காஞ்சிபுரம்,டிச.28:
காஞ்சிபுரம் அருகே வெங்கச்சேரி கிராம பகுதியில் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை அருகே சனிக்கிழமை குளித்துக் கொண்டிருந்த பாட்டியும் அவரது பேரன்,பேத்தியும் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே கடம்பர்கோயில் கிராமத்தினை சேர்ந்தவர் மனோகரன் மனைவி பத்மா(55)இவரது மகள்கள் கலைச்செல்வி,சுதா ஆகியோர் சென்னையில் அயனாவரத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அரையாண்டு விடுமுறைக்கு தனது குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனது தாயார் பத்மா வீட்டுக்கு வந்துள்ளனர்.இந்த நிலையில் சம்பவ நாளன்று பத்மா தனது பேரக் குழந்தைகளான தீபக்(25)வினிசியா(10) ஆகியோருடன் கடம்பர் கோயில் அருகே வெங்கச்சேரி கிராம பகுதியில் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளனர்.
பேரக்குழந்தைகள் இருவரும் குளித்துக் கொண்டிருந்த போது வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து பாட்டி பத்மாகவும் அவர்களை காப்பாற்ற முயன்றதில் மூவரும் வெள்ளத்தில் மூழ்கி பலியானார்கள்.இவர்கள் மூவரையும் காப்பாற்ற முயன்ற இவர்களது உறவினரான வினோத்குமார்(44) என்பவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பாட்டி,பேரன்,பேத்தி மூவரும் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக உத்தரமேரூர் தியணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து 7 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினர் ஒரு மணி நேரமாக செய்யாற்று தடுப்பணையில் வெள்ளப்பகுதியில் தேடி சடலங்கள் ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வந்தனர்.சம்பவம் தொடர்பாக மாகறல் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து 3 பேரின் சடலங்களையும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஒரே நேரத்தில் பேரன்,பேத்தியும் அவர்களது பாட்டியும் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பது கடம்பர் கோயில் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.