Padmaja IAS: அருள் விக்னேஷின் ஆபாச மெசேஜ்! மத்திய அரசுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜா கடிதம்? | Did Kallakurichi Collector Padmaja write letter to Centre about Arul Vignesh issue?

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் ஆட்சியர் பத்மஜா, அவர் குறித்து மத்திய அரசுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவுக்கு, மதுபோதையில் இருந்த அருள் விக்னேஷ், ஆபாச மெசேஜ் அனுப்பியதாகவும் ஆட்சியரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வந்து தொல்லை கொடுத்ததாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

kallakurichi arul vignesh

இந்த சம்பவத்தை முதல்முறையாக வெளியே கொண்டு வந்தவர் திமுக எம்பி கனிமொழிதான். அவர்தான் சமூகவலைதளத்தில் வந்த தகவலை எடுத்து அருள் விக்னேஷை கண்டித்தார். இதைத் தொடர்ந்து தவெக ஆட்சியில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லையா என கேட்டு அரசியல்வாதிகள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தன.

அருள் விக்னேஷுக்கு பட்டு வேட்டி கொடுத்த விஜய்!

அருள் விக்னேஷ் மீது விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தை முதல்வர் விஜய் கூட்டினார். அப்போது அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளியையொட்டி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பட்டு வேட்டியை விஜய் பரிசாக கொடுத்தனுப்பினார்.

ஆபாச மெசேஜ்

இந்த ஆபாச மெசேஜ் குறித்து அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நான் அதிகாரிகள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது.

இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்திருக்கிறேன். என் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சியை சேர்ந்த நபர்கள் சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பி வருகிறார்கள். எங்களது ஆட்சியையும் என்னையும் குறை கூறும் நோக்கில் அவதூறு பரப்புகிறார்கள்.

ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு

என் தலைவர் முதல்வர் சொல்வது போல் என் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல தேவையில்லை. சமூகவலைதளங்களில் பரவி வருவது போல் நான் ஆபாச குறுஞ்செய்திகளை பகிர்ந்ததில்லை. மக்கள் அளிக்கும் மனு தொடர்பான தகவல்கள் மட்டுமே ஆட்சியரிடம் பரிமாறி இருக்கிறேன். என் மீது பொய்யான தகவலை பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்திருந்தார்.

ஆட்சியர் எதையும் சொல்லவில்லை

ஆனால் இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் எந்த பதிலையும் சொல்லவில்லை. இந்த சம்பவம் வெளியே வந்தது முதல் அவர் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரைவு வாக்காளர் பட்டியலை கூட செய்தியாளர்கள் இல்லாமலேயே ஆட்சியர் பத்மஜா வெளியிட்டிருந்தார்.

அரசு விழா

அது போல் அதற்கு முந்தைய நாள் கல்வராயன்மலையில் நிகழ்ந்த அரசு விழாவிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. நேற்றைய தினம் குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் வன்னியரசுவுடன் சிறிது நேரம் கலந்து கொண்டுவிட்டு பத்மஜா புறப்பட்டு சென்றார். அருள் விக்னேஷ் விவகாரம் குறித்து பத்மஜாவின் கணவரும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான அப்துல் ரகுமான், தலைமைச் செயலாளருக்கு புகார் அனுப்பியுள்ளார்.

மத்திய அரசுக்கு பத்மஜா கடிதம்?

இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. பொதுவாக ஆட்சியர்கள் ஏதேனும் புகார்கள் என்றால் முதலில் தலைமைச் செயலாளருக்கு தெரிவிப்பராம். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும் கடிதம் எழுதப்படுமாம். இதுதான் புரோட்டோகால் என்கிறார்கள். எனவே இந்த புரோட்டோகாலை பயன்படுத்தி பத்மஜா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பத்மஜாவிடம் அமைச்சர் வன்னியரசு சமரசம் பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை வன்னியரசு மறுத்திருந்தார். விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம்தான் நிற்கும் என தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *