பல வருடங்களாக தமிழ் சினிமாவில் திருநங்கைகளைக் கேலி செய்து பாடல்கள் வந்த சூழலில், இன்று இளையராஜா சாரின் வரிகளிலும் குரலிலும் பாடல் வந்தது எங்களுக்கு நடந்த அர்ச்சனையைப் போல உணர்ந்தேன்.
இப்படியான விஷயங்கள் பற்றிப் பேசத் தயங்கிய திரையுலகில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மிகத் தைரியமாக இந்த முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறார்.
‘இப்படிப் பேசினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தயாரிப்பாளர் நஷ்டப்படுவார்’ என்ற சினிமா வட்டாரத்தின் பொதுவான பார்வையை ‘டோரதி’ உடைத்திருக்கிறது.
திரையரங்கில் என்னருகே அமர்ந்திருந்த ஒரு பெண் படத்தைப் பார்த்து அழுததைப் பார்த்தேன். இதுவே மக்களிடம் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம். வழக்கமாக ‘சிஸ்-ஜெண்டர்’ நடிகர்கள் திருநங்கை கதாபாத்திரங்களில் நடிப்பதைக் கடுமையாக எதிர்க்கும் நபர் நான். இப்படத்தில் ஜீவா அக்கா மட்டுமன்றி, பல உண்மையான திருநங்கைகளும் நடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், ஜீவா அக்காவை டொராண்டோ திரைப்பட விழா வரை அழைத்துச் சென்றது எங்களுக்குப் பெரிய நம்பிக்கையையும் மனநிறைவையும் தந்திருக்கிறது. இந்தியளவில் வந்த திருநங்கை பற்றிய படங்கள் ‘எங்களை வீட்டை விட்டுத் துரத்திவிட்டார்கள்’ என்பதோடு நிறுத்திவிடும்.
ஆனால், துரத்தப்படும்போது அங்கு என்ன நடந்தது? ஆணாதிக்கமும் சாதியக் கட்டமைப்பும் எப்படி ஒரு திருநங்கையின் கழுத்தை நெரிக்கிறது என்பதை இந்தப் படம் மிகத் துல்லியமாகக் காட்டியுள்ளது.
பெற்றோரின் புகைப்படத்திற்கு நடுவே மகனின் புகைப்படத்தைத் தூக்கி எறியும் ஒரு காட்சி மட்டுமே அதற்குச் சிறந்த சான்று. இந்தப் படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மிகப் பெரிய ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார் என்பது புரியவருகிறது.
திருநங்கைகளிடம் பேசாமல், அவர்களின் இலக்கியப் படைப்புகளைப் படிக்காமல் இதை உருவாக்கியிருக்க முடியாது. எழுத்தாளர் சரவணன் சந்திரனும், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் இத்தகைய தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது,” எனப் பேசினார்.