“திரையுலகில் யாருக்கு என்ன நிகழ்வு என்றாலும் முதல் ஆளாக ஆர்யா வந்து நிற்பார். ஆனால், இன்று ஆர்யாவுக்காக யாரும் வரவில்லை (சிரித்துக்கொண்டே…). ஆர்யாவின் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய விஷயங்களில் நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன்.
குறிப்பாக, அவருக்குத் திருமணம் நடந்து முடிந்ததில் நானும் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறேன். ‘கஜினிகாந்த்’ திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான், ‘சரி, வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம். இதைவிட ஒரு நல்ல பெண் கிடைக்க மாட்டார், இதையே ஓகே செய்துவிடலாம்’ என ஆர்யா முடிவு செய்து, காதலுக்கான வேலைகளை ஆரம்பித்தார்.

அப்போது என்னிடம் வந்து, ‘டார்லிங், போய் என்னைப் பற்றி ஏதாவது நல்லவிதமாக சாயிஷாவிடம் சொல்’ என்றார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
பிறகு அவர், ‘நீ சாயிஷாவிடம் பேசிச் சம்மதிக்க வைப்பது கஷ்டம். அவருடைய தாயார் படப்பிடிப்புத் தளத்திற்கு வருவார். நீ நேராக அவர் அம்மாவிடம் போய் முதலில் நல்லவிதமாகப் பேசு’ என்று ஐடியா கொடுத்தார்.
நானும் நேராக சாயிஷாவின் அம்மாவிடம் சென்று, ‘ஆர்யா எல்லோருக்கும் பயங்கரமாக உதவி செய்வார், ரொம்ப நல்ல டைப். எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. இப்படியொரு மாப்பிள்ளை யாருக்காவது கிடைத்தால் சூப்பராக இருக்கும்’ என அரை மணி நேரம் புகழ்ந்து தள்ளிவிட்டேன்.
அனைத்தையும் கேட்டுவிட்டு அவர், ‘எனக்குத் தமிழ் தெரியாது’ என இந்தியில் சொல்லிவிட்டார். அதன்பிறகு எனக்குத் தெரிந்த இந்தியில் அதையெல்லாம் அவருக்குப் புரிய வைத்து, ஒருவழியாக இருவரையும் சேர்த்து வைப்பதில் நானும் ஒரு காரணமாக இருந்தேன்” என நகைச்சுவையாகப் பேசினார்.