தகவலறிந்ததும் ஆலங்குளம், சுரண்டை மற்றும் தென்காசி தீயணைப்பு நிலையங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், பொக்லைன் இயந்திரம் மூலம் தீப்பற்றிய நெல் மூட்டைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீயை அணைக்கும் பணியின் போது அதிகளவில் தண்ணீர் பாய்ச்சப்பட்டதால், தீயில் கருகாத பல நெல் மூட்டைகளும் தண்ணீரில் நனைந்து பயன்பாடற்ற நிலையில் சேதமடைந்தன. இந்த விபத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ சேத மதிப்பீட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை. தன்னிச்சையான வெப்ப உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் ஆய்வு செய்யப்படுவதோடு, மர்ம நபர்கள் யாரேனும் திட்டமிட்டு தீ வைத்தார்களா? என்ற கோணத்திலும் கடையம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன், தமிழக வெற்றி கழக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் விபின் சக்கரவர்த்தி இணைந்து தீயில் சேதமடைந்த நெல் மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், சேதத்தின் முழுமையான விவரங்களை கணக்கிட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
அரசு நெல் சேமிப்பு மையத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, விவசாயிகளிடையிலும் கவலையை உருவாக்கியுள்ளது. தீ விபத்திற்கான உண்மையான காரணம் மற்றும் ஏற்பட்டுள்ள சேதத்தின் முழுமையான விவரங்கள், அதிகாரப்பூர்வ விசாரணை மற்றும் மதிப்பீட்டு அறிக்கை வெளியான பிறகே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.