தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற பரபரப்பு அடங்காத நிலையில், கோவை சிறையில் இருந்து ஒரு கைதி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக ராகவன் என்பவரை காவல் துறையினர் நேற்று மாலை கைது செய்தனர். அப்போது காவல் நிலையத்தில் இருந்து ராகவன் திடீரென தப்பியோடியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலர்கள் விரட்டிச் சென்று அவரை பிடித்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராகவனை, சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து ராகவன் மீண்டும் தப்பியோடினார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பந்தயசாலை காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஏற்கனவே தப்பியோட முயன்று பிடிபட்டவர் மீண்டும் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.