மும்பை: உணவுப் பணவீக்கம் இருப்பதாகக் கூறி, இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நிதி கொள்கை விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்ததை அடுத்து, பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று தொடர்ந்து சரிந்து வர்த்தகமானது.
தொடர்ச்சியான அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க சந்தைகளில் பலவீனமான போக்குகள் ஆகியவற்றால் உள்நாட்டு பங்குகள் வீழ்ச்சியடைந்தது.
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 581.79 புள்ளிகள் சரிந்து 78,886.22 புள்ளிகளாக முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 180.50 புள்ளிகள் சரிந்து 24,117.00 புள்ளிகளாக முடிந்தது.
இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பு நிதியாண்டிற்கான மூன்றாவது, 2 மாத கொள்கையை அறிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவிகிதமாக வைத்திருக்க நிதி கொள்கைக் குழு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் பணவீக்கத்தை நிதி கொள்கைக் குழு கண்காணிக்கும் என்றார்.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாப் 30 நிறுவனங்களில் பவர் கிரிட், இன்போசிஸ், லார்சன் & டூப்ரோ, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து வர்த்தகமான அதே வேளையில் டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, டெக் மஹிந்திரா, ஐடிசி பங்குகள் உயர்ந்து முடிந்தது.
ஆசிய சந்தைகளில் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்ந்தும், சியோல் மற்றும் டோக்கியோ சரிந்தும் வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (புதன்கிழமை) சரிவுடன் முடிவடைந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (புதன்கிழமை) ரூ.3,314.76 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். கடந்த 4 நாட்களில் அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் ரூ.20,228 கோடி பங்குகளை ரொக்கச் சந்தையில் விற்பனை செய்துள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.17 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 78.46 அமெரிக்க டாலராக உயர்ந்தது.
புதன்கிழமையன்று மும்பை பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 874.94 புள்ளிகள் உயர்ந்து 79,468.01 ஆக முடிந்தது. காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,046.13 புள்ளிகள் உயர்ந்து 79,639.20 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 304.95 புள்ளிகள் உயர்ந்து 24,297.50 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக நேரத்தில் 345.15 புள்ளிகள் உயர்ந்து 24,337.70 புள்ளிகளாக இருந்தது.