நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய உதய் சாமந்த், அத்தகைய நடவடிக்கை எதுவும் நடைபெறவில்லை என்று கூறினார். அதேசமயம் மகாவிகாஷ் அகாடியை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவில் இணைய ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் மொத்தமுள்ள 60 எம்.எல்.ஏ.க்களில் 37 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதற்கிடையே மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய் வதேட்டிவார் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேரப்போவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இது குறித்து சிவசேனா அமைச்சர் உதய் சாமந்த் கூறுகையில்,”விஜய் வடேட்டிவார் எங்கள் மிகச் சிறந்த நண்பர். அவர் ஏக்நாத் ஷிண்டேயின் நெருங்கிய நண்பரும் கூட. அவர் எங்களுடன் இணைவது குறித்து வதேட்டிவார் ஒருபோதும் பேசியதில்லை.
ஆனால், விதர்பாவைச் சேர்ந்த அவரைப் போன்ற ஒரு செல்வாக்குமிக்க தலைவர் ஷிண்டேவுடன் இணைந்து பணியாற்ற முடிவெடுத்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஏக்நாத் ஷிண்டே தலைமையேற்க ஏற்க வேண்டும் என்று மகாவிகாஷ் அகாடி எம்.எல்.ஏ.க்களே விரும்பினால், அதை நாங்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்? அவர்கள் கட்சியில் இணைய முன்வந்தால், வர வேண்டாம் என்று நாங்கள் ஏன் சொல்ல வேண்டும்?” என்றும் அவர் கூறினார்.
ஆனால் இதனை விஜய் வதேட்டிவார் கடுமையாக மறுத்துள்ளார். வதேட்டிவார் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் விரிவான பதிவு ஒன்றின் மூலம் பதில் கொடுத்துள்ளார். அதில்,”அவதூறு பரப்பும் அரசியலை நிறுத்துங்கள். நான் காங்கிரஸின் விசுவாசமான தொண்டன். கட்சி வழங்கிய ஒவ்வொரு பொறுப்பையும் நேர்மையுடன் நிறைவேற்றியுள்ளேன். மக்களின் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறேன்.”என்று குறிப்பிட்டுள்ளார்.
சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிபா தனோர்கருடன், விஜய் வதேட்டிவாருக்கு கட்சிக்குள் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுள்ளது. சந்திரபூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டை யார் கையில் வைத்திருப்பது என்பது குறித்த இவர்களின் மோதல் பொதுவெளியிலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுவே வதேட்டிவார் சிவசேனாசேனாவில் இணையக்கூடும் என்ற வதந்திகளுக்கு காரணமாகும்.