Nanayam Vikatan – 11 October 2026 – நோயாளிகளை வாடிக்கையாளராகப் பார்ப்பது அறமல்ல!

Spread the love

நோய் தரும் வலியைவிட, சிகிச்சைக்கான செலவின் சுமைதான் இந்தியாவில் நோயாளிகளைப் பெரிதும் வதைக்கிறது. National Health Accounts தரவுகளின்படி, ஆண்டுக்கு ஓர் இந்தியர் சராசரியாக 6,373 ரூபாய் மருத்துவத்துக்காகச் செலவிடுகிறார். பலர் பாடுபட்டு சம்பாதித்துச் சேர்த்த வாழ்நாள் சேமிப்பை மொத்தமாக மருத்துவச் செலவிலேயே இழந்துவிடுகிறார்கள்.

இந்தியா மருத்துவத்தில் முன்னேறியிருக்கிறது, மருத்துவ ஆராய்ச்சியில் பல எல்லைகளைத் தொட்டிருக்கிறது. உலகுக்கெல்லாம் மருத்துவ உதவிகளை வழங்குகிறது. ஆனால், இந்த வளர்ச்சி, முன்னேற்றமெல்லாம் யாருக்கானது என்ற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது. மருந்துகளுக்கு நிர்ணயிக்கப்படும் அதிகப்படியான விலை குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கும் கேள்வியும்
அந்த வகைதான்.

புற்றுநோய்க்கான மருந்து, மருந்தகங்களுக்கு ரூ.2,700-க்கு வழங்கப்படும் நிலையில், நோயாளிகளுக்கு அதை ரூ.27,000-க்கு விற்பது பற்றி உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியிருக்கிறது. கிட்டத்தட்ட, பத்து மடங்கு விலை வித்தியாசம். இதைக் கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், அனைத்து மருந்துகளுக்கும் 16% என்ற ஒரே சீரான லாப வரம்பை கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள், தங்கள் மருந்தகத்தில் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றன. வெளியே குறைந்த விலையில் கிடைக்கும் அதே மருந்தை வாங்கிச் சென்றால், சிகிச்சைக்கான உத்தரவாதம் இல்லை என்று அச்சுறுத்துகிறார்கள். மருத்துவத் துறையின் அடிப்படை நெறிமுறைகளை ஒழுங்குபடுத்தினால் மட்டுமே இந்த முறைகேடுகளைக் களைய முடியும்.

தனியார் மருத்துவமனைகள் சிறப்பாகச் செயல்பட அவர்களுக்கான லாபம் என்பது அவசியம்தான். ஆனால், மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயச் சூழலைப் பயன்படுத்தி அளவுக்கு மீறி கொள்ளை லாபம் ஈட்டுவது சிறிதும் நியாயமில்லை.

இந்த விவகாரத்தில் அரசு இனியும் வெறும் ஆலோசனை, குழு, ஆய்வு என்று காலம் கடத்தாமல் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கும் 16% வரம்பை அடிப்படையாகக் கொண்டு, தெளிவான, நாடு முழுவதும் பொருந்தக்கூடிய மருந்துகளின் அதிகபட்ச விலை வரம்பை கொண்டுவர வேண்டும். அதேபோல், மருத்துவமனை மருந்தகங்களின் விலை நிர்ணயம், நோயாளியை குறிப்பிட்ட மருந்தகத்தில் மட்டுமே வாங்கச் செய்யும் நடைமுறை ஆகியவற்றுக்கும் கடுமையான விதிமுறைகள் தேவை.

உயிர் அச்சத்தோடு சிகிச்சைக்காக வரும் நோயாளியை, வாடிக்கையாளராக மட்டுமே பார்க்கக்கூடாது. அவரது எதிர்காலம், குழந்தைகளின் கல்வி, குடும்பத்தின் சேமிப்பு உள்ளிட்ட எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் சிகிச்சை. அந்த அறத்துடன் மருத்துவமனைகள் செயல்பட வேண்டும். அதைக் கண்காணித்து நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு, அரசுக்கு இருக்கிறது!

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *