Doctor Vikatan: என் வயது 50. இத்தனை வருடங்களாக நான் பால் மற்றும் பால் உணவுகள் சாப்பிட்டு வந்திருக்கிறேன். திடீரென ஏற்பட்ட வயிற்றுக் கோளாறுக்காக மருத்துவரை அணுகியபோது, பால் அலர்ஜி என்று சொல்லி, பால், பால் பொருள்கள் அனைத்தையும் தவிர்க்கச் சொல்கிறார்.
பால் அலர்ஜி என்றால் பனீர், தயிர், மோர் என எதுவும் சாப்பிடக்கூடாதா…. சைவ உணவுப் பழக்கமுள்ள எனக்கு வேறு எப்படி கால்சியம் கிடைக்கும்? பால் அலர்ஜி என்பது இப்படி திடீரென வருமா… நிரந்தரமாகத் தங்கிவிடுமா… இனிமேல் நான் வாழ்க்கையில் பால் மற்றும் பால் உணவுகளே சாப்பிடக்கூடாதா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னை, சமீப காலங்களில் நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்கிறோம். குறிப்பாக, ஒருவருக்கு ஏதேனும் பாக்டீரியா தொற்று வந்து குணமான பிறகு அவரது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் காணாமல் போய்விடுவதால் பால் செரிமானமாவதில் சிக்கலைச் சந்திக்கிறார்கள்.
நீங்கள் ஒரேயடியாக பால் எடுத்துக்கொள்வதையே தவிர்க்க வேண்டும் என அவசியமில்லை. பாலில் பாதிக்குப் பாதி தண்ணீர் கலந்து, டீ அல்லது காபி, ஒருநாளைக்கு ஒன்றிரண்டு முறை குடித்தால் பிரச்னை வருவதில்லை. ஆனால், முதல்கட்டமாக சில நாள்களுக்காவது பால் மற்றும் பால் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
குறிப்பாக, பனீர், சீஸ் போன்ற பொருள்களைத் தவிர்த்து விடலாம். இப்போது லாக்டோஸ் இல்லாத பால், பாதாம் பால், வேர்க்கடலை பால், சோயா பால் என நிறைய மாற்று உணவுகள் கிடைக்கின்றன. வழக்கமான பாலுக்குப் பதில் இவற்றைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
பால் அலர்ஜி இருந்தாலும் தயிர், மோர் போன்றவற்றைச் சாப்பிடலாம். அவற்றில் உள்ள புரோபயாடிக் குடலுக்கு ஆரோக்கியமானதுதான். உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னை, இனி நிரந்தரமாகத் தங்கிவிடும் என்று சொல்ல முடியாது. தற்காலிகமாக இருந்துவிட்டு சரியாகலாம்.

புரொக்கோலி, கீரைகள், முருங்கைக்காய், சோயா எனக் கால்சியம் சத்துக்கான உணவுகள் நிறைய உள்ளன. இவற்றைத் தெரிந்துகொண்டு சரியாகத் தேர்வுசெய்து சாப்பிட வேண்டும்.
நீங்கள் சாப்பிடும் உணவுகளை ஒரு டைரியில் குறித்து வர வேண்டும். எந்த உணவு சாப்பிட்டால் பிரச்னை வருகிறது எனத் தெரிந்துகொண்டு, அதைத் தவிர்க்கலாம். தற்காலிகமாக சில நாள்களுக்கு அவற்றைத் தவிர்த்துப் பார்த்துவிட்டு, ஓர் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சாப்பிட்டு, மறுபடி ஒவ்வாமை வருகிறதா எனப் பார்க்க வேண்டும். அப்போதும் அந்த உணவு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதை நிரந்தரமாக தவிர்ப்பதே நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.