அழகு என்பது முகத்தில் மட்டும் இல்லை… அது செய்யும் செயலிலும், சமூகத்துக்காக முன்னெடுக்கும் முயற்சிகளிலும் இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹைரி மோலா.
வியட்நாமின் நஹா ட்ராங் நகரில் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற 73-வது மிஸ் வேல்ட் 2026 கிராண்ட் ஃபினாலேவில், உலகின் 110 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி ஜோஹைரி மோலா உலக அழகியாக மகுடம் சூடியுள்ளார்.
ஸ்பெயினின் எலிசபெத் ரெயினாஸ் அலபெர்ன் முதல் ரன்னர்-அப்பாகவும், மலேசியாவின் தனுசியா செட்டி இரண்டாவது ரன்னர்-அப்பாகவும் தேர்வாகினர். மேலும், தனுசியா செட்டி ‘Beauty with a Purpose’ விருதையும் வென்றார்.
யார் இந்த ஜோஹைரி மோலா?
மாடலிங் துறையைத் தாண்டி கல்வி, சமூகப் பணி, ஊடகம் எனப் பல தளங்களில் இயங்கி வருபவர் ஜோஹைரி மோலா. Business Management and Administration படித்துள்ள இவர், குழந்தைகளின் கல்விக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

அதில் முக்கியமானது அவர் தொடங்கிய ‘Voices of Tomorrow’ என்ற அமைப்பு. பின்தங்கிய மற்றும் வசதிகள் குறைந்த சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஆங்கிலக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம்.
ஆசிரியராகவும் பணியாற்றும் ஜோஹைரி, ஆங்கிலத்தில் இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைக் கற்பித்து வருகிறார். குழந்தைகளிடம் பாடங்களைத் தாண்டி விமர்சனச் சிந்தனையையும், முழுமையான வளர்ச்சியையும் உருவாக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகிறார்.
கல்விப் பணியுடன் ஊடகத்துறையிலும் தடம் பதித்துள்ளார். Univision New York-ன் ‘Ventana a Quisqueya’ நிகழ்ச்சியில் செய்தியாளராகப் பணியாற்றி, டொமினிகன் கலாசாரம், சமூகப் பிரச்னைகள் மற்றும் மக்களின் வாழ்க்கைக் கதைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார்.
மாடலிங் துறையிலும் இயங்கி வரும் அவர், ‘Goya Gives’ அமைப்பின் தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.