பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு “பி.எம் ஸ்ரீ’ பள்ளி திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது. இந்தப் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் நியமனம் குறித்து சி.பி.எம் எம்.பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய அரசு அளித்திருந்த பதிலை தன் எக்ஸ் பக்கத்தில் விரிவான பதிவாக வெளியிட்டிருக்கிறார்.
அவரின் பதிவில், “கொடுமை! 24,000 பேர் பேசும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க 6,100 ஆசிரியர்கள் நியமனம். ஏழு கோடி மக்கள் பேசும் தமிழை கற்பிக்க 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமனம். மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாகிவிட்டது.

இதுதான் பிரதமர் மோடி பெருமை பேசும் ‘பிஎம் ஸ்ரீ’ பள்ளியின் புள்ளிவிவரம். மும்மொழி என்பது இந்தி, சமஸ்கிருதத் திணிப்புதான். மாநில மொழி ஊக்குவிப்பு என்பது ஏமாற்று. அமைச்சர் பதிலில் அம்பலம்.
நான் நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தேன். பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் நாடு முழுக்க எத்தனை உள்ளன? அவற்றில் எத்தனை இந்தியல்லாத மொழிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்? என்று கேட்டிருந்தேன்.