BB Tamil 9 Day 69: ‘கேக்கல… சத்தமா… கேக்கல.. ‘ – பிகில் விஜய்யாக மாறிய விசே

Spread the love

மறுபடியும் அதேதான் ‘இவரே பாம் வைப்பாராம். அப்புறம் இவரே எடுப்பாராம்’ என்கிற மாதிரிதான் பிக் பாஸ் ஷோ போய்க்கொண்டிருக்கிறது.

பாரு, கம்ருதீன் போன்ற அடாவடி போட்டியாளர்களின் சேட்டைகளை, அதனால் ஏற்படும் சண்டைகளை போதுமான அளவிற்கு வளரவிட்டு வார நாட்களில் கன்டென்ட் தேற்றுவது. பிறகு வீக்கெண்ட் ஷோவில் இவர்களே அதை ஹோஸ்ட் மூலமாகக் கண்டிப்பது.

‘செம சூப்பரா கேட்டாருப்பா’ என்று பார்வையாளர்களை பரவசப்படுத்துவது. இதுவொரு வணிக தந்திரம்.

பிக் பாஸ், ஹோஸ்ட், சக போட்டியாளர்கள் என்று எவரையும் மதிக்காத பாரு மற்றும் கம்முவை உடனே வெளியே அனுப்பவேண்டும். செய்வார்களா? செய்யமாட்டார்கள். TRP இறங்கிவிடும். நெகட்டிவ் கன்டென்ட்டிற்குத்தான் இன்றைய தேதியில் வணிக மதிப்பு இருக்கிறது. வேறு திறமையான போட்டியாளர்களை உள்ளே இறக்கினால் இதை சமன் செய்யமுடியும்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 69

“நான் ரொம்ப போல்டான பொண்ணு’ன்னு சொல்லிட்டு உள்ளே போனவங்கள்லாம் மைக்ல பேச பயப்படறாங்க. அவங்க பண்ண தப்புக்கு வீடே தண்டனை அனுபவிக்குது. ஆனா இவங்களுக்கு அந்த கில்ட்டே இல்ல. வாங்க விசாரிப்போம்” என்று ஃபயர் மோடில் உள்ளே சென்றார் விசே.

“எல்லோரும் டீ காஃபி குடிக்காம நல்லாயிருக்கீங்களா?” என்று சர்காஸமாக விசாரித்துவிட்டு நேரடியாக பாரு -கம்முவிடம் வந்தார். “பிக் பாஸிற்கும் மத்தவங்களுக்கும் உங்க பிரைவஸியை மதிக்கத் தெரியல. அதனால உங்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கும். அந்த பிரைவஸியை நான் தரேன். ரெண்டு பேரும் மைக்கை கழட்டி வெச்சிடுங்க” என்றார் விசே.

BB Tamil 9 Day 69
BB Tamil 9 Day 69

சாக்லேட் பிடுங்கப்பட்ட குழந்தைபோல இந்த எபிசோடு முழுக்க முகத்தை வைத்துக்கொண்டிருந்த பாரு, ‘ஸாரி சார்’ என்று உருக்கமாக நடிக்க முயன்றார். ஆனால் நடிப்பு வரவில்லை. பாருவாவது பரவாயில்லை. ஆனால் கம்முவோ நெஞ்சழுத்தக்காரன்போல, பிரேக்கில் எல்லாம் மைக்கை மாட்டி அட்ராசிட்டி செய்தார்.

“மத்தவங்க சொல்லுங்க… நீங்க அவங்களுக்கு ஒரு தண்டனை கொடுத்தீங்க. அவங்க அதுக்கு கில்ட்டா ஃபீல் பண்ணாங்களா?” என்று விசாரிக்க ஆரம்பித்தார். முதலில் எழுப்பியது வினோத்தை. “அது வந்து சார்.. அவங்க அப்ப குற்றவுணர்ச்சியா இருந்தாங்க” என்று மழுப்பலான பாணியில் வினோத் பதில்சொல்ல விசேவிற்கு சரியான கோபம் வந்தது. “ஓ.. நீங்க கம்முவோட நெருங்கிய நண்பர்.. இல்லையா.. உக்காருங்க” என்று அமர வைத்தார்.

பாரு -கம்மு – வினோத் – அமித் – நால்வரையும் ரோஸ்ட் செய்த விசே

வினோத்திற்கு ஊமைக்குத்தாக விழுந்ததால் மற்ற அனைவருமே பாரு கம்மு ஜோடியின் சேட்டைகளை எரிச்சலுடன் சொன்னார்கள். சான்ட்ராகூட பாருவிற்கு எதிராக சாட்சியம் சொன்னார். மாற்றிச்சொன்னால் விசே பின்னி விடுவார் என்கிற பயம். விக்ரம் எழுந்தபோது கைத்தட்டல். “பிக் பாஸை மதிக்கறதுக்கு ஒரு வாய்ப்பு கெடைச்சது. ஆனா அவங்களோ நாங்க எக்ஸ்ட்ரா வேலைகொடுக்கற மாதிரி ஃபீல் பண்ணாங்க” என்றார் விக்ரம்.

அனைவரின் சாட்சியங்களையும் கேட்ட விசே “ஏம்மா பாரு. கெமிகூட கேம் ஆடினப்பகூட நீங்க மைக்கை கழட்டி வெக்கலை. ஆனா ஜாக்கிங் போகும்போது மட்டும் மைக் தொந்தரவா இருக்கா? உங்களுக்கு குற்றவுணர்ச்சி கொஞ்சம்கூட இல்ல. ‘கஞ்சி குடிச்சு வாழ்ந்தவங்கதானேன்னு எகத்தாளமா பேசியிருக்கீங்க.. இதே விஷயம் உங்களுக்கு நடந்தா சும்மா இருப்பீங்களா..?” என்று வெடிக்க முகத்தை பாவமாக வைத்துக்கொண்டார் பாரு.

BB Tamil 9 Day 69
BB Tamil 9 Day 69

“கோர்ட் ரூம்லகூட நாங்க எல்லாம் வந்துட்டோம். இவங்க வெளிய வரல. பிக் பாஸ் அறிவிப்பு வந்தப்ப எங்களுக்கு பகீர்ன்னு ஆயிடுச்சு” என்றார் சபரி.

“ரெண்டு பேர் சேர்ந்து ஒட்டுமொத்த வீட்டையே வெறுப்பேத்தி இருக்காங்க.. நீங்க எல்லாம் என்னதான் பண்ணீங்க.. நாளைக்கு சோறும் கட் பண்ணாதான் கேள்வி கேப்பீங்களா.. ?” என்று காட்டமாக கேட்ட விசே “பாரு.. உங்களுக்கு சொல்ல ஏதாச்சும் கருத்து இருக்கா.. சொன்னா மட்டும் என்ன ஆகப் போவுது.. அடுத்த வாரமும் இதையேதான் பண்ணப் போறீங்க.. இருந்தாலும் சொல்லுங்களேன்.. கேப்போம்” என்றார்.

‘கேக்கல.. சத்தமா.. கேக்கல.. ‘ – பிகில் விஜய்யாக மாறிய விசே

மைக் இல்லாமல் பாரு பேசியது சரியாக கேட்கவில்லை. அப்படியே மெலிதாக கேட்டாலும் “சத்தமா பேசுங்க பாரு.. சரியா கேக்கலை.. மக்களே உங்களுக்கு கேட்குதா.. எங்களுக்கும் கேக்கலை. பாரு பேசறது சரியா கேக்கலைன்றதால ஒரு பிரேக்” என்று சர்காஸமாக சொல்லி விட்டு சிரிப்புடன் அகன்றார் விசே. கூட்டம் வெடித்துச் சிரித்தது.

பிரேக்கில் அனுமதி பெறாமல் மைக்கை எடுத்து மாட்டிய கம்மு, “ஏண்டா.. டேய்.. இவ்வளவு நேரம் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டுப் போனாரே.. அப்பக்கூட திருந்த மாட்டியா?” என்கிற மாதிரி மற்றவர்கள் ஆட்சேபிக்க, அரை மனதாக மைக்கை கழட்டி வைத்தார்.

அடுத்த தலைப்பு திவ்யா பிரச்சினை. “என்னம்மா நடந்தது. சொல்லுங்க?” என்று ஆரம்பித்தார் விசே. கம்ருதீன் பேசிய ஆட்சேபகரமான வார்த்தைகளை நடந்த சம்பவத்துடன் பட்டியலிட்டார் திவ்யா.

BB Tamil 9 Day 69
BB Tamil 9 Day 69

“அந்தச் சமயத்துல கூட யார்லாம் இருந்தது?” என்று விசே கேட்க அமித், சான்ட்ரா, வினோத், ரம்யா (ஜெயில்) என்று பதில் வந்தது.

அமித்தை எழுப்பிய விசே “நீங்கதானே வீட்டு தல. இத்தனை பெரிய பிரச்சினை போயிட்டு இருந்தது. நீங்க பாட்டுக்கு மிக்சர் சாப்பிட்டுட்டு உக்காந்து இருக்கீங்க” என்று கேட்க “சார்.. நான் கேட்டேன் சார்..” என்று பலவீனமாக ஆரம்பித்தார் அமித். “நாங்களும் வீடியோவை பார்த்துட்டுதான் வந்திருக்கோம். அதனாலதான் திவ்யால இருந்து ஆரம்பிச்சேன். எங்களுக்கு ஆர்டர் மறக்காது. வியானா உங்க பொண்ணு மாதிரின்னு சொல்றீங்க. அவங்களுக்கு இப்படி நடந்தாலும் வேடிக்கை பார்ப்பீங்களா.. அநியாயத்தை யார் வேணா கேக்கலாம். இந்தப் பிரச்சினைல வார்த்தைகள் எல்லை மீறிப் போச்சு” என்றார்.

பிரச்சினையை வேடிக்கை பார்த்தவர்களுக்கு விழுந்த ஊமைக்குத்து

அடுத்ததாக ரம்யா பக்கம் நகர்ந்த விசே “போன வாரம் கம்ருதீன் உங்களை வாடி போடின்னு சொன்னப்ப.. திவ்யாதானே.. உங்களுக்கு சப்போர்ட்டுக்கு வந்தாங்க. ஒரு பொண்ணுக்கு நடக்கறத உங்களால கேக்க முடியாதா?” என்று மடக்கிய விசே, அடுத்ததாக சான்ட்ராவை எழுப்பினார்.

‘அய்யோ.. பாவம்.. எனக்கு ஒண்ணும் தெரியாது’ என்கிற மோடில் எழுந்தார் சான்ட்ரா. “பிரஜினுக்கு இப்படியொரு விஷயம் நடந்தா, நீங்க வேடிக்கை பார்ப்பீங்களா.. திவ்யா இடத்துல உங்களுக்கு நடந்திருந்தா ?” என்று கேட்க சான்ட்ராவிடம் பதில் இல்லை.

அடுத்ததாக வினோத். “நான் எவ்வளவோ சொன்னேன் சார். மன்னிப்பு கேட்க நான்தான் கூட்டிட்டு வந்தேன்” என்று அவர் சொல்ல, உருக்கமாக கண்ணீர் விடுவது போல் பாவனை செய்தார் விசே. “நாங்கதான் பார்த்தமே.. மன்னிப்பு கேட்க வந்துட்டு.. ரெண்டு பேரும் சிரிக்கறீங்க.

BB Tamil 9 Day 69
BB Tamil 9 Day 69

உங்க நண்பர் கம்ருதீன்.. உங்களையே அவமதிக்கறாரு.. அது கூட உங்களுக்குப் புரியல.. கோர்ட்ல உங்களுக்கு ஒரு பிரச்சினைன்னா மட்டும் எப்படில்லாம் குதிச்சீங்க.. அந்தக் கோபம் இப்ப எங்க போச்சு?” என்று விசே கேள்விகளால் மடக்க வினோத்திடம் பதில் இல்லை.

கம்ருதீன் கையைத் தூக்க “நீங்கதானே இந்த முடிவை எடுத்தீங்க.. செஞ்ச தவறுக்கு வருந்தியிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா.. இந்த ஷோவிற்கு எதுக்கு வந்தீங்க.. அந்த வேலையைப் பார்க்கலையே.. நாங்க என்ன உங்க வீட்லயா வந்து எட்டிப் பார்த்தோம்.. போன வாரம்தானே உங்களைப் பாராட்டினேன். நீங்க பண்ற செயல்களால நீங்களேதான் உங்க மதிப்பை இழக்கறீங்க.. திவ்யாவை என்ன வார்த்தைகள்லாம் பேசினீங்க. கலாயக்கறதுக்கு அவங்க உங்க பிரெண்ட் கிடையாது. போடி வாடின்னுல்லாம் பேச உங்களுக்கு உரிமை இல்லை” என்று எரிச்சலுடன் கூறி விட்டு பிரேக்கில் சென்றார் விசே.

மைக்கை திரும்பவும் மாட்டி அட்ராசிட்டி செய்த கம்ருதீன்

தனக்கு எதிராக சாட்சியம் சொன்ன அரோவிடம் “ஓ.. இப்ப நல்லவங்களா ஆயிட்டிங்களா?” என்று மீண்டும் மைக்கை மாட்டி அட்ராசிட்டி செய்தார் கம்மு.

பிரேக் முடிந்து திரும்பிய விசே “கம்மு.. கம்முன்னு இருக்க வேண்டியதுதானே.. ஏன் மைக்கை எடுத்தீங்க… பதில் சொல்லுங்க” என்று கேட்க, மைக் இல்லாமல் கம்ரு பேசியது கேட்கவில்லை. ‘கேக்கலை. சத்தமா..’ என்கிற விளையாட்டை மீண்டும் ஆரம்பித்தார் விசே.

அடுத்தது கேப்டன்ஸி பற்றிய விசாரணை. ‘வீட்டு தல எப்படியிருந்தாரு?’ என்று கேட்க வழக்கம் போல அனைவரும் கழுவிக் கழுவி ஊற்றினார்கள். “நான் கேட்டப்போ.. நல்லா இருக்குன்னுதான் சொன்னாங்க’ என்று பரிதாபமாக விளக்கம் கொடுத்தார் அமித். ‘அது நல்லா பண்ணுதுக்கு.. இது நல்லா பண்ணாததுக்கு. ரெண்டும் வேற வேற..” என்று எரிச்சலானார் விசே.

BB Tamil 9 Day 69
BB Tamil 9 Day 69

“பாருவும் கம்முவும் கொடுத்த தண்டனையை ஒழுங்கா செஞ்சாங்களா?” என்று விசாரிக்க “சில விஷயங்கள் பண்ணாங்க” என்று வாயை விட்டு மாட்டிக் கொண்டார் அமித். மற்றவர்களை விசாரிக்கும்போது இருவரும் ஏறத்தாழ ஒன்றுமே செய்யவில்லை என்பது தெரிந்தது. செய்த சிறிய வேலைகளைக் கூட அரைமனதாகவும் அரைகுறையாகவும் மற்றவர்களை கரித்துக்கொட்டிக் கொண்டே செய்தார்கள் என்பதும் தெரிய வந்தது.

“ஓ.. அப்படின்னா அமித் சொல்லும்போது மட்டும் செஞ்சாங்களா.. மத்தவங்க சொல்றது பொய்யா..” என்று அமித் மீது மிகையாக கோபத்தைக் காட்டினார் விசே. ‘பதில் சொன்னாலும் பிரச்சினை.. சொல்லா விட்டாலும் பிரச்சினை’ என்கிற மாதிரி தவிப்புடன் நின்றிருந்தார் அமித்.

வீட்டு தல போஸ்ட்- இந்த சீசனில் நல்ல பெயரை எவருமே வாங்கவில்லை

‘வீட்டு தல’ பொறுப்பை ஓரளவிற்கு சிறப்பாகவே செய்ய முயன்றார் அமித். கம்முவிற்கும் பாருவிற்கும் தண்டனை அளிக்க முயன்றார். அவர்கள் செய்ய முரண்டு பிடிக்கும்போது அஹிம்சை முறையில் சிலுவையை சுமக்க முயன்றார். இயன்ற போதெல்லாம் ‘கம்மு.. இதைச் செய்யுங்க. பாரு அதைச் செய்யுங்க’ என்று வேண்டிக் கொண்டே இருந்தார்.

ஆனால் அமித் போன்ற பலவீனமான தலயால் சண்டி மாடுகளை வைத்து வண்டி ஓட்ட முடியாது. பிக் பாஸையே மதிக்காத பாருவும் கம்முவும் அமித்தையா மதிக்கப் போகிறார்கள்?

திவ்யா பிரச்சினையில் ஆரம்பத்தில் அமித் அமைதியாக வேடிக்கை பார்த்தது தவறு. ஆனால் திவ்யா இதை ஆத்திரத்துடன் சுட்டிக் காட்டியவுடன் “நான் பேசறேன்.. நீங்க அமைதியா இருங்க” என்று தன்னாலான முயற்சிகளைச் செய்தார். ஆனால் இதையெல்லாம் தலைமைப்பண்புடன் ஸ்ட்ராங்காக செய்தாரா என்றால் இல்லை.

BB Tamil 9 Day 69
BB Tamil 9 Day 69

“நீங்க biased-ஆ இருந்திருக்கீங்க அமித். தண்டனையை ஏத்துக்கலாமா, வேண்டாமான்னு அவங்கதான் முடிவு எடுப்பாங்களா, அதையும் ஒழுங்கா பண்ண மாட்டாங்களா.. நீங்க அடுத்தக் கட்டம் போயிருக்க வேண்டியதுதானே.. ‘சொல்லிப் பார்த்தேன். செய்யலைன்னு பிக் பாஸ் கிட்ட போயிருக்க வேண்டியதுதானே..” என்று அமித்திடம் கோபத்தைக் காட்டினார் விசே.

ஒருவேளை அமித் பிக் பாஸிடம் சென்றிருந்தால் “சார்.. இந்த கேமை நீங்கதானே ஆடணும்.. ஒவ்வொண்ணுத்துக்கும் பிக் பாஸ் ஸ்கிரிப்ட் தர முடியுமா?” என்றும் விசே மடக்கியிருக்கலாம். தண்டனையை செய்யாமல் டபாய்த்த பாரு -கம்முவிடம் வேறு மாதிரியான தந்திரத்தை பயன்படுத்தி டிராமாவை அதிகப்படுத்தி ஷோவை சுவாரசியமாக ஆக்கியிருக்கலாம் என்பதுதான் விசே சொல்ல வருவதாகத் தோன்றுகிறது. ‘நீங்க செய்ய மாட்டீங்களா. அப்ப நான் செஞ்சிடறேன்’ என்பதில் சுயவதைதான் இருக்கிறதே ஒழிய, சுவாரசியம் இல்லை.

BB Tamil 9 Day 69
BB Tamil 9 Day 69

‘காமிரா பார்க்காத வேலை என்னதான் செஞ்சீங்க?’ -பாருவை பங்கமாக கலாய்த்த விசே

“நிறைய பாத்திரங்கள் போட்டுட்டாங்க.. நாங்க வேலை செஞ்சோம்.. இதையெல்லாம் மத்தவங்க கவனிச்சிங்களான்னு தெரியல. காமிரால பதிவாச்சான்னு தெரியல” என்று பாரு வாயை விட்டு விட “காமிரால பதிவாகாத மாதிரி நீங்க என்ன வேலைதான் பண்ணீங்க?’ என்று டபுள் மீனிங்கில் விசே கலாய்த்தது சுவாரசியமான காட்சி. இத்தனை காமிராக்கள் இருக்கும் போது பாரு வேலை செய்வதை மட்டும் அவை பதிவாக்காமல் விட்டு விடுமா?

இந்த சீசனில் நல்ல பெயர் வாங்கிய எந்த ‘தல’யும் இல்லை. அனைவருக்குமே கெட்ட பெயர். ஒருவேளை பாரு வீட்டு ‘தல’யானால் இந்த அவப்பெயரை நீக்குவார் என்று தோன்றுகிறது. (சும்மா. லுலுவாய்க்கு!)

ரம்யாவிற்கு காஃபி தந்து வழியனுப்பிய விசே

பிரேக் முடிந்து திரும்பி வந்த விசே ‘சரி.. அடுத்த விஷயத்திற்கு போகலாமா?” என்று எவிக்சன் சமாச்சாரத்திற்கு வந்தார். சொல்லி வைத்தாற்போல் மெஜாரிட்டியாக ரம்யாவின் பெயரைச் சொன்னார். பாரு எஃப்ஜேவின் பெயரைச்சொல்ல, திவ்யாவோ கம்முவின் பெயரைச் சொன்னார்.

எவிக்ஷன் கார்டில் ரம்யாவின் பெயரைப்பார்த்ததும் பெரிய அழுகையொலி கேட்டது. அது ரம்யா அல்ல. சான்ட்ரா. “அய்யோ.. இனிமே நான் தனியா இங்க பண்ணுவேன்’ என்று எல்கேஜி குழந்தை மாதிரி அழ ஆரம்பித்தார். இவர் யாரை நம்பி இந்த ஷோவிற்கு வந்தார் என்றே தெரியவில்லை.

BB Tamil 9 Day 69
BB Tamil 9 Day 69

தன்னை யாராவது pamper செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று சான்ட்ரா எதிர்பார்ப்பது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. பெரும்பாலான நேரங்களில் இவர் கண்ணை கசக்கிக் கொண்டேயிருப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது.

மேடைக்கு வந்த ரம்யா வீடியோவைப் பார்த்துவிட்டு “ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஆனா அழுகையாவும் வருது.. என் மேலயே கோபமா வருது” என்று கலவையான ஃபீலீங்கைச் சொன்னார். “இத்தனை தெளிவா பேசற ரம்யாவை வீட்டுக்குள்ள பார்க்கவே முடியலையே?’ என்றார் விசே

காஃபி குடிக்காமல் பைத்தியம்போல் இருந்த ரம்யாவிற்கு ‘யாராவது காஃபி கொடுங்கப்பா” என்று விசே கேட்க, உண்மையிலேயே மேடைக்கு காஃபி வந்தது. “நான் மைக்கை பிடிச்சுக்கறேன்.. நீங்க குடிச்சிட்டே பேசுங்க.. சர்க்கரை சரியா இருக்கா.. டிகாக்ஷன் ஓகேவா?” என்று கலாய்த்தார் விசே.

திக்குத்திசை தெரியாமல் பயணிக்கும் சீசன் 9

ரம்யாவை வழியனுப்பி விட்டு வீட்டுக்குள் வந்த விசே, பாருவையும் கம்முவையும் மைக் மாட்ட அனுமதி தந்தார். “நீங்க மக்கள்கிட்ட இருந்து உங்களை துண்டிச்சிக்கிட்டா, அப்புறம் அவங்க உங்களை துண்டிச்சிடுவாங்க..” என்று வார்னிங் தந்துவிட்டு விசே கிளம்பினார்.

“இப்பத்தான் ரிலீஃப்பா இருக்கு” என்று மைக் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தார் பாரு. ரொமான்ஸ் சமயத்தில் பாரமாக தெரிந்த அதே மைக், இப்போது இன்பகரமாக இருக்கிறதாம். என்னவொரு மாற்றம்?!

BB Tamil 9 Day 69
BB Tamil 9 Day 69

பாருவும் கம்முவும் மறுபடி ரகசியம் பேசினார்கள். ‘கேம் முடியற வரைக்கும் நாம பேசிக்க வேண்டாம்” என்று பாரு சொல்ல “டக்குன்னு முடிவெடுக்காத. ஒரு வாரம் இருந்து பார்ப்போம்” என்று கம்மு உருக்கத்துடன் சொல்ல, காதல் பறவைகள் இரண்டும் ஒவ்வொரு திசை நோக்கி பறந்தன. கம்மு உருக்கமாக பார்க்க, பாரு சோகத்தோடு ‘சூப் சாங்’ பாடுவதோடு எபிசோட் நிறைந்தது.

முந்தைய சீசன்களில் உடலை வருத்தும் கடுமையான டாஸ்குகள் இருந்தன. இந்த சீசனில் அப்படியொன்றும் இல்லை. அதற்கே இவர்கள் இப்படி ஆடுகிறார்கள். போதாதற்கு நிறைய விதிமீறல்கள். நிகழ்ச்சியிலும் பெரிதாக சுவாரசியம் இல்லை. சண்டை மட்டும்தான்.

தட்டுத் தடுமாறி திக்கு திசை தெரியாமல் பயணிக்கும் கப்பல் மாதிரி தத்தளிக்கிறது சீசன் 9.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *