Doctor Vikatan: என்னுடைய தோழி வெயிட்லாஸ் முயற்சியில் இருக்கிறாள். அவள் இப்போது தண்ணீரைக் குறைக்கும் ‘வாட்டர் கட் டயட்’ என்ற முறையைப் பின்பற்றுவதாகச் சொல்கிறாள். இந்த டயட் உடனடி வெயிட்லாஸுக்கு உதவும் என்கிறாள். இது எந்த அளவு உண்மையானது… எந்த அளவு பாதுகாப்பானது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் சங்கீதா நந்தகுமார்

உடல் எடையை விரைவாகக் குறைக்க வேண்டும் என்ற ஆசையில் தற்போது பலரும் பின்பற்றும் முறைகளில் ஒன்று ‘வாட்டர் கட் டயட்’. குறிப்பாக, உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் விரைவான எடைக் குறைப்பை விரும்புபவர்கள் தண்ணீர் குடிப்பதைக் குறைப்பது, அதிகமாக வியர்க்கச் செய்வது போன்ற முறைகளைக் கையாள்கின்றனர்.
எடை குறைவதற்கும் கொழுப்பு குறைவதற்கும் வித்தியாசம் உண்டு. நமது உடல் எடையில் கணிசமான அளவு தண்ணீர் உள்ளது. உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து குறையும்போது உடல் எடை தற்காலிகமாகக் குறையும். உதாரணமாக, ஒரு லிட்டர் நீரை இழக்கும்போது வெயிட் மெஷினில் சுமார் ஒரு கிலோ எடை குறைவாகத் தெரியலாம். ஆனால், இது கொழுப்பு இழப்பு அல்ல. உடலில் சேமிக்கப்பட்டுள்ள கிளைக்கோஜன் (Glycogen) குறையும்போதும் அதனுடன் தொடர்புடைய நீரும் வெளியேறுவதால் எடை வேகமாகக் குறையலாம். மீண்டும் வழக்கமான உணவு மற்றும் நீர்ச்சத்து கிடைக்கும்போது இந்த எடை மீண்டும் அதிகரிக்கலாம். எனவே, தற்காலிக எடை இழப்பை உண்மையான கொழுப்பு இழப்பாகக் கருதக்கூடாது.

தண்ணீர் என்பது தாகத்தைத் தணிப்பதற்காக மட்டுமல்ல. உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரித்தல், ரத்த ஓட்டம், சிறுநீரகச் செயல்பாடு, செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துகளைக் கடத்துதல் போன்ற பல செயல்பாடுகளுக்கும் தண்ணீர் அவசியம். நீர்ச்சத்து குறையும்போது, தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் அதிகப்படியான சோர்வு ஏற்படலாம். ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் ஏற்படலாம்.
சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டம் குறைந்து, தீவிர சிறுநீரக பாதிப்பு (Acute Kidney Injury) ஏற்படும் அபாயம் உள்ளது. சோடியம், பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலை பாதிக்கப்படலாம்.
கடுமையான நீரிழப்பு ஏற்படும்போது இதயத்துடிப்பு மற்றும் நரம்பு மண்டலச் செயல்பாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகலாம். வெப்பமான சூழலில் உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள், இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ESPEN (European Society for Clinical Nutrition and Metabolism) எனப்படும் ஐரோப்பிய மருத்துவ ஊட்டச்சத்து அமைப்பு, 2022-ம் ஆண்டு வெளியிட்ட மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து வழிகாட்டுதல்களில், உடலின் நீர்ச்சத்து சமநிலையைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, வயதானவர்களிடம் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுப்பதற்கும், அவர்களின் உடல்நிலைக்கேற்ப போதுமான திரவத்தை வழங்குவதற்கும் பரிந்துரைக்கிறது.
அதேபோல், ASPEN (American Society for Parenteral and Enteral Nutrition) அமைப்பு, மருத்துவ ஊட்டச்சத்து சிகிச்சையில் திரவத் தேவையை நிர்ணயிக்கும்போது நோயாளியின் வயது, சிறுநீரகச் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, உடலிலிருந்து வெளியேறும் திரவத்தின் அளவு போன்றவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.

2024-ம் ஆண்டு JAMA Network Open இதழில் வெளியான பதிவில், போதுமான தண்ணீர் குடிப்பது எடைக்குறைப்புக்கு உதவக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, உணவுக்கு முன் தண்ணீர் குடிப்பது போன்ற அணுகுமுறைகள் சிலருக்கு உணவு உட்கொள்ளும் அளவைக் கட்டுப்படுத்த உதவலாம் என்று சொல்கிறது. மேலும், National Athletic Trainers’ Association (NATA) வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, உடற்பயிற்சியின்போது உடல் எடையில் 2 சதவிகிதத்திற்கும் அதிகமான நீரிழப்பு ஏற்படாமல் கவனிப்பது முக்கியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான எடை குறைப்புக்கு என்ன செய்ய வேண்டும்?
உடலின் தேவைக்கேற்ப போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒவ்வோர் வேளைக்கும் புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும்.
காய்கறிகள், பழங்கள், முழுத்தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
தனிநபரின் தேவைக்கேற்ப கலோரி அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்.
வாரந்தோறும் சீரான உடற்பயிற்சியுடன் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
போதுமான தூக்கம் மற்றும் முறையான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

அனைவருக்கும் ஒரே அளவு தண்ணீர் தேவையா?
இல்லை. வயது, உடல் எடை, உடற்பயிற்சி, சுற்றுப்புற வெப்பநிலை, உணவுப்பழக்கம் மற்றும் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து தண்ணீரின் தேவை மாறுபடும். சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சளாக இருப்பது நீர்ச்சத்து நிலையைப் புரிந்துகொள்ள உதவும் எளிய அறிகுறியாகும். இதய மற்றும் சிறுநீரக நோயாளிகள் மருத்துவர்கள் பரிந்துரைத்த திரவ அளவையே பின்பற்ற வேண்டும்.
எனவே, வெயிட் மெஷினில் குறையும் ஒவ்வொரு கிலோவும் உடலில் கொழுப்பு குறைந்ததற்கான அடையாளம் அல்ல. தண்ணீரைக் குறைப்பது ஆரோக்கியமான விஷயம் கிடையாது. எடையைக் குறைக்க, இதுபோன்ற குறுக்கு வழிகளைத் தேடுவதைவிட, அறிவியல்பூர்வமான உணவுமுறை, போதுமான நீர்ச்சத்து மற்றும் தொடர்ச்சியான உடற்பயிற்சியே ஆரோக்கியமான எடைக்குறைப்புக்கான சரியான வழிகள் என்பதைப் புரிந்துகொள்ளவும். ஆரோக்கியத்தை இழந்து எடையைக் குறைக்க வேண்டியதில்லை.
சங்கீதா நந்தகுமார்:
சென்னை, வடபழனி காவேரி மருத்துவமனையில் senior Clinical Dietitian
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.