இந்த நிலையில்தான், இந்தோனேசியா, மலேசியா, போர்னியோ மற்றும் சுமத்ரா தீவுகளின் வெப்பமண்டல மழைக்காடுகளில் மட்டுமே இயற்கையாக வாழக்கூடிய ஒராங்குட்டான்களின் 5 குட்டிகளைக் கடத்தி வந்த ஒடிசா கடத்தல் கும்பல், ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்ட வனப்பகுதியில் அந்த 5 குட்டிகளையும் யாருக்கும் தெரியாமல் விட்டுச் சென்றுள்ளனர்.
உள்ளுர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அந்த 5 ஒராங்குட்டான் குட்டிகளையும் மீட்டுள்ளனர். பிறந்து சில மாதங்களே ஆன 1 முதல் 1.5 அடி உயரமுள்ள 3 ஆண், 2 பெண் குட்டிகளையும் மீட்டு பராமரித்து வருகின்றனர். ஒன்றிரண்டு குட்டிகளின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக ஒடிசா வனத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

பின்னணி குறித்து தெரிவித்துள்ள ஒடிசா வனத்துறை அதிகாரிகள், “சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் ஆய்வுகளின் மிகவும் ஆபத்தான நிலையில் அழிந்து வரும் இனமாக இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடத்தல்காரர்கள் இவற்றை இந்தோனேசியாவிலிருந்து கடத்தி வந்துள்ளனர். கடத்தல் முயற்சி தோல்வியடைந்ததால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கடத்தல்காரர்கள் இவற்றைக் கைவிட்டுச் சென்றுள்ளனர்.
ஆரம்பக்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, இந்த 5 குட்டிகளும் புவனேஸ்வரில் உள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட உள்ளன. இந்த வழக்கின் தீவிரத்தன்மை காரணமாக மத்திய அரசின் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து ஒடிசா வனத்துறை உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.