பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தில் இதுவரை அறியப்படாத வகையைச் சேர்ந்த விண்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நட்சத்திரத்தைப் போல தோற்றமளிக்கும் இந்த மர்மப் பொருள், மிகப்பெரிய அளவில் ஆற்றலை வெளியிடுவதால் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை ஆய்வு செய்த சர்வதேச குழுவுக்கு தலைமை தாங்கியவர் ஹைதராபாத்தில் பிறந்த இந்திய வம்சாவளி ரோஹன் நாயுடு.
நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் கிடைத்த தரவுகளை ஆய்வு செய்தபோது, பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்த மிகவும் பிரகாசமான சிவப்பு நிற விண்பொருள் ஒன்று கண்டறியப்பட்டது. MoM-BH-1* என அழைக்கப்படும் இந்தப் பொருள், பூமியில் இருந்து பல பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள Cetus விண்மீன் கூட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
சூரியக் குடும்பத்தின் அளவுக்கு விரிந்திருக்கக்கூடிய இந்த அமைப்பு, சாதாரண நட்சத்திரங்களால் உருவாக்க முடியாத அளவுக்கு அதிக ஆற்றலை வெளியிடுகிறது. இதன் மையத்தில் சூரியனை விட சுமார் ஒரு லட்சம் மடங்கு அதிக நிறை கொண்ட கருந்துளை இருக்கலாம் என்றும், அதைச் சுற்றி மிகப்பெரிய வாயு உறை காணப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதன் தோற்றம் நட்சத்திரத்தைப் போன்று இருப்பதால், விஞ்ஞானிகள் இதனை ‘Black Hole Star’ என அழைக்கின்றனர். இந்தக் கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டால், பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தில் மிகப்பெரிய கருந்துளைகள் எவ்வாறு உருவாகத் தொடங்கின என்ற கேள்விக்கு முக்கியமான தடயங்கள் கிடைக்கலாம்.
இன்ஜினியரிங் படிப்பை கைவிட்டவர்:
இந்த முக்கியமான ஆய்வை வழிநடத்திய ரோஹன் நாயுடுவின் கல்விப் பயணமும் சுவாரஸ்யமானது. ஆரம்பத்தில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த அவர், அதை பாதியில் கைவிட்டார். பின்னர் சிங்கப்பூரில் உள்ள Yale-NUS College-ல் சேர்ந்த அவர், அங்கு வானியல் மீது ஆர்வம் கொண்டார்.
அதன்பிறகு சிலியில் உள்ள ஆண்டிஸ் மலைப்பகுதியில் Blazars குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர், பால்வெளி மண்டலத்தின் பழமையான விண்மீன் மண்டலங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார்.
பின்னர் NASA Hubble Fellowship மற்றும் MIT-யின் Pappalardo Fellowship உள்ளிட்ட முக்கியமான ஆராய்ச்சி வாய்ப்புகளைப் பெற்றார். தற்போது ஹவாய் பல்கலைக்கழகத்தின் Institute for Astronomy-ல் Assistant Professor ஆக பணியாற்றி வருகிறார்.
எதிர்பாராமல் கிடைத்த கண்டுபிடிப்பு:
ரோஹன் நாயுடுவும் அவரது குழுவினரும் ஆரம்பத்தில் ‘பிளாக் ஹோல் ஸ்டார்’ ஒன்றைத் தேடவில்லை. பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தில் உருவான விண்மீன் மண்டலங்களை கண்டறியும் ஆய்வின் போது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் படங்களில் வித்தியாசமான சிவப்பு நிறப் புள்ளியை அவர்கள் கவனித்தனர்.
அதன் ஒளி மற்றும் ஆற்றல் வெளியீட்டில் இருந்த அசாதாரண அம்சங்கள், அது வழக்கமான விண்மீன் அல்ல என்பதை உணர்த்தின. தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளே, அதன் பின்னணியில் மிகப்பெரிய கருந்துளை இருக்கலாம் என்ற புதிய கருத்தை உருவாக்கின.
இந்த கண்டுபிடிப்பு மூலம், ஆரம்பகால பிரபஞ்சத்தின் மர்மங்களை புரிந்துகொள்வதில் ரோஹன் நாயுடுவின் ஆய்வு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு காலத்தில் இன்ஜினியரிங் படிப்பை பாதியில் நிறுத்திய அவர், இன்று பிரபஞ்சத்தின் மிகப்பெரிய புதிர்களில் ஒன்றை ஆராயும் சர்வதேச விஞ்ஞானிகள் குழுவை வழிநடத்தி வருகிறார்.

