“Last பெஞ்ச்-னு பேசி தாழ்வு மனப்பான்மை வளர்க்காதீங்க” – அன்பில் மகேஷ் | Anbil Mahesh has expressed his objection to minister Keerthana

Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பள்ளி வளாகத்தில் உள்ள சமையலறை மற்றும் கழிவறைகளைப் பார்வையிட்ட அமைச்சர், அவற்றின் தூய்மையையும் தரத்தையும் மேலும் மேம்படுத்துமாறு அதிகாரிகளுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, வகுப்பறைக்குச் சென்ற அமைச்சர் கீர்த்தனா அங்கிருந்த மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளைக் கேட்டுள்ளார். அப்போது அமைச்சரின் ஆங்கிலக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் மாணவிகள் சிலர் திணறியுள்ளனர்.

அப்போது அமைச்சர் கீர்த்தனா, `முதல் பெஞ்ச் மாணவியே இப்படி இருக்கும்போது லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப்பாருங்கள்” எனக் குறிப்பிட்டு பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, விவாதப் பொருளாக மாறியது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தற்போதைய அமைச்சரின் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அதில், “தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!

பள்ளிகளுக்குச் செல்லும் போது மாணவர்களையும் ஆசிரியப் பெருமக்களையும் ஊக்கப்படுத்துவதே முதன்மையான கடமையாக இருக்க வேண்டும்.

அதை விடுத்து ‘Last Bench’ (கடைசி பெஞ்ச்) என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.

தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்” எனக் கூறி மாணவிகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *