நடிகை சமந்தா நடிப்பில், நந்தினி ரெட்டி இயக்கத்தில் வெளியான “மா இண்டி பங்காரம்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துத் தனது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்த சமந்தா, தற்போது தனது கர்ப்பகால வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார்.
திரைப்படங்களில் பிஸியாக இல்லாதபோதிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகத் தொடர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வரும் சமந்தா, சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “ நம்மால் இன்னும் மாற முடியும். பாலியல் தொழிலாளர்கள் தவறாகப் பார்க்கப்படும் இந்த உலகில், அவர்களைப் பயன்படுத்திக்கொள்பவர்கள் மீது குற்றம் சாட்டப்படுவதில்லை. தனியாக குழந்தையை வளர்க்கும் பெண் விமர்சிக்கப்படும் இடத்தில், பொறுப்பற்ற தந்தையர்கள் கேள்வி கேட்கப்படுவதில்லை.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் பழிக்கப்படுகிறார்களே தவிர, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. உண்மையை தைரியமாக வெளியே பேசுபவர்கள் தவறாகச் சித்திரிக்கப்படுகிறார்களே தவிர, அதை மூடி மறைப்பவர்கள் அந்தத் துயரத்தை அனுபவிப்பதில்லை.” எனத் தன் ஆதங்கத்தையும், சமூக மாற்றத்திற்கான விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.