இதன் எதிரொலியாக பட்டுப்பாயின் விலை ரூ.3,000-ல் இருந்து ரூ.4 ஆயிரம் வரை விலை உயர்ந்துவிட்டது. அதேபோல், சாதாரண பாயின் விலை ரூ.150-ல் இருந்து ரூ.200 வரை விலை உயர்ந்துள்ளது. இவ்வாறாக ரகம், கோரைப்புல்லின் தரம், வேலைப்பாடுகளைப் பொறுத்து ரூ.50- முதல் ரூ.1,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பத்தமடை பாயின் விலை உயர்வு குறித்து பத்தமடையைச் சேர்ந்த பாய் உற்பத்தியாளர்கள் சிலரிடம் பேசினோம், ”நெல்லையில் இருந்து சுமார் 29 கி.மீ., தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பத்தமடையில் ஆரம்பத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பத்தமடைப் பாய் நெசவு செய்வதை வாழ்வாதாரமாக கொண்டிருந்தனர்.

ஆனால், விலைவாசி உயர்வு, தொழிலாளர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பத்தமடையில் பாய்த்தொழில் தற்போது நலிவடைந்துள்ளது. இந்த பாய் உற்பத்தியில் சுமார் 300 குடும்பத்தினர் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது 50-க்கும் குறைவான குடும்பத்தினர் மட்டுமே பாய் நெசவில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்கள். அதிலும், கைத்தறி நெசவு செய்பவர்கள் 10-க்கும் குறைவானவர்களே உள்ளனர். பெரும்பாலும் தற்போது விசைத்தறிகள்தான் ஓடுகிறது. தமிழ் நாட்டில் பத்தமடை தவிர திருச்சி, கரூர், சீர்காழி, கொள்ளிடம், தஞ்சாவூர் உள்ளிட்ட பிற இடங்களிலும் கோரைப்பாய்கள் நெய்யப்பட்டு வந்தாலும்,” பத்தமடைப்பாய்” தான் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.