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவார் மரணத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விபத்தில் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

அஜித் பவார்
அஜித் பவார்

இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் கேள்விக்குறியாக இருப்பது கவலையளிக்கிறது.

குறிப்பாக, ஆளும் கட்சியில் இருந்த ஒருவருக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை என்ன என்ற அச்சம் எழுகிறது. அஜித் பவார் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி, மீண்டும் தனது தாய் கட்சிக்கே திரும்பப் போகிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனால், இந்தச் விபத்தில் ஐயம் எழுகிறது.

எனவே, இந்த விபத்து குறித்து மற்ற அரசு விசாரணை அமைப்புகளை விட, உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் முறையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும். எங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது. மற்ற விசாரணை அமைப்புகள் தங்களின் சுதந்திரத்தை இழந்துவிட்டன. எனவே, வேறு எந்த அமைப்பின் மீதும் இல்லை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மம்தா பானர்ஜி மட்டுமில்லாமல், காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ், வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்ட பலரும் முறையான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *