Doctor Vikatan: வழக்கத்தைவிட இந்த வருட வெயில் கொடுமையாக வாட்டி வதைக்கிறது. திட உணவுகளைத் தவிர்த்து நாள் முழுவதும் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம் போலிருக்கிறது.
ஆனால், ஐஸ் வாட்டர், ஐஸ் க்ரீம், ஜூஸ் என எதைச் சாப்பிட்டாலும் தாகம் தணிவதில்லை. எப்போதும் தாகமாகவே உணர்கிறேன். இதைச் சமாளிக்க என்னதான் செய்வது?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

விக்ரம்குமார்
வருடந்தோறும் வெப்பத்தின் அளவு கூடிக்கொண்டே போகிறது. வட மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, இள வயதினர்கூட உயிரிழக்கும் செய்திகளைக் கேள்விப்படுகிறோம்.
வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உடலை நீரேற்றத்துடன் (Hydration) வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல ஐஸ் வாட்டரோ, ஐஸ் க்ரீமோ, தாகம் தணிக்காது. இயற்கை பானங்களே தாகம் தணித்து, உடலை ஆரோக்கியத்துடன் வைக்கும்.
கோடையில் தினமும் ஓர் இளநீர் குடிப்பது சிறந்தது. இதில் நுண் ஊட்டச்சத்துகள் (Micro-nutrients) நிறைந்துள்ளன. வயிற்று எரிச்சல் மற்றும் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலைக் குறைக்க இளநீரும், அதிலுள்ள வழுக்கைப் பகுதியும் உதவும்.
சாதாரண இளநீரைவிட அதிக குளிர்ச்சி தரக்கூடியது செவ்விளநீர். எனவே, வாய்ப்பு உள்ளவர்கள் அதைக் குடிக்கலாம். இளநீர் பாயசம் அல்லது இளநீர் வழுக்கையைச் சேர்த்த ஜூஸ் போன்றவற்றை வீட்டிலேயே தயாரித்துப் பருகலாம்.
வெயிலுக்கேற்ற ஆகச் சிறந்த பானம் மோர். இதில் நன்மை செய்யும் புரோபயாடிக் பாக்டீரியாக்கள் உள்ளன. வெப்பத்தினால் ஏற்படும் வயிற்றுப்போக்கைத் carbo தடுக்கிறது. மோர் குடித்தால் சளி பிடிக்கும் என நினைத்து அதைத் தவிர்ப்போர் இருக்கிறார்கள். அது தவறான கருத்து.
வெயில் காலத்திலாவது மோர் குடிக்கும் வழக்கத்தைப் பின்பற்றலாம். அதையும் மீறி, பயம் இருப்பவர்கள், தாளித்த மோராகப் பருகலாம். முற்பகல் 11 மணி அல்லது பிற்பகல் 3 மணி அளவில் மோர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

பானகம் என்றொரு பாரம்பர்ய பானத்தை காலப்போக்கில் நாம் மறந்தே விட்டோம். புளி அல்லது வெல்லம் கலந்த நீரில் எலுமிச்சைப்பழச் சாறு, ஏலக்காய், சீரகம் மற்றும் நன்னாரி வேர் கலந்து பானகம் தயாரிக்கப்படுகிறது. இது மிகச் சிறந்த அல்கலைசர் (Alkalizer). சிறுநீர் எரிச்சலைத் தடுத்து உடலுக்கு உடனடி குளிர்ச்சியைத் தரும்.
நன்னாரி சிரப்பை நீரில் கலந்து குடிக்கலாம் அல்லது நன்னாரி வேரை நீரில் ஊறவைத்து, நாட்டுச்சர்க்கரையோ, பனை வெல்லமோ கலந்து பருகலாம். வெட்டிவேரை 4 முதல் 5 மணி நேரம் நீரில் ஊறவைத்து வடிகட்டி குடிப்பது உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தரும்
கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் குடிப்பது உடலுக்குச் சத்து தருவதோடு குளிர்ச்சியையும் அளிக்கும். சளி பிடிக்குமோ என்ற பயத்தில் இவற்றையும் பலர் தவிர்க்கிறார்கள். ஆனால், அப்படியெல்லாம் தவிர்க்க வேண்டியதில்லை. வெயில் கொளுத்தும் நாள்களில் இதுபோன்ற கூழ் வகைகளை மோருடன் கலந்து குடிக்கும்போது கூடுதல் பலன் கிடைக்கும்.
கோடை வெப்பத்தைச் சமாளிக்கப் பலரும் நாடுவது வெளிநாட்டுக் குளிர்பானங்களைத்தான். அந்த நேரத்துக்கு இதமாகத் தெரிந்தாலும், தற்காலிகமாகத் தாகத்தைத் தீர்த்தாலும் கார்பனேட்டடு பானங்கள் உடல் நலத்திற்குத் தீங்கானவை.

அதே போல வெளியே சென்றுவிட்டு வந்ததும், ஃப்ரிட்ஜில் வைத்த ஐஸ் வாட்டரைக் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
இது தாகத்தைத் தீர்த்த திருப்தியைத் தராது. ஐஸ் வாட்டரைக் குடிப்பதால் பல் கூச்சம், செரிமானக் கோளாறுகள், தலைபாரம் மற்றும் சளி போன்ற பிரச்னைகள் வரலாம்.
இதற்கு பதிலாக பானையில் ஊற்றிவைத்த தண்ணீரைப் பயன்படுத்துவதுதான் குளிர்ச்சியைத் தரும், ஆரோக்கியமானதும்கூட. மேற்குறிப்பிட்ட இயற்கையான பானங்களைக்கூட மண் பானையில் வைத்துப் பருகுவதன் மூலம் தாகத்தை முழுமையாகத் தணிக்கலாம். கோடைக்காலத்தை ஆரோக்கியமாகக் கடக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.