Business
oi-Vigneshkumar
சென்னை: ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஐடி இளைஞர்கள் சிலர் இணைந்து, சென்னையில் பிரதான சாலையில் பானி பூரி கடை போட்டுள்ளனர். கடந்த 18 மாதங்களாக அவர்கள் அந்த பானி பூரி கடையை நல்ல முறையிலேயே நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையே இப்போது திட்டமிட்டு சிலர் தங்களுக்குப் பிரச்சினை கொடுப்பதாகப் புகாரளித்துள்ளனர்.
இந்த காலத்தில் பலரும் ஹோட்டல் அல்லது சிற்றுண்டி கடையைத் தொடங்க ஆரம்பிக்கிறார்கள். வெளியே சாப்பிடும் பழக்கம் அதிகரிப்பதால்.. பலரும் இதுபோல சிற்றுண்டியைக் கடையைத் திறக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஐடி தொடங்கி பல்வேறு வேலைகளில் இருப்போரும் கூட இதுபோல சிற்றுண்டி கடையைத் தொடங்குகிறார்கள்.

சிற்றுண்டி
தங்களால் லாபகரமான பிஸ்னஸை நடத்தி வருமானத்தைப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையில் இதுபோல கடையைத் திறக்கிறார்கள். ஆனால், பல்வேறு காரணங்களால் அவர்களால் தொடர்ந்து கடைகளை நடத்த முடிவதில்லை. அப்படி தான் சென்னையில் அண்ணா சாலை அருகே ஐடி பட்டதாரிகள் சிலர் இணைந்து பானி பூரி கடை நடத்தி வந்துள்ளனர்.
பானி பூரி
சுமார் 18 மாதங்களாக அவர்கள் பானி பூரி கடையை நடத்தி வருகிறார்களாம். இதற்கிடையே சென்னையில் Food Street உரிமம் பெற்று தருவதாகக் கூறி மாதம் மாதம் லட்ச கணக்கில் வாடகை வாங்கி விட்டு ஏமாற்றியதாக அவர்கள் திமுக நிர்வாகி மீது புகாரளித்துள்ளனர். பணம் வாங்கிவிட்டு, உரிமம் பெற்றுத் தரவில்லையே எனக் கேட்டால் உள்ளூர் மக்களை வைத்தே பிரச்சினை செய்வதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இது குறித்துப் பேசிய அவர், “நாங்கள் இங்கு கடந்த 18 மாதங்களாக இந்த பானிபூரி கடையை நடத்தி வருகிறோம். இத்தனை மாதங்களாக இங்குள்ள பொதுமக்கள் யாரும் எந்தவித புகாரோ, ஆட்சேபனையோ தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போது சிலர் திட்டமிட்டு தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி பிரச்சனையைக் கிளப்புகிறார்கள். ஆட்டோ உள்ளே போக முடியவில்லை, குடும்பத்தினருக்கு டிஸ்டர்ப் ஆகிறது என்றெல்லாம் இப்போது புதிய காரணங்களைச் சொல்கிறார்கள்.
பிரச்சனை செய்கிறார்கள்
இத்தனை காலமாகக் குடிநீர் கேன் எடுத்து செல்பவர்களுக்குக் கூட நாங்கள் எப்போதும் வழிவிட்டே பழகியிருக்கிறோம். இன்று எங்கள் கடைக்கு வழக்கமாக வரும் ஒரு அக்காவிடம் ‘எப்போதும் எங்களிடம் கடைக்கு வருவீர்களே, இப்போது ஏன் இப்படி எதிராகப் பேசுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு அவரிடம் முறையான பதிலே இல்லை. எங்க கண் முன்னாடியே போன் செய்து ஆட்களை வரவழைக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது இது முற்றிலும் திட்டமிட்டு நடத்தப்படும் சதி என்று நன்றாகத் தெரிகிறது.
வயிற்றில் அடிக்கிறார்கள்
நானும் ஒரு நிறுவனத்தில் ஹெச்.ஆர் ஆகப் பணிபுரிகிறேன். எங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் ஐடி நிறுவனங்களில் படித்த, நல்ல வேலையில் இருக்கும் ஊழியர்கள் தான். வேலையை விட்டுவிட்டு ரோட்டில் நின்றுதான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. நேர்மையான முறையில் தொழில் செய்து வரும் எங்களின் வயிற்றில் அடிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்படிச் செய்கிறார்கள்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
ஒவ்வொரு கடைக்கும் மாதத்திற்கு ₹24,000 முதல் ₹25,000 வரை வாடகை செலுத்தி, நேர்மையான முறையில் தொழில் செய்து வருவதாகவும் அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
