'''Joe' படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் 'ஜோ' பட இயக்குநரின் பேட்டி

Spread the love

ரியோ ராஜின் ‘ஜோ’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் ஹரிஹரன் ராம். 2023-ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் பல அறிமுக இயக்குநர்களுக்கு வெளிச்சம் கிடைத்திருந்தது.

அவர்களில் ஒருவர் ஹரிஹரன் ராம். ‘ஜோ’ படம் வெளியாகி மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டுமொரு காதல் கதையை இயக்கவிருக்கிறார் அவர்.

GV Prakash - Joe Director
GV Prakash – Joe Director

இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷும், ‘கருடன்’ படத்தின் தயாரிப்பாளர் குமாரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இதுமட்டுமல்ல, நடித்துத் தயாரிப்பதோடு, இப்படத்திற்கு ஜி.வி-யே இசையமைக்கிறார். இயக்குநர் ஹரிஹரனுக்கு விஷஸ் சொல்லி, இத்திரைப்படம் பற்றிய தகவல்களைக் கேட்டோம்.

நம்மிடையே பேசிய இயக்குநர் ஹரிஹரன் ராம், “கடந்த பிப்ரவரி மாசத்துல ஜி.வி.பிரகாஷ் சாருக்கு கதை சொல்லியிருந்தேன். கதை அவருக்குப் பிடிச்சிடுச்சு. உடனடியாக அடுத்தடுத்த வேலைகளைத் தொடங்கி, இப்போ அறிவிச்சிட்டோம்.

நான் நடிகர் ஏகன் நடிக்கிற ‘ஹைக்கூ’ படத்துல கிரியேட்டிவ் டைரக்டராக வேலை பார்த்திட்டிருக்கேன். அதனுடைய படப்பிடிப்புல இருக்கும்போதுதான், ‘கருடன்’, ‘மாமன்’ போன்ற படங்களைத் தயாரிச்சிருக்கிற குமார் சார் கூப்பிட்டிருந்தார்.

Joe Director - Hariharan Ram
Joe Director – Hariharan Ram

இப்போ ஜி.வி சாரும், குமார் சாரும் சேர்ந்துதான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறாங்க.” என்றவர், “‘ஜோ’ படத்தோட ரிலீஸுக்குப் பிறகு எனக்கான வரவேற்பு ரொம்பவே நல்லா இருந்ததுனுதான் சொல்லணும். நிறைய ஹீரோக்களுக்கும் நான் கதை சொன்னேன்.

ஆனா, அது எதுவும் டேக் ஆஃப் ஆகல. பிறகு ஹீரோக்களுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இப்படியான சில காரணங்களால மூணு வருடம் கடந்திடுச்சு.” என்றார்.

“ஒரு இயக்குநருக்கு முதல் படம் எத்தனை முக்கியமோ, அதைவிட இரண்டாவது திரைப்படம் மிக முக்கியம். சில விஷயங்கள்ல எனக்கும் பயம் இருந்துச்சு. ‘ஜோ’ படத்தில் காதல் கதையைச் சொல்லியிருந்தேன்.

இரண்டாவது படத்துக்கு வேறு ஜானர் போகலாம்னுதான் முதல்ல திட்டமிட்டேன். பிறகு எனக்குக் கம்ஃபர்ட்டான களத்துல ஒரு ஃபேமிலி டிராமா பண்ணலாம்னு திட்டமிட்டேன்.

ஆனா, இந்த ஒரு வருடத்துல நிறைய ஃபேமிலி டிராமா கதைகள் வந்திருச்சு. காதல் கதையை மறுபடியும் செய்யுறதுக்கும் எனக்கு பயமா இருந்துச்சு. பிறகு என்கிட்ட இருந்த ஒரு காதல் கதையை டெவலப் பண்ணினேன்.

அதுதான் இப்போ நான் செய்யப்போகிற படத்தின் கதையாகவும் லாக் பண்ணியிருக்கோம். இப்போ என் முன்னாடி நிறைய பொறுப்புகள் இருக்கு.

Joe Movie
Joe Movie

அதே சமயம், கதையும் நல்லா வந்திருக்கிறதுனால எனக்கு நம்பிக்கையும் இருக்கு. ‘ஜோ’ படத்துல சில தவறுகள் பண்ணியிருப்பேன். அதை இந்தப் படத்துல நான் திருத்திக்கணும்.

சொல்லப்போனால், ‘ஜோ’ படத்துக்குப் பிறகான இந்த மூணு வருஷத்துல இந்தக் கதையை நல்லாவே மெருகேற்றிக் கொண்டு வர்றதுக்கு எனக்கு நேரம் கிடைச்சது.

‘ஜோ’ படத்தைப் பார்த்துட்டு ஒரு எதிர்பார்ப்போடு வர்றவங்கள, எவ்விதத்துலயும் இந்தப் படம் ஏமாற்றாது. ஆடியன்ஸுக்குப் பிடிக்கிறதுக்கான கமர்ஷியல் விஷயங்களும் படத்துல இருக்கு. சில வகையான காதல் கதைகளை நாம் பார்த்து நாளாச்சு.

இப்போ நான் செய்கிற படம் ‘மெல்லத் திறந்தது கதவு’ திரைப்படத்துல வர்ற ஒரு லவ் ஸ்டோரி மாதிரி இருக்கும். அந்தப் படத்துக்கும் இதுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

ஆனா, என்டர்டெயின்மென்ட்டுக்கான விஷயங்களோட நல்ல ஃபீல் குட் விஷயமும் படத்துல இருக்கும். படத்துல ஹீரோ ஒரு கிரிக்கெட்டர். அவரைச் சுற்றி நடக்கக்கூடிய விஷயங்கள், அவருடைய காதல் என கதை நகரும்.

மாளவிகா மனோஜுடன் ‘ஜோ’வுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து வேலை பார்க்கிறேன். அவங்களும் நல்ல நட்போடு, எந்தப் படம் பண்ணினாலும் அதைப்பற்றி என்கிட்ட பகிர்ந்துக்குவாங்க. இந்தப் படத்துக்கு ஜி.வி சார்கிட்டையே மியூசிக் பண்ணக் கேட்கலாம்னு இருந்தேன்.

Joe Director - Hariharan Ram
Joe Director – Hariharan Ram

ஆனா, கதையில் சில காட்சிகள் அவரை ரொம்ப ஈர்க்க, அவராகவே நான் மியூசிக் பண்றேன்னு சொல்லிட்டாரு. இப்போதே ரெண்டு பாடல்கள் கொடுத்துட்டாரு. அதுவும் அருமையாக வந்திருக்கு!

தேனி ஈஸ்வர் சார்கூட வொர்க் பண்ணனும்னு ரொம்ப ஆசை எனக்கு. இந்தப் படத்தினுடைய நிலவியலுக்கு அவரை மாதிரியான ஒரு ஒளிப்பதிவாளர் தேவைப்பட்டாரு.

ஜி.வி சாரும், ‘பேச்சுலர்’ படத்துக்குப் பிறகு தேனி ஈஸ்வர் சார்கூட வேலை பார்க்கணும்னு ஆசைப்பட்டார். அது இதுல நடந்திருக்கு. தேனி ஈஸ்வர் சாருக்கும் கதை ரொம்பவே பிடிச்சிருந்தது. எல்லாமே அடுத்தடுத்து தயார் பண்ணிக்கிட்டு இருக்கோம். ஜூன்ல படப்பிடிப்புக்குக் கிளம்புறோம். அடுத்தடுத்த தகவல்களோட சீக்கிரமே வர்றேன்…” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *